Monday, December 28, 2015

சினிமா மோகமும் அரசியல் விழிப்புணர்வும்!


பணி முடிந்து நேற்று அறைக்கு சென்றிருந்தேன். அறை நண்பர்கள் எல்லாரும் ஐடித்துறையை சார்ந்தவர்கள். பங்களிக்காத விஷயங்களுக்கு கூட சட்டென எதிர்வினையாற்றும் இந்திய மனநிலையில் ஊறிப்போனவர்கள் அவர்கள். ‘என்ன மாமா கேப்டன் இப்புடி பண்ணிட்டாரே, உங்கள எவனும் மதிக்காட்டானுக போலஎன்று குத்தலாக பேச ஆரம்பித்தனர்.

என் அறை நண்பர்கள் மட்டுமல்ல, எல்லாருமே இன்றைக்கு ஊடகங்களை விமர்சிக்கிற ஆரோக்கியமான காலம் உருவாகியுள்ளது. ஆனால் விமர்சனங்களும் அவை முன் வைக்கப்படுகிற விதமும் எத்தனை ஆரோக்கியமானவை என்பது தான் கேள்விக்குறி.

நிருபர்கள் ஒன்றும் தப்பு செய்யாமலில்லை. மனோரமா இறந்த போது, கேபிள் கட் ஆகிவிட்டது என்று ஒரு விஐபியை 3-வது முறையாக மாலை வைக்கச் சொன்னது, அழகிரியை ஏர்போர்ட்டில் மடக்கியது, இளையராஜாவிடம் பீப் சாங் பற்றி கேட்டது, தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் சரத்குமாரை மடக்கி வியாபம் ஊழல் குறித்து கருத்து கேட்டது, அழகிரிய எப்போ சார் பிஜேபிக்கு கொண்டு வருவீங்க என்று நெப்போலியனை நெளிய வைத்தது, ஜி.ராமகிருஷ்ணனிடம் தா.பாண்டியன் பற்றி கேள்வி எழுப்பியது என்று ஏராளமான அபத்த கேள்விகளை கேட்கும் ஊடக நண்பர்களுடனான கூட்டத்தில் நானும் நின்று நொந்திருக்கிறேன்.

அதே நேரத்தில், மவுலிவாக்கத்தில் ஜெயலலிதாவை கேள்வி கேட்ட ஒரு நிருபர், அறிவாலயத்தில் நேர்மையான கேள்வி ஒன்றை ஸ்டாலினிடம் கேட்டு , திமுகவினரால் தாக்குதலுக்கு ஆளாகவிருந்த ஒரு நிருபர், வெள்ளத்தின் போது தென் சென்னையில் குவிந்திருந்த மொத்த கவனத்தையும் வட சென்னை பக்கம் திருப்பிவிட்ட ஒரு புகைப்படக்காரர் என்று அறம் சார்ந்து இயங்கும் ஊடகவியாலளர்களையும் கண்டு வியந்திருக்கிறேன்.

விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை. அதற்காக ஒரு அரசியல் கட்சி தலைவர்த்தூ என்று துப்புகிற அளவுக்கு ஊடகவியலாளர்கள் அவ்வளவு மோசமாகிவிடவில்லை. ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்க திராணியில்லையே என்று காரி உமிழும் விஜயகாந்திற்கு அரசியல் சார்ந்த ஒரு சுயநலம் இருக்கிறது. நிருபர்களுக்கு அப்படி ஏதுமில்லை.

8 சதவீத தமிழக மக்களின் ஆதரவோடு, 28 எம்.எல்..க்களை பெற்று, எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்துடன் சட்டப்பேரவையில் எத்தனை கேள்விகளை கேட்டிருக்கிறார் விஜயகாந்த். இந்தக் கேள்வியை பல முறை அவரிடம் ஊடகவியலாளர்கள் கேட்டிருக்கின்றனர். ‘அங்க போனா மட்டும் என்ன சார் நடக்க போவுதுஎன்று கோபமாகவும், சிரித்துக் கொண்டும், முறைத்துக் கொண்டும் ஒரே பதிலை வெவ்வேறு மாடுலேசனின் சொல்லி வந்த விஜயகாந்திடம், யாரும்த்தூஎன்று உமிழவில்லை.

நம்பி வாக்களித்த மக்களின் மூலம் கிடைத்த வாக்கு வங்கியை காட்டி ரகசியமாக கூட்டணி பேச்சுவார்த்தைகளை(?) நடத்தி தேர்தலுக்கு முதல் வாரத்தில் கூட்டணியை அறிவிக்கின்ற விஜயகாந்தும் ஒரு ஊடக முதலாளியே. இதுவரை இருந்தவர்களுக்கெல்லாம் மாற்று என்று கட்சி ஆரம்பித்த விஜயகாந்த், இப்படிப்பட்ட மாற்றங்களை தமிழக அரசியல் வெளியில் தருவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அடுக்குமொழியில் பேசி பொதுமக்களை ஏமாற்றிய அரசியல்வாதிகளுக்கு மத்தியில், மனதில் பட்டதை அப்படியே பேசுகிறார் விஜயகாந்த் என்று ஆதரிக்கிறவர்கள், மனதில் பட்டதை பாடிய சிம்புவை வறுத்து எடுத்தது ஏன்? மனதில் படுவதையெல்லாம் எல்லோரும் பேச ஆரம்பித்தால் இன்னொரு உலகப்போரே மூண்டுவிடும்.

ஒரு தந்தையாக மகனின் படத்துக்கு லொக்கேசன் பார்க்க மலேசியா, சிங்கப்பூர் என்று பல முறை பறக்க முடிந்த விஜயகாந்தால், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் மக்கள் பிரச்சினைக்காக கடந்த நான்காண்டுகளில் ஒருமுறை கூட சட்டப்பேரவைக்கு செல்ல முடியவில்லை. அண்ணா, கருத்திருமன், எஸ்.ஆர்.பி, மூப்பனார் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களைக் கண்ட தமிழக சட்டப்பேரவை வரலாற்றில், செயல்படாத ஒரு எதிர்க்கட்சித்தலைவராக வலம் வந்த விஜயகாந்த் நேற்று காரி உமிந்தது ஒரு நிருபர்கள் மீது மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் இன்றைய கட்டமைப்பின் மீது.

தமிழக மக்களின் அரசியல் விழிப்புணர்வு சினிமா மோகத்திலிருந்து கட்டமைக்கப்பட்டதன் விளைவு தான் செம்பரம்பாக்கம் ஏரி கொடுமைகளும், காரி துப்பும் நிகழ்வுகளும். இதை நாக்கை பிடுங்கிக் கொண்டு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.


No comments:

Post a Comment