Friday, November 27, 2015

‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை கொண்டாடுகிறதா நம் அரசு


“‘ஸ்டார்ட் அப்' (புதிதாகத் தொடங்கப்படுகிற சிறு நிறுவனங்கள்) என்பது எனது மனதுக்கு நெருக்கமான ஒன்று. நான் குஜராத்திலிருந்து கடந்த ஆண்டு டெல்லி வந்தபோது, எனது தலைமையிலான அரசை ஒரு ஸ்டார்ட் அப் என்றே நினைத்தேன். ஸ்டார்ட் அப் என்பது முன்னேற்றத்துக்கான இன்ஜின். இன்று இருக்கும் பல பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஸ்டார்ட் அப் ஆகவே ஆரம்பிக்கப்பட்டவை!"

அமெரிக்காவுக்குச் சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக வேண்டும் என்பதற்காக சான் ஜோஸ் நகரில் பேசிய வார்த்தைகள்தான் மேலே இருப்பவை.

இந்தியாவின் மெட்ரோ நகரங்களான டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை தவிர பெங்களூரு, ஹைதராபாத்தில் ஒவ்வொரு எம்.என்.சி. நிறுவனங்களையொட்டி லட்சக்கணக்கான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருக்கின்றன. தனது அரசையே ஒரு ஸ்டார்ட் அப் என்று அடையாளப்படுத்திக்கொண்டு பெருமைப்படுகிற மோடி, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக என்ன செய்தார், சுதந்திரம் அடைந்த இத்தனை ஆண்டுகளில் புதிதாக உருவாக்கப்பட்ட திறன் மேம்பாட்டு அமைச்சகம் என்ன செய்தது என்று ஸ்டார்ட் அப் நிறுவனங்களை நடத்தி வரும் சிலரிடம் பேசிய போது, ‘மோடி பேச்சு, காத்தோட‌ போச்சு' என்கின்றனர் அவர்கள்.

இது தொடர்பாக 4 ஆண்டுகளாக ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும், வெல்கினிடம் பேசினோம். ரொம்பவே சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார் அவர். பேப்பர் போடும் பையனுக்கு இணையாகத் தனது தயாரிப்புகளைக் கொண்டுசேர்க்கக் கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கிறார்.

கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போதே அவருக்குச் சம்பளத்துக்குப் பணிக்குப் போக ஆசையில்லையாம். அவரைப் போலவே, மன நிலை கொண்ட சிலர் இணைந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தனர். இன்றைக்கு ஓரளவு போய்க்கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு ரூ.20 லட்சம் டர்ன் ஓவர் என்கிறார் வெல்கின். ஆனால், 2 லட்சம் கடன் கேட்டால் பொதுத்துறை வங்கியிலிருந்து உள்ளூர் வட்டிக்கடைக்காரர் வரை ‘போய்ட்டு வாப்பா' என்கின்றனராம்.

"ஸ்டார்ட் அப் என்பது பலருக்குக் கனவாக உள்ளது. கஷ்டப்பட்டு ஒரு நிறுவனத்தைத் தொடங்கி ஒரு புராடக்ட்டை உருவாக்கினால், அதனைச் சந்தையில் கொண்டு சேர்ப்பதற்கு ஒரே நேரத்தில் 10 பிரசவ வலியை அனுபவிக்கும் துன்பங்கள் துரத்தியடிக்கும். அதையும் செய்து முடித்தால், கிளையன்ட்டுகளைக் குழப்பி விட கன்ச‌ல்டன்ஸிக்காரன் ஏதாவது புது உத்தியைக் கையாளுவான். இதற்குப் பயந்தே பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புக்கான சந்தை விலையில் 80 சதவீதத்தை கன்சல்டன்சிகளுக்குக் கொடுக்க வேண்டிய அவல நிலையும் உள்ளது" என்கிறார் வெல்கின்.

அரசுத் தரப்பிலிருந்து இதற்காக எந்த ஒரு உதவியும் கிடைப்பதில்லை. வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகப் பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கும் அரசு, தன்னம்பிக்கையாலும், லட்சியத்துடன் புதிய நிறுவனங்களைத் தொடங்குகிற இளைஞர்களுக்குப் பெரிதாக எதுவும் செய்வதில்லை என்பது ஐ.டி. நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் பிரபுவின் குற்றச்சாட்டு.

அவர் மேலும் கூறும்போது, "சினிமா சான்ஸுக்காகப் பையைத் தூக்கிக்கொண்டு வருபவர்களை எப்படி சிலர் ஏளனம் செய்வார்களோ அதேபோலத்தான் ஸ்டார்ட் அப் என்று யோசனைகளை ஃபைல்களில் அடக்கி எடுத்துச் செல்பவர்களையும் இந்தச் சமூகம் பார்க்கிறது. குடும்பத்தில்கூட ஸ்டார்ட் அப் என்று பேச்செடுத்தாலே ‘உருப்படுற வழிய பாரு' என்று வசை வார்த்தைகள் விழுகின்றன. இதற்காகவே ஸ்டார்ட் அப் வேண்டாம் என்று மாதச் சம்பளத்துக்கு எம்.என்.சி. சுழலில் சிக்கிக் கொள்கிறார்கள் பல இளைஞர்கள்" என்கிறார் பிரபு.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு என்று பெரிய கெடுபிடிகள் இருக்கக் கூடாது. ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதற்கான விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும். வங்கியில் சென்று கடன் கேட்டால் தராவிட்டாலும் பரவாயில்லை. எங்களின் எண்ணங்களைக் கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசக் கூடாது என்று சொல்லும் வெல்கின், "பிரதமர் சொன்ன ‘மேக் இன் இந்தியா', ‘டிசைன் இன் இந்தியா' எல்லாமே வெளிநாட்டுக்காரர்களுக்குத்தான். நாம் நிலத்தையும் வளத்தையும் கொடுத்துவிட்டு குறைந்த ஊதியத்துக்கு உத்தரவாதமின்றி பணி செய்ய வேண்டும்" என்கிறார்.

நாஸ்காம், சி.ஐ.ஐ. போன்ற அமைப்புகள் அவ்வப்போது ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வெளியில் கொண்டு வருவதற்காகச் சில மாநாடுகளை நடத்துகின்றன. ஆனால் அவை மட்டுமே போதாதே!
தனது அரசையே ஸ்டார்ட் அப் நிறுவனம் என்று சொன்ன பிரதமர், நாட்டிலுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அனைத்தையும் குறைந்தபட்சம் ஒரு நகராட்சி அளவுக்காவது முக்கியத்தும் கொடுத்துக் கவனித்தால் போதும் என்பதுதான் அந்நிறுவனங்களை நடத்துவோரின் எதிர்பார்ப்பு.
- மணிகண்டன்
நன்றி : தி இந்து.

No comments:

Post a Comment