Tuesday, October 13, 2015

எதுவும் கடந்து போகும்!!


சென்னை ஈசிஆரில் ஷேர் ஆட்டோ ஓட்டுகிற ட்ரைவர்கள் மிகுந்த பெருந்தன்மைக்காரர்கள். ஆட்டோவில் ஏறுகிற பயணி ஒருவருக்கு தங்களது இருக்கையையே பகிர்ந்தளிப்பார்கள். ஆட்டோவில் ஏறும் முதல் அல்லது கடைசி ஆளுக்கு அந்த பாக்கியம்(?) கிடைக்கும். ட்ரைவர் இருக்கையில் ஒன் சைடாக அமர்ந்து சைடு கம்பியை பிடித்துக் கொள்ள வேண்டும். நேற்றிரவு அந்த பாக்கியம் எனக்கு கிடைத்தது.

திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகிலிருந்து புறப்பட்ட ஆட்டோ, அடுத்த சில நிமிடங்களில் மருந்தீஸ்வரர் கோயில் பக்கமாக நின்றது. சாலையை அடைத்துக் கொண்டு ஒரேக்கூட்டம். கூட்டத்தின் இடுக்கில் புகுந்து ஆட்டோ டிரைவர் சாமர்த்தியமாக முன்னேறினார். கூட்டத்திலிருந்து வேகமாக ஓடி வந்த ஒருவர், ‘லவ் மேட்டருபா. பயல, சாத்து சாத்துனு சாத்துறானுக’ என்றவாரு ஆட்டோவில் தொற்றிக் கொண்டார்.

சென்னையில் இப்போதெல்லாம் சினிமா சூட்டிங் நடந்தால் கூட கூட்டம் கூடுவதில்லை, ஆனால், யாரையாவது போட்டு மிதிக்கிறார்கள் என்றால் மொத்த பேரும் அசம்பிள் ஆகி விடுகிறார்கள். இதே மாதிரியான காட்சிகளை பூக்கடை அருகிலும், புரசைவாக்கம் மேகலா தியேட்டர் வாசலிலும், தி.நகர் பக்கமும் பல முறை கண்டிருக்கிறேன். யாராவது அம்பி விக்ரம் மாதிரி ஆள் வரும் வரை, சிக்கும் நபர் சின்னா பின்னமாகிக் கொண்டிருப்பார்.  காவல் துறை  நிச்சயம் வராது. சினிமாவிலாவது கடைசியாக வந்து நீ பாத்தியாயா  என்பார்கள். நிஜத்தில் அதுக்கூட இல்லை.

திருவான்மியூரில் அடி வாங்கியவருக்கு காதல் பிரச்சினை என்றதும், மனசு பல கோனங்களில் படபடக்க தொடங்கியது. அந்தப் பெண் எங்கே இருக்கிறார். சாதி பிரச்சினையா, கள்ளக் காதலா, டார்ச்சர் செய்ததால் வந்த வினையா என்று என்னன்னமோ யோசிக்க தோன்றியது. இப்படி அடிப்பதோடு விட்டுவிடுவார்களா இல்லை, இளவரசன் , கோகுல்ராஜ் போல ஏதாவது ஆகிடுமா என்றெல்லாம் அலைபாய்ந்தது மனசு.

அந்த பெயர் தெரியாத வாலிபரை பார்த்த போது, ஜெயவேலின் ஞாபகம் தான் வந்தது. தஞ்சை வாண்டையார் கல்லூரியில்  பி.எஸ்சி பாட்டனி படித்துக் கொண்டிருந்த ஜெயவேல், ஒரு முறை பட்டுக்கோட்டை சென்ற போது, மேல உளூர் அருகே பஸ்ஸை தேக்கி  ஒரு கும்பல் ஜெயவேலை கீழே இறக்கி பிய்த்து எடுத்துவிட்டது. அந்த ஊரைச் சேர்ந்த சக மாணவியை காதலித்ததால் உறவுக்காரர்கள்  கதக்களி ஆடினார்களாம்.

அப்போது நான் 12-வதில் இருந்தேன். ஜெயவேலுக்கு இப்போது 30–ஐ தாண்டிவிட்டது. உறவுக்கார பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு திருச்சியில் செட்டில் ஆகிவிட்டார். சமீபத்தில் பேசும் வாய்ப்பு கிடைத்த போது, அந்த பி.ஏ ஹிஸ்டரிக்காக அவர் வாங்கிய அடிபற்றி கேட்டேன்.  

‘12 வயசுல பேட்டு வாங்கிறதுக்கு அப்பா பாக்கெட்டிலேர்ந்து 180 ரூவா திருடுனதுக்கு வீட்டுல தொவை தொவைனு தொவைச்சாய்ங்க, அதுவே 22 வயசுல ஒரு புள்ளையவே தூக்க நெனச்சேன், அந்த புள்ளை வீட்டுக்காரனுக பிச்சானுக. ஆசை வயசுக்கேத்த மாதிரி மாறுது, அதுக்கேத்த மாதிரி அனுபவிக்க வேண்டியிருக்கு’ என்று புத்தன் ரேஞ்சுக்கு பேசினார்.

இங்கே எல்லோருமே ஒரு விஷயத்தை பெறுவதற்கு கடினமாகவே போராடுகிறோம். ஆனால்,  போகப் போக வேறு ஒன்று நம் கைகளில் வந்து விழுகிறது அல்லது திணிக்கப்படுகிறது. ஏரோநாட்டிகல் படிக்க வேண்டும் என்று 9-ம் வகுப்பில் வீடெல்லாம் விமான படங்களை ஒட்டிய நான்,  +2 முடித்ததும் கெமிக்கல் என்ஜினியரிங்குக்காக அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங் ஹாலில் மல்லுக்கட்டி நின்றேன். காலமோ கணினி பொறியியல் வழியாக பத்திரிகை துறைக்குள் நுழைத்தது.

நமக்கு ஒன்று வேண்டும் என்பதற்காக நாம் நடத்திய போராட்டங்களை கொஞ்சம் திரும்பி பார்க்கிற போது, அவற்றின் மீது காலம் அலட்சியமென்னும் அழிப்பானை வீசியிருப்பதை உணரலாம். இன்னமும் நாம் எதற்காகவோ போராடிக் கொண்டிருக்கிறோம், காலம் அழிப்பான் என்னும் சாட்டையை சுழற்றிக் கொண்டு காத்திருக்கிறது.

எதுவுமே கடந்து போகும்!!

-மணி
13-10-2015


No comments:

Post a Comment