Friday, July 24, 2015

கடுகுக்கு குண்டூசி செக்யூரிட்டி..சென்னைக்கு வந்த இந்த 2 ஆண்டுகளில் டூ-வீலர் வாங்குவது என்பது பெருங்கனவாக இருந்தது. வண்டி இல்லாத தினசரி பத்திரிகைக்காரர்களின் நிலை, விரல் இல்லாத வேடனின் நிலையை போன்றது என்றால் அது மிகையாகாது.

வாங்குகிற சம்பளம் வாய்க்கும், வாடகைக்குமாய் தேய்கிறது. கைக்காசினை போட்டு டூ-வீலர் வாங்குவது என்பது இப்போதைக்கு சாத்தியமில்லாத ஒன்று. எனவே வாகன கடனுதவிக்காக சம்பள கணக்குள்ள எச்.டி.எஃப்.சி. வங்கியை அனுகினேன். “வெல்கம் சார்உங்களுக்கு 1.70 லட்சம் வரை லோன் எலிஜிபிலிட்டி இருக்கு. அப்பிடியே போட்டுறலாமாஎன்றார்கள்.

அவ்வளவெல்லாம் வேண்டாம்,ஒரு 60 ஆயிரம் போதுமென்றேன். 2 வருடம் இஎம்ஐ சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்வது என்று ஒப்பந்தம். செக் லீஃப், செக்யூரிட்டி, அந்த ஃபார்ம், இந்த ஃபார்ம், பிளட் ரிலேஷன், நான் பிளட் ரிலேஷன் விவரம் என்று எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டார்கள். ஒரு வாரம் ஆகியும் அழைப்பேதும் இல்லை. என்னவென்று கேட்டால், உங்களது சிபில் பாய்ண்ட் குறைவாக உள்ளது என்று கூறி கையை விரித்துவிட்டார்கள்.

யோவ்.. என்ன நெனச்சுட்டு இருக்க என்னோட டாக்குமெண்டெல்லாம் வாங்குன அப்பிடி இப்பிடிஎன்று முஷ்டியை முறுக்கினேன். உங்கள் பெயரில் இந்தியன் வங்கியில் 60 ஆயிரம் எஜுகேஷனல் லோன் இருக்கிறது என்று வாயை அடைத்தார்கள். உண்மை தான். என்ஜினியரிங் படிப்பதற்காக வாங்கியது.

கடந்த 2009-ம் ஆண்டு 1.44 லட்சம் வாங்கிய கல்விக்கடனை கொஞ்சம் கொஞ்சமாக கட்டி இப்போது 60 ஆயிரமாக குறைத்துள்ளேன். சொல்லப்போனால் அந்த கடன் தொகையில் 60 சதவீதம் கட்டியாயிற்று. எனினும், சிபில் பாய்ண்ட் குறைவாக இருப்பதாக கூறுகிறார்கள்.

ஆனால், பல ஆயிரம் கோடி கடன் வைத்துள்ள மல்லையாவுக்கும், அதானிக்கும் அரசாங்கமே பேசி மேலும் கடன் வாங்கி கொடுக்கிறது. அவர்களுடைய சிபில் பாய்ண்ட் என்னவென்று தெரியவில்லை. சாமானியன் கடுகு வாங்க வேண்டுமென்றால் குண்டூசியை செக்யூரிட்டியாக கேட்பவர்கள், மல்லையாக்கள் விமானம் வாங்க வேண்டுமென்றால், எலிகாப்ட்டரையும் சேர்த்து கொடுக்கிறார்கள். இது தான் நமது கட்டமைப்பு.

Sunday, July 19, 2015

நாயகர்களுக்கான காலத்தில் நாம்....சுதந்திர இந்தியாவின் மிக மோசமான ஆட்சி என்று வர்ணிக்கப்பட்டது மன்மோகன் சிங்கின் ஆட்சி காலம் தான். விவசாயிகளுக்கு எதிரானது, கார்ப்பரேட்களுக்கான ஆட்சி, மக்கள் விரோத விரோத ஆட்சி என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கிய பாஜக மோடியை சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் அளவுக்கு எக்ஸ்போஸ் செய்தது. நாமும் நம்பினோம். நாம் என்றால் இதை படிப்பவர்களும், இதை எழுதிய நானும் மட்டும் அல்ல. ஒட்டு மொத்த இந்தியாவி பெரும்பான்மையை சொல்கிறேன். நாம் ஆதரித்தோம்.

நிச்சயம் காவிரிக்காக கர்நாடகாவை கெஞ்ச தேவையில்லை என்று நினைத்தோம். ஈழத்தில் அமைதி வரும் என்று நம்பினோம். கருப்பு பணத்தை மீட்டு ஆளுக்கு 15 ஆயிரமெல்லாம், வேண்டாம். உள்ள ஊழல்களை ஒழித்தால் போதுமென்று தான் எதிர்பார்த்தோம். மோடி நல்லவர் என்ற பொது புத்தியை பெரும்பான்மையானோரிடம் ஒரு 15 மாதத்தில் கட்டமைத்துவிட்டார்கள்.அதில் நமக்குமே பங்கிருக்கிறது.

அத்தனை சூத்திரங்களும் எடுபட்டன. பாஜக ஆட்சிக்கு வந்தது. முதல்முறை  மக்களவை உறுப்பினரான மோடி இந்தியாவின் பிரதமர். ஆனால் அதற்கு பிந்தைய ஓராண்டு காலம், இடைவெளிகளாலும், மெளனத்தினாலுமே நகர்கிறது.

வெளிநாடுகளும்,கார்ப்பரேட்களும் இந்தியாவை காப்பாற்றும் என்ற நம்பிக்கை துளி கூட விவசாயிகள் மீதும், இளைஞர்கள் மீதும் அரசுக்கு இல்லை. நான் இதை எழுதிக் கொண்டிருக்கும் போதே எனது நிலம் கையகப்படுத்தப்படாலாம். ஆட்சி அமைந்த 100 நாட்களில் வாக்குறுதிகளை செயல்படுத்த அமைச்சர்கள் எல்லாம் அவகாசங்கள் கேட்டனர்.

இதோ ஒராண்டுக்கும் மேலாகிவிட்டது. எதுவும் நடந்தபாடில்லை.
நம்மூர் அரசியல் வாதிகள் எதை கற்று வைத்துள்ளார்களோ இல்லையோ அவர்களை எப்படி மார்க்கெட்டிங் செய்வது என்பதை மட்டும் நன்றாகவே கற்று வைத்துள்ளனர்.

நான்கு வருடங்களாக சிங்கப்பூர் மலேசியா என்று பறந்த விஜயகாந்துக்கு இப்போது தான் விவசாயிகள் நினைவுக்கு வந்துள்ளனர். பத்திரிகைக்காரர்கள் மீது மைக்கை தூக்கி அடிச்சுருவேன் என்று சொல்லும் அவருக்கும், டெல்லியில் பத்திரிகைகள் மீதான பிடியை இறுக்கிய பெரும் போராளியான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறதென்றே புரியவில்லை.

இதோ இங்கே மாற்றம் முன்னேற்றம் என்று போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. மிகப்பெரிய அரசியல் இயக்கமான திமுக தனது இணையதளத்தை புதிப்பித்து மறு அவதாரம் எடுக்க துடிக்கிறது.

இதுவெல்லாம் ஒன்றே ஒன்றைத்தான் உணர்த்துகின்றன.

‘பிராண்ட் பில்டிங்’.

நிச்சயம் இது நல்லவர்களுக்கான காலம் அல்ல.நாயகர்களுக்கான காலம்.