Sunday, February 1, 2015

அன்பாலானது உலகு…    மிக கவனமாக நடந்து சென்ற போதும் முள் ஒன்று பாதத்தை தைத்தது. அத்தனை பாதுகாப்பாய் இமைகளை மூடிய போதும் கண்களை கூசிச்சென்றது அந்த பேரொளி. அத்தனை தற்காப்பு உணர்வையும்  ஒருங்கிணைத்தும் நேர்ந்தே தீர்ந்தது அந்த விபத்து. பாறைகளின் வன்மையை கொண்ட இதயத்தை பெற்ற மனிதர்களுக்கும் காதல் கசிந்த கனத்தில், இத்தனை நடந்தேறின.

   சென்னையில் வாழும் பெரும்பாலான அசலூர்க்காரர்கள், சொந்த ஊரின் நினைப்பு வரும்போதெல்லாம் மயிலாப்பூர் செல்லலாம். குறிப்பாக டாங்க் பஸ் நிறுத்தத்திலிருந்து ராமகிருஷ்ணர் மடம் சாலை, சாய் பாபா கோயில் கபாலீஸ்வரர் கோயிலின் மாட வீதிகள் என குறுக்கும் நெடுக்குமாய் நடக்கிற போது, ஊரில் ஞாயிறு சந்தைக்குப் போய் வருகிற உணர்வு ஏற்பட்டேத்தீரும்.

   பகலெல்லாம் நல்ல வெயில், என்ன நினைத்ததோ மேகம் அந்தியில் பூமியை நோக்கி மழையைத் தூவியது. நடைபாதை வியாபாரிகளுக்கு சற்று முன்னதாகவே விடுமுறை விட்டது வானம். மழை கொஞ்சம் வேகமெடுக்க ஆரம்பித்தது. மயிலை இந்தியன் பேங்க் அருகே, குடை கம்பி சீர் செய்யும் கடை போட்டிருந்த அந்த பெரியம்மா, உடைந்த குடைகளையும், இரும்பு சீவாங்குச்சிகள் போன்ற கம்பிகளையும் மழையிலிடமிருந்து காப்பாற்ற கோணிக்குள் அடைத்து கொண்டிருந்தது.

எங்கிருந்தோ வந்தார் அவர், கொஞ்சம் தள்ளாட்டம். மழை இன்னும் வேகமெடுத்தது. ‘எங்குட்டு போறே, எங்குட்டு வாரண்டே தெரியல, ச்சாய்ங்காலம் 5 மணியானா அத குடிச்சுட்டு வந்துர்ர’ என்று அவரை அதட்டியது அந்தம்மா. இருவரும் அறுபதுகளை தாண்டிய தம்பதி. என்ன நினைத்தாரோ அந்த நபர், கோணிக்குள் கையைவிட்டு ஒரு உடைந்த குடையை எடுத்து, ஒரு குலுக்கு குலுக்கினார். குடை குட்டி வானம் போல்  விரிந்தது.  விரிந்த குடையை தன் மனைவியின் தலைக்கு மேல் பிடித்தார். ஒரு நொடி தான், அந்தம்மா அத்தனை பூரிப்போடு,  ‘ஏன் ராசாஆஆஆஆ….’ என்று அவர் முகத்தை கையால் உருவி முத்தமிட்டது.

  பெருநகரின் அடர்மழையில், அரங்கேறிக்கொண்டிருந்தது ஒரு எளிய காதல். அது மட்டுமல்ல, லஸ் கார்னர் சிக்னலோரம் மழைக்கொதுங்கிய ஜோடியொன்று மழை பிடித்து, மழை தூவி விளையாடியது. சாய்பாபா கோயிலுக்குச் சென்று திரும்பிய புதுமணத்தம்பதியொன்று, மழையிடமிருந்து தப்பிக்க, வெங்கடேஸ்வரா பாத்திரக்கடையின் தாழ்வாரம் ஓரம் கண்களால் சிரித்துக் கொண்டிருந்தது. ‘நெருப்புத்துண்டங்களா விழுகின்றன மழை தானே’ என்பது போல்,  ஒரு வடகிழக்கு மாநில ஜோடி, ஜோராய் மழையை நனைத்து சென்றது.
கொஞ்ச நேரத்தில் மழை ஓய்ந்தது.

   கடாபியை லிபிய மக்கள் அடித்ததை போலவே, ஒரு இளைஞனை பிடித்து ஆக்ரோஷத்துடன் அடித்ததுக் கூட்டம். யாரோ ஒருவரின் ஸ்மார்ட் போனை லவட்ட முயன்றானாம். கொஞ்ச நேரத்தில் காவல்துறையும் வந்தது. தலைமுதல் கால் வரை வயிறை மட்டுமே கொண்ட அந்த அதிகாரி தன் பங்குக்கு இரண்டுவிட்டு இழுத்துச்சென்றார். லேப்டாப்பும், ஸ்மார்ட்போனும் நனையாமல் இருக்கிறதா என்று பார்த்தபடியே கலைந்தது கூட்டம்.

  'அல்சர் தம்பி நாலு ரூவா அம்பது காசு இருந்தா தாயேன்யா' என்று வயதான ஒருவர் மாதத்தின் முதல் வாரத்தில் கை நீட்டினால், யார் தான் வள்ளலாகமாட்டார்கள். சைதாப்பேட்டை மாந்தோப்பு ஸ்கூல் ஸ்டாப்பிங்கில், தலையை சொரிந்தபடி, அல்சர் மாத்திரை வாங்க நாலம்பது இருந்தா கொடு என்று ஒரு பாட்டி கேட்டதும் எடுத்து நீட்டினேன்.

   இன்னும் சிலரிடமும் அதையே சொல்லி காசு கேட்டது. ‘நேத்து தான் சுகர் டெஸ்ட் பண்ணனும்னு காசு கேட்ட, இன்னைக்கு அல்சருங்கிற போமா’ என்று சிலர் அதட்டினார்கள். கடும்பாடி அம்மன் கோயில் முக்கில் அந்த அம்மா தனது ஜாக்கெட்டிலிருந்து சில பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்தது. கொஞ்ச நேரத்தில் அம்மா உணவகத்துக்குள் காலை உணவையும் முடித்து கண்களை சுருக்கி வெள்ளந்தியாய் சிரித்து நகர்ந்தது.

   ‘அந்தம்மா, புருஷன் போய்ட்டான். ஒரு பையன் மட்டுந்தான், அவன் மேல நெறயா கேஸு. இதக்கண்டுக்கிறதுல்ல. அதான் இது இப்படி மத்தவங்கள ஏமாத்தி வயித்த கழுவுது’ என்று அருகிலிருந்தவர் கூறிய போது, மயிலையில் தர்ம அடி வாங்கிய இளைஞனின் சாயல் இந்தம்மாவுக்கு இருந்ததை உணர முடிந்தது. நான் நிச்சயம் ஏமாறவில்லை. அந்தம்மா, இந்த உலகையே தன் பிள்ளையாய் தத்தெடுத்துக்கொண்டுவிட்டது.

  பசிக்கு, இப்பிரபஞ்ச பிள்ளையிடம் உரிமையுடன் கையேந்துகிறது. அதனிடம் நமக்கென்ன கோபம். ஒபாமா வந்து அணு சக்தி ஒப்பந்தம் போட்டு போன போதும், 2 ஜி, காமன்வெல்த், நிலக்கரி, சவப்பெட்டி என ஊழல்கள் வெடித்த போதும் கோபமா பட்டோம்??


-                                                            - ---மணி 02-01-2015 

No comments:

Post a Comment