Wednesday, December 17, 2014

நாம் தான் இந்தியர்கள்....


பேருந்து பள்ளிக்கரணையை தாண்டியிருந்தது. வேளச்சேரி மேம்பாலத்திலிருந்து பேருந்து இறங்கும் நேரத்தில், சடேரன பிரேக்கில் ஏறி நின்றார் ஓட்டுநர். சாலையில் ஒரு கும்பல் ஒரு இளைஞனை துரத்தவே, அவன் குறுக்கே விழுந்திருக்கிறான். நல்ல வேளை, பேருந்தின் வேகம் குறைவென்பதால், பிரேக்கிற்கு கட்டுப்பட்டன சக்கரங்கள்.

பேருந்திலிருந்து இறங்கி ஓடிய சிலர், அந்த இளைஞணை அடிக்க துரத்தினார்கள். சிலர், சட்டையை கூட பிடித்து விட்டனர், அந்தப்பக்கமாக போன பெரியம்மா ஒருவர்,  ‘எவமுட்டு புள்ளையோ, யாண்டா அத அடிக்க இத்துன பேரு பாயுறீக’ என்று அதட்டியது. கூட்டம் கலைந்தது. அந்த இளைஞன், ஏதோ ஏதோ இந்தியில் பேசியபடி மீண்டும் ஓடத்தொடங்கினான்.

என்னவென்று விசாரித்ததில், அந்த இளைஞனின் பெயர் சஞ்சுவென்றும், ஏதோ தள்ளுவண்டியில், பாதாம் பால், ஐஸ்கிரீம் கடை போட்டு பிழைப்பு நடத்தி வருவதாகவும் கூறினர். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மேலாக வேளச்சேரியில் பிழைப்பு நடத்தி வந்த அவனுக்கு ஒரு பீப் ஸ்டால் மூலம் சோதனை வந்திருக்கிறது.

ஆதம்பாக்கத்தை சேர்ந்த இரண்டு பேர் சஞ்சு தள்ளு வண்டி நிறுத்துகிற இடத்தில் புதிதாக பீப் ஸ்டால் ஆரம்பித்துள்ளனர். இதுபற்றி அவர்களிடம் அவன் கேட்க போகவே,  ‘எங்க ஊருக்கு பொழைக்க வந்துட்டு எங்களையே கேள்வி கேக்குறியா’ என்கிற ஷாக்கில் விரட்டியடித்துள்ளனர். சஞ்சு தனது ரெகுலர் கஸ்டமர்கள் சிலரின் உதவியின் பேரில் வேளச்சேரி காவல்துறையை தொடர்பு கொள்ளவே, பீப் கடை போட்டவர்கள் வெட்ட வேண்டிய இடத்தில் வெட்டி, துட்ட வேண்டிய இடத்தில் துட்டிவிட்டனர். இதன் வெளிப்பாடாக அந்த பீகார் சிறுவனை அடித்து விரட்டியிருக்கின்றனர்.

‘உள்ளூருக்குள் ஒரு இந்திக்காரன் கடைபோடலாமா’ இந்த ஈகோ ஒரு பாலைவனத்து சிறுவனை அடித்து விரட்டியிருக்கிறது. சஞ்சு கடை போட்டிருந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ளது கே.எஃப்.சி, அங்கிருந்து இரண்டு தப்படி கிழக்கு பக்கமாக திரும்பினால் அங்கே இரண்டு மாடி கட்டிடத்தில் இயங்குகிறது மெக்டோனால்ட். சஞ்சு என்றவன் துரத்தியடிக்கப்பட்ட நேரத்தில் அந்த வெளிநாட்டு கடைகளி சிக்கன் லாலிபாப்பும், பட்டர் பீஸாவும் பரபரப்பாக விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன. தமிழர்கள் மட்டுமல்ல, அசண்டாஸ், சி.எல்.ஆர்.ஐ, ஐடி பார்க்கில் வேலை பார்க்கும்  வட இந்தியர்கள் கூட அங்கு தான் சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள்.

தலைமுறைகள் மாறிவிட்டது நமது ஜீன்களில் இருந்த உணர்வு மட்டும் போகவில்லை. வெள்ளைக்காரனுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ற நாம், நமக்குள் அடித்துக்கொண்டே 300 வருடங்களுக்கு மேல் இந்த தேசத்தை அடகு வைத்திருந்தோம், இப்போதும் ஸ்டைலீஷாக கியூவில் நின்று சிக்கன் ஹாட் விங்க்ஸ், எக்ஸ்ட்ரா க்ரிஸ்பி போன்றவற்றை ஆர்டர் செய்துக்கொண்டிருக்கிறோம். இதுமட்டுமல்ல, லூயிஸ் பிலிப், போலோ, என்று பிராண்ட் என்ற பில்டப் விட்டுக்கொண்டிருக்கிறோம். அந்நிய முதலீட்டை கூவி கூவி அழைக்கிறது அரசாங்கம்.

சஞ்சுவை விரட்டியடித்தவர்கள் சட்டை பையில் மக்களின் முதல்வர் படமோ, தங்கத்தளபதி படமோ இருந்திருக்க கூடும். சஞ்சுவின் சட்டைப்பைக்கு கீழ் பசி மட்டும் தான் இருந்தது. அந்த சிறுவன் இந்தியில் பேசிக்கொண்டே ஓடியது காதில் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. அந்த பாஷை புரியவேயில்லை. ஆனால், அதன் சப்தம்,  ‘என்னடா உங்க தமிழ்நாடு வந்தவன வாழவைக்கும்னு பினாத்துறீங்களே, இது தான் உங்க லட்சனமா என்றே அவன் பேசியதாக புரிகிறது.


நாம் தான் இந்தியர்கள்…. 

-மணிகண்டன் 
17/12/2014

No comments:

Post a Comment