Saturday, October 18, 2014

பரிசுத்தமென்பது!!


கர்நாடக நீதிமன்றம் போட்ட விலங்குகளுக்கு டெல்லி உச்சநீதிமன்றத்தில் சாவி கிடைத்துள்ளது. அவர்கள் கொண்டாடுகிறார்கள். மழையில் நனைகிறார்கள். ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் உயர்த்தி ஜோராக ஆடுகிறார்கள் . லாலு, சவுதாலா, ராசா, ஜெகன் மோகன், எடியூரப்பா போன்றவர்களுக்கு என்ன நடந்ததோ அதுவே ஜெ.வுக்கும் நடந்துள்ளது.

ஜாமின் கிடைத்த அன்று மதியம் போயஸ் கார்டனில் தான் பணி. திடீரென்று பேய்மழை பிடித்துக்கொண்டது.  ‘வானம் எங்கம்மாவுக்காக ஆனந்த கண்ணீர் விடுதுடா’ என்று அதிமுகவினர் தற்குறிப்பேற்றவணியில் பேசினார்கள்.  ஒதுங்கக்கூட இடமில்லை. எந்த பக்கம் ஓடினாலும் கேட் போட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் முட்ட முடியும். கட்டப்பட்டுக்கொண்டிருந்த ஒரு புதுக்கட்டிடம் மட்டுமே கேட் போடாமல் இருந்தது. வானம் லேசாக மின்னியதில் மவுலிவாக்கம் நினைவுக்கு வர கொஞ்சம் பேக் அடித்தேன். ஆனாலும் மழையின் தாக்கம் புதுக்கட்டிடத்துக்குள் நுழைய வைத்தது.

கொஞ்சம் ஓரமாக அன்னாந்து பார்த்தேன். அது 11 மாடி கட்டிடமெல்லாம் இல்லை. 4 அல்லது 5 மாடிகள் தான். கால்களை கொஞ்சம் ஊன்றி நின்றேன். கட்டுமான பணியில் ஈடுபட்டவர்கள் ஓய்வில் அவர்களுக்குள்ளாக பேசிக்கொண்டிருந்தார்கள். 35 வயது மதிக்கத்தக்க அக்கா ஒருவர், “அப்பாடா ஒரு வழியா அம்மா திரும்பிட்டாங்க. ஊரெல்லாம் பொண்டாட்டி வச்சுருக்கவன், லட்சம் கோடி ஊழல் பண்ணவனெல்லாம் வெளில சுத்துறான். நம்ப அம்மா என்ன பண்ணாங்கன்னு புடிச்சு போட்டானுக. இந்தா சிங்கமாறி வெளியே வந்துட்டாங்கல்ல. அம்மா மாறி வரமுடியுமா” இப்படியாக ஒரு அரை மணி நேரத்துக்கு அம்மா புகழ் பாடிக்கொண்டிருந்தது அந்த அக்கா.

மழை விடவேயில்லை. நேரமாக நேரமாக அந்தக்காவின் பேச்சு வேறெங்கேயோ போய்க்கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் தனது இறந்து போன தன் கணவர் பற்றி ஆரம்பித்தது. “என்னாடி ஊருல எல்லாம் யாராச்சும் செத்தா, சாவுக்குமட்டுந்தான் சட்டிபிகேட்டு கேப்பான். இங்க சுடுகாட்டு சட்டிபிகேட்டுலாம் கேக்குறான். அதை வாங்குறதுக்கு ரெண்டு மாசமா அழைஞ்சுகிட்டு இருக்கேன். 500 குடு, ஆயரம் குடுனு இழுக்கடிக்கிறான்” என்று நமைந்தார். பின்னர் மீண்டும் அம்மா புராணத்தை ஆரம்பித்தார்.

லஞ்சமும் ஊழலும் எவ்வளவு அழகாக பழகி போய்விட்டது. இங்கே பெரிதா சிறிதா என்பது மட்டுமே தான் பிரச்சினை. ஸ்பெக்ட்ரமா சொத்துக்குவிப்பா, ஹெலிகாப்டரா ஆதர்ஷா, சாரதா சிட் ஃபன்டா மாட்டுத்தீவனமா என்பது தான் பேசுபொருள். ஒரு முதலமைச்சர் கோடிக்கணக்கில் சொத்துக்குவிப்பதுக்கும், ஒரு கடைநிலை அதிகாரி நூறு ரூபாய் லஞ்சம் வாங்குவதற்கும் இடையில் உள்ள தூரம் ஒருவரின் கைகளை பரிசுத்தமாகவும், இன்னொருவரின் கைகளை கறைபடிந்ததாகவும் சித்தரிக்கின்றன.

இவர்களுக்கு பின்னே எத்தனை சித்தால்கள், நடவுக்கு போகும் பெண்கள், ரயில் நிலையங்களில் கொய்யாக்கூடை தூக்குபவர்கள் என எவ்வளவு பேரின் உழைப்புகள் உறிஞ்சப்பட்டுக்கொண்டிருக்கின்றன. மண்டையில் விழும் கோடாரியின் குருதியை துடைத்தபடி, உதட்டால் முத்தமிடவது போலத்தான், ஊழல் அரசியல்வாதிகளை கொண்டாடுவதும்.

காங்கிரஸ், திமுக, பாஜக, அதிமுக என்று விதி விலக்கெல்லாம் இல்லை. ஆட்சியதிகாரத்தில் ஊழல் என்பது ஒதுக்க முடியாத ஒன்றாகிவிட்டது. தமிழகத்தை பொறுத்தவரை திமுகவுக்கு ஸ்பெக்ட்ரம் , அதிமுகவுக்கு இந்த சொத்துக்குவிப்பு வழக்கு. இந்த  லெஸ் தென் கிரேட்டர் தென் கேமில் இன்றைக்கு அதிமுக தான் பரிசுத்தம்.

-மணிகண்டன் நமஷ்
18-10-2014


No comments:

Post a Comment