Tuesday, October 14, 2014

போதையென்னும் பெருஞ்சக்கரம்!!


பேருந்து பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சையை நோக்கி புறப்பட்டது. சாமியார் மடம் நிறுத்தத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் இடுப்பில் ஒரு குழந்தையோடு ஏறினார். குழந்தைக்கு 2 வயதிருக்கும். பேருந்து வேகமெடுத்தது. தனியார் பேருந்தென்பதால் வழிநெடுகிலும் ஆட்களை ஏற்றிக்கொண்டது, கூட்டம் கொள்ளளவை தாண்டியது. அந்தப்பெண்மணி நெரிசலுக்குள்ளானாள். குழந்தை வியான் வியான் என்று பீரிட்டது.

அழுத குழந்தையிடம் செல்போனை காட்டி கை நீட்டினேன். மறுப்பேதுமின்றி மடியில் வந்து அமர்ந்தது.  ‘ஏம்மா…. எல்லாம் உள்ள போ உள்ள போ’ என்ற கண்டக்டரின் கனீர் குரல், அந்த பெண்மணியை இரண்டு தப்படி உள்ளே போக வைத்தது. சுற்றி முற்றிப்பார்த்த குழந்தை மீண்டும் விரீர் என்று அழ ஆரம்பித்தது. அழுகை சத்தம் பேரிரைச்சலானது. இது தான் தாய்மையை பிரிதல்.

ஆனால் அன்பு அழவில்லை. அவன் மிகச்சாதரணமாகவே இருந்தான். பிளாட்பார்மில் தூங்க ஆரம்பித்த நாளிலேயே அவன் இதை எதிர்பார்த்திருக்கக்கூடும். எந்த காலையிலும் தான் ஆதரவற்றவனாகலாம் என்பதை அவன் அறிந்திருக்கக்கூடும்.

இந்த நாளை மிகப்பெரிய பரபரப்போடு தொடங்கிவிட்ட நம்மில் பலருக்கு அன்புவை தெரியாது. வேளச்சேரியில் பிளாட்பாரம் மீது கார் ஏறியதில் மூவர் பலி என்ற செய்தியை கடந்த நமக்கு இந்நேரம் வரை அன்புவின் ஞாபகத்தை கொண்டிருக்க வாய்ப்பில்லை.

அன்புவுக்கு பெரிதாக சொந்தக்காரர்கள் இல்லை. தாய் தந்தை மட்டும் தான். தாய் கர்ப்பமாக இருந்ததால், அவன் தம்பியையோ, தங்கையையோ கனவுக்கண்டிருக்கக்கூடும். சாமான்யர்களின் எதிர்பார்ப்பு என்றைக்குத்தான் நிறைவேறியிருக்கிறது.அன்புவின் கனவுகளுக்கும், ஓங்கியொரு முற்றுப்புள்ளியை வைத்தாகிவிட்டது. இச்சமூக பெருங்கடலில் அன்பு நேற்று முதல் தனி மனிதன். இரண்டு நாள் முன்புவரை அதே பிளாட்பாரத்தில் மல்லாந்து படுத்து நட்சத்திரங்களை எண்ணியவன் இன்று முதன் முதலாய் கூரைகளுக்கு கீழே வாழ்வை தொடங்கியிருக்கிறான்.

“இந்தா இவடத்த குந்திகினு தான் வெளையாடுங்க, முந்தாநாத்து ராத்திரிக்கூட தம்பி பாப்பா வேணுமா, தங்கச்சி குட்டி வேணுமானு அம்புவும் அம்மாக்காரியும் வெளாண்டுச்சுங்க. போன மாசம் வரை நார்த் மெட்ராஸுல இருந்துச்சங்களாம். இங்க தரமணி, தாம்பரம்னு பாட்ல் பொறுக்கினு சுத்துனுச்சுங்க. ஆறுமுகம் சமத்துக்காரன்பா. ஒரு நாளைக்கு எப்டிக்கா 100 பாட்லாவது இட்னு வந்துருவான். அந்தம்மா அயிஸ்வர்யா மாசமா இருந்தனால வேளச்சேரி தாண்டி எங்கயும் போவாது. இந்த அன்புப்பய அவன் வயசுக்கு ஒரு பிளாஸ்டிக் பேப்பரவுடமாட்டான். கின்னி எடுத்துன்னு போய் அம்மா ஓட்டல்ல இட்லி கட்டியாந்து இந்தா இந்தாப்புல வச்சு தான் துண்ணுங்க. குடிக்கார ---------- ங்க வண்டியவுட்டு எத்திடுச்சுங்க” வேளச்சேரி பாரதி நகர் பஸ் ஸ்டாப்பில் ஒருவர் அன்புவின் குடும்பத்தை பற்றி ஒருவர் விளக்கினார்.
போதையென்னும் மாபெரும் சக்கரத்தில் சிக்கி அட்ரஸ் இல்லாத ஒரு குடும்பம் சுக்குநூறாகிவிட்டது. நமது வழக்கமான ஆசா பாசங்களில் ஒன்றைக்கூட நினைக்காதவர்களால் மட்டும் தான் பிளாட்பாரத்தில் குடியேற முடியும். அவர்கள் 1BHK வீட்டை  யோசிப்பதில்லை, கார் வாங்குகிற கனவு கிடையாது, மகனை எந்த கான்வெண்ட்டில் சேர்ப்பது என்ற ஏக்கங்கள் இல்லை. இந்த அரசிடம் வாக்காளர் அடையாள அட்டை மட்டுமல்ல குறைந்த பட்சம் ரேஷன் கார்டை கூட அவர்கள் கேட்டதில்லை. கடைசி வரை உயிர் வாழ மட்டுமே வாழ்ந்தார்கள். ஆனால் இந்த மிக நுன்னிய ஏக்கத்திலும் இந்த ஊர் எவ்வளவு கோரமாக காரேற்றி இறக்கியிருக்கிறது.

காரேற்றிய அந்த மூன்று பேரால், அரசுக்கு அன்றைய நாள் அதிகபட்சம் ஒரு 3000 ரூபாய் வருமாணம் கிடைத்திருக்கக்கூடும். அந்த 3000 ரூபாய்க்கு பின்னால் மூன்று மனிதர்களின் இயக்கம் நின்று போயிருக்கிறது. காவலர்களும் அந்த போதை ஆசாமிகளை பிடித்துவிட்டார்கள்.

ஆனால் அன்றிரவு போதையோடு இருந்தது அவர்கள் மட்டும் தானா? காரேற்றியதால் அவர்கள் குற்றவாளிகள். ஆனால் அந்த எண்ணத்தை ஏற்படுத்தியது மது. குற்றம் செய்ய தூண்டியது மது. மதுவை விற்பது அரசாங்கம். அரசாங்கத்தை உருவாக்குவது யார்? நாம் தானே??

இதோ அந்த மூவர் மது அருந்திய டாஸ்மாக் கடை இன்றும் திறந்துவிட்டது. நிறைய பேர் கூடிவிட்டார்கள். ஆறுமுகம், ஐஸ்வர்யா சாப்பிடுகிற அந்த அம்மா உணவகமும் திறந்து தான் கிடக்கிறது. இன்றைக்கும் சில ஆறுமுகங்களும், கர்ப்பினி ஐஸ்வர்யாக்களும் அங்கு பசியாறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்நேரம் அன்பு ஏதோ என்.ஜி.ஓ-வின் அரவணைப்பில் துயிலுறங்கி கொண்டிருக்கலாம் அல்லது தன்னைப்போன்ற பிள்ளைகளுக்கு பின்னே தட்டை ஏந்திக்கொண்டு சாப்பிட காத்திருக்கலாம்.

பேப்பர் பொறுக்குவது, அம்மா ஓட்டலில் சாப்பிடுவது என்ற இலகுவான வாழ்க்கையை வாழ்ந்த அன்புவை முதல்முறையாக போதையென்னும் ஆயுதம் இச்சமூகத்திற்கே சேர்த்து தாக்கியிருக்கிறது. இனி இச்சமூகம் அன்புவை எப்படி பார்க்க போகிறது என்பதைவிட இனி இந்த சமூகத்தை அன்பு எதிர்கொள்ள போகிறான் என்று தெரியவில்லை. சதுரங்க வேட்டை நட்டியின் கதாபாத்திரம் தான் ஞாபகம் வருகிறது.

போதையின் வெறியில் ஒரு சிசு பிறக்கவே அருகதையற்றதாகி விட்டது. தமிழகத்தின் ஏதோ ஒருமூளையில் கைவிடப்பட்ட மூதாட்டி, அத்தனையே ரோசத்தோடு தனியே கிளம்பி வந்தது, வேளச்சேரி பிளாட்பாரத்தில் அகால மரணமடையத்தானா?


கைதானவர்கள் இன்னும் 2 வாரத்தில் ஜாமினில் வெளி வந்துவிடுவார்கள். இதோ நாமும் நுரைக்க நுரைக்க இரக்கப்பட்டுவிட்டோம். இனி என்ன மிச்சமிருக்க போகிறது. நம் நாளை தொடர்வோம்..  

// மணிகண்டன் நமஷ்
14-10-2014

No comments:

Post a Comment