Monday, July 28, 2014

ஆடி மாதத்தில் ரம்ஜான்!!


வழக்கமாக தீபாவளிக்கு கொஞ்சம் முன்போ பின்போ வருவதாக அறியப்பட்ட ரம்ஜான் இந்தாண்டு கொஞ்சம் முன்பாக ஆடி மாதத்திலேயே வந்துவிட்டது. ஒரு பக்கம் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி இன்னொருபுறம் அம்மன் கோயிலில் ஆடி கூல். இதுவல்லவா ஒருமைப்பாடு.

நேற்றிரவு அலுவலகம் முடித்து தி.நகர் வந்திறங்கிய போது ஏதோ லாகூரிலோ, கராச்சியிலோ நிற்பது போல் ஒரு ஃபீல். தீபாவளிக்கும் பொங்கலுக்கும் சற்றும் சளைத்ததல்ல இந்த ரம்ஜான் என்று தான் தோன்றியது. சில மால்களில் ஈத் முபாரக் என்று பிறை கூட வைத்திருக்கிறார்கள்.

விவரம் தெரியாத நாளில்  வெறும் அரசு விடுமுறையாக கடந்து போன ரம்ஜான், அப்பாவின் நண்பர் முகம்மது அலி வீட்டு பலகார சுவையால் அறிமுகமானது. பாப்பாநாடு, பட்டுக்கோட்டை பக்கம் சித்திரை மாதத்தில் கரம்பயத்து மாரியம்மனுக்காக காய்ச்சப்படும் பச்சை அரிசி கஞ்சியை கொஞ்சம் காரமாக நோன்பு கஞ்சியாக அறிமுகப்படுத்திய அப்பாஸும், ஈசுப்பும் நிறைந்த பால்யத்தை கரம்பயத்து மாரி பறித்தேவிட்டாள்.

அலுவலகத்துக்கு அருகேயுள்ள எல்லீஸ் சாலையில் சுக்கு டீக்கடை வைத்திருக்கும் கனியக்கா, மாம்பலம் ஸ்ரீநிவாசா தியேட்டர் அருகே இட்லிக்கடை போடும் புகாரி தாத்தாவாலும், நோன்பு கஞ்சியின் வாசம் வருடந்தோறும் வீசிக்கொண்டிருக்கிறது.

புகாரி தாத்தாவை பார்க்கும் போதெல்லாம் ஊரில் ஹாஜான் ராவுத்தர் ஞாபகம் தான் வரும். கே.ஆர். தியேட்டரில் இரண்டாம் ஆட்டம் முடித்து வருபவர்களுக்கு ஹாஜான் ராவுத்தரின் பின்னிரவு இட்லிக்கடை தான் பசியாறும் திருத்தலம். பின்னாளில் கே.ஆர். தியேட்டர் மண்டபமானதில் ஹாஜான் ராவுத்தரின் வருமானமும் குறைய சில நாட்கள் கடை போடுவதில்லை என்று சொன்ன போது “வசீகரா, செந்தூரப்பூவேனு போடுறதுக்கு பதிலா ஏதாவது செகண்ட் ரிலீஸ் படத்தை போட்டா என்னவாம்” என்று மாம்பல ஸ்ரீநிவாசா தியேட்டரரருகே நமைந்து கொண்டிருந்த புகாரி தாத்தா ஞாபகம் தான் வந்தது.

இதேபோல் தான் கனியக்காவும். 50 ஐ தொடுகிற வயது. கோட்டைப்பட்டினத்தில் வாக்கப்பட்ட கனியக்காவின் கணவர் சாலை விபத்தொன்றில் இறந்துவிட தன் சித்தப்பாவின் ஆதரவில் திருவல்லிக்கேணியில் குடியேறி 20 ஆண்டுகள் ஓடிவிட்டது. ஒரே மகன் புதுப்பேட்டையில் பைக் உடைக்கும் கடையொன்றில் வேலை பார்க்கிறான். இன்று மாலை சுக்கு டீ அருந்திய போது,   ‘என்ன கனியக்கா நாளைக்கு உங்க பெருநாளு பிரியாணியுண்டா?’ என்றேன்.

“அட போ மணி இந்த ஊருல என்ன பெருநாளு. இங்கயும் பள்ளிவாசல் ஜமாத்தெல்லாம் இருக்கு ஆனா கோட்டைப்பட்டுனத்த மறக்க முடியுமா. எங்காளுகவிட்டு புள்ளைகனு இல்ல எல்லாரும் புள்ளையலும் அத்தா அத்தானு எங்க வூட்டாரயே சுத்தி சுத்தி வருங்க, ஜமாத்தே களைக்கட்டும். அதெல்லாம் இங்க வருமா, ஏதோ பிரியாணிய கிண்டுனோமா, தொழுதோமானு தான் மெட்ராஸுல எல்லா பெருநாளும் கழியுது” என்றவர் கண்ணில் மல மலவென மல்லிப்பட்டணத்து கடல் வலிந்தது.

“இருந்துட்டுப்போவுது நாளைக்கு சாப்புட வந்துரு மணி” என்ற அவருக்கு காஸா, இஸ்ரேல், பாலஸ்தீன், பாகிஸ்தான், துப்பாக்கி, ஜிகாதி, ஸ்லீப்பர் செல் என்ற வார்த்தைகளில் ஒன்று கூட தெரியாது. இவர்கள் மட்டுமல்ல பத்து பேர் கொண்ட கேங்கில் பிரியாணி கேட்டு நச்சரிக்கப்படுகிற உசேன்களும், கான்களும் இப்படி தான். இவர்களும் நம்மவர்களே...


இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் நட்பூஸ்...

No comments:

Post a Comment