Friday, May 9, 2014

வெற்றியை அல்ல திறமையை போற்றுவோம்:வழக்கம் போலவே இந்தாண்டும் +2 முடிவுகள் வெளியாகிவிட்டன. 8 லட்சம் பேரில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களை எப்போதும் போலவே கொண்டாடி கொண்டிருக்கிறோம். இந்த மூவரையும்  கொண்டாடி தீர்ப்பது தவறல்ல.ஜெயித்தவர்கள் போற்றப்பட வேண்டியவர்களே. ஆனால் இங்கு வெற்றியை புரிந்து கொள்வதில் தான் குழப்பமாகவுள்ளது.

சத்தியமாக அது புரியவேயில்லை, இங்கே ஏதோ ஒன்றில் ஜெயிக்க வேண்டும், அதற்காக ஓட வேண்டும், அந்த வெற்றிக்காக எத்தனை தோல்விகளை வேண்டுமானாலும் சந்திக்கலாம், எத்த்னை உணர்வுகளை வேண்டுமானாலும் நசுக்கலாம்.

ஏன் ஒரு 16 வயது மனிதனை படிப்பை ஒன்றை மட்டும் கொண்டு தான் கணக்கிட வேண்டுமா.ஏன் விளையாட்டு,சமூக சேவை, இசை, பாட்டு, இலக்கியம் என்று எல்லா திறமைகளையும் ஒரே அளவில் நிறுத்தி தேர்வுகளை நடத்த கூடாது. இங்கே எல்லாமே பொருள் சார்ந்த வாழ்க்கையை சுற்றி இயங்குவது தான் இந்த அவலத்திற்கு ஆதார காரணம்.

இதுவரை இந்த தமிழகம் எத்தனையோ ஸ்டேர் ஃபர்ஸ்ட்களை பார்த்துவிட்டது.அவர்கள் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். நானூறு மார்க் எடுத்தவன் கூட சமுதாயத்திற்கு ஏதோ ஒன்றை ஏதோ ஒரு வழியில் செய்து விடுகிறான்,ஆனால் இந்த ஸ்டேட் ரேங்க் பார்ட்டிகள் என்ன செய்கிறதென்று தெரியவில்லை.

ஸ்டேட் ரேங்க் எட்ப்பவர்கள் பெரும்பாலும் டாக்டராக ஆவேன் என்று சொல்கிறார்கள் ஆனால் அவர்களால் ஒரு இலவச மருத்துவமனை உருவாக்கப்பட்டது என்று செய்தி இல்லை. இவர்கள் தானே ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகிறார்கள், ஊழலும் ஒழிந்த மாதிரியில்லையே. லண்டனில் 2 கோடி மக்கள் தொகை ஃப்ளோட்டிங் பாப்புலேஷன்,  ஆனால் இங்கு சென்னையிலிருந்து விழுப்புரம் போகவே காத்திருப்போடு சேர்த்து 5 மணி நேரம் ஆகிறது. இந்த ஸ்டேட் ரேங் எடுத்த பொறியாளர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லையா?? இப்படியென்றால் இவர்களுக்கான சலுகைகள் ஏன், லைம் லைட்டிற்கு கொண்டு வருவத்ன் காரணம் என்ன? இவர்களை கொண்டாடப்படுதலின் தேவை தான் என்ன..

ஒரு வேளை வருஷா வருஷம் ஒரு மூனு பேர கொண்டாடனும் என்று மரபாகிவிட்டதா?

ஊத்தங்கரைக்கு அருகே ஏதோ ஒரு விகாஸில் கரண்ட் போனாலும் ஜெனரேட்டர் உதவியோடும், பொறுக்கியெடுத்த ஆசிரியர்களின் 24 மணி நேர வழிகாட்டுதலோடும் கிட்டத்தட்ட 2 ஆண்டு காலம் ஒரே +2 பாடத்தை வேறு வேலைகளின்றி முழுக்க முழுக்க படித்து 1193 மதிப்பெண்ணை எடுத்த மாணவியை கொண்டாடும் அதே வேளையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஒரு குக்கிராமத்தில் அப்பாவை இழந்து தாயுடன் கூலி வேலைக்கு சென்று, அன்றாடம் நேரம் கிடைக்கும் போது மட்டும் அதையும் மின்வெட்டு விழுங்க அந்த கொடுரங்களை சமாளித்து 967 மதிப்பெண் வாங்கியிருக்கிறாள் ஒரு மாணவி.

இதில் எதை கொண்டாடுவது. ஒன்று விமானத்தில் சென்று சூரியனை பார்த்திருக்கிறது. இன்னொன்ரு ஒரே உந்தலில் இரண்டு தென்னை மரங்களை தாண்டியிருக்கிறது. இதில் கொண்டாடப்பட வேண்டியது எதுவென்ரு யோசியுங்கள்.

ஸ்டேட் ரேங்க் எடுத்தவர்களை தாங்கி தாங்கி படம் பிடித்து  டி.வி.க்களிலும் பேப்பர்களிலும் போடுவதன் மூலம் ,சராசரியாக தேர்ச்சியுற்ற லட்சக்கணக்கானவர்களின் மனதில்  தாழ்வு மனப்பாண்மையை விதைக்கப்பட்டு விடுகிறது.

முதல் மூன்று மதிப்பெண் வாங்கிய பிள்ளைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் இனிப்பு ஊட்டும் அதே வேளையில், ஏதோ ஒரு கடைக்கோடியில் தோற்றுப்போன துன்பத்தில் தற்கொலை செய்து கொள்ளும் பிள்ளையின் உடலை தழுவி அழும் பெற்றோர்களும் இருக்க தானே செய்கிறார்கள்.

நிறைய முறை சொல்லியாயிற்று மீண்டும் சொல்வது பொருத்தம் என்று நினைக்கிறேன், ‘நான் கற்ற கல்வி இந்த சமூகத்துக்கு உதவவில்லை என்றால் சுட்டுக்கொள்வேன்’ என்றார் அம்பேத்கர்.போவான் ,போவான் படித்தவன் மட்டும் தவறு செய்தால் அய்யோவென்று போவான் என்றான் பாரதி. இங்கு சுட்டுக்கொள்பவர்கள் குறைவு ஆனால் ஐயோ என்று போய்க்கொண்டிருக்கிறவர்களோ ரொம்பவே அதிகம்.

வெற்றி தோல்விகளை அல்ல திறமையை கொண்டாடுவோம்.

No comments:

Post a Comment