Sunday, April 20, 2014

நாம்..திரும்பி பார்த்தலை விட சுகமானதாக எதைச்சொல்ல முடியும். பால்யத்தில் சுவைத்த முதல் சேமியா ஐஸ்ஸில் ஆரம்பித்து கல்லூரி தென்னை மரத்தடியில் கடைசியாக வாங்கிய காற்று வரை எத்தனையோ சுகமான நினைவுகளால் நிரம்பியுள்ளது வாழ்க்கை. என்றாலும் இது எல்லாவற்றையும் தேடல் என்ற பெயரில் எளிதில் தொலைத்துவிடுகிறோம். எதை தேடுகிறோம் என்று தெரியாமல் தொலைப்பதுதான் இந்த வாழ்வளித்த சாபம்.

3 வருடங்களுக்கு முன்பு மஹா கல்லூரியில் கைகோர்த்து சுற்றிய அசோக், மிதுன், ஆனந்த்ராஜ், கவுதம், மகி, அஜ்மீர், எஸ்.மணி, குண்டு சரத் என்ற நண்பர்கள் பட்டியலில் ஒருவர் கூட இன்று உடன் இல்லாதது தான் இந்த பிராய்லர் கோழி கல்விமுறை தந்த பரிசு. அவலம், அசிங்கம், நிராகரிப்பு, காத்திருப்பு, கேவலம், அவமாணம் என்ற அனைத்திற்கும் ஒருவனை தாரை வார்த்து கொடுக்கிறது இந்தக் கல்விமுறை. கல்லூரி நட்பின் பிரிவிற்கு பேர்வெல் டேக்கு நான் வாசித்த இந்த கவிதை தான் மருந்து போட்டு வருகிறது. https://www.youtube.com/watch?v=8fp8eKvMMj8

உண்மையில் நண்பர்களால் சூழப்படுகிற உலகம் பிறந்த குழந்தையின் பாதத்தை போன்றது. ஆனால் திடீரென தேடல் என்ற பெயரில் பாதங்கள் பழுக்க பழுக்க நம்மை நாமே மிதித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்துவிடுகிறோம். இதில் மொத்த ஈரமும் வற்றிவிடுகிறது.ஆதியில் உயிர்ப்பிழைத்து கிடப்பதற்காக ஆப்ரிக்காவில் இருந்து இடம்பெயர ஆரம்பித்த மனித இனம், இன்றும் அதிலிருந்து விடுபடவில்லை.

இடம்பெயர்தலின் வலியை எந்த மொழியின் வார்த்தைகளிலும் அடக்கிவிட முடியாது. மாம்பலம் ரயில் நிலையத்தில் ஊதா சட்டை யூனிபார்முடன் சாத்துக்குடி போடும் செல்வத்திற்கு ஒரத்தநாடு பக்கம். தஞ்சை ஜில்லாவில் அறுப்பு முடிந்த வயக்காடுகளில் கிடக்கும் மாட்டு வண்டி தடத்தில் தவம் கிடந்த அவரது கால்களை, காலம் மாம்பலம் ரயில் தடத்திற்கு கொண்டு வந்துவிட்டிருக்கிறது.

இன்றைக்கும் காவேரிப்படுகைகளில் விவசாயம் பார்க்க வேண்டிய இளைஞர்கள் பலர் விசா வாங்கிக்கொண்டு கிடைத்த வேலையை செய்ய சிங்கப்பூர், மலேசியா பறக்கிறார்கள். ஊரில் ஜாலியாக சுற்றித்திரிந்த அவர்களில் பலர் இன்று பேஸ்புக்கில் அரசியல் பேசுகிறார்கள், தமிழ் தேசியத்தை முன் வைக்கிறார்கள். தமிழண்டா சொல்கிறார்கள். இது எல்லாம் ஒரு இடைவெளி ஏற்படுத்திய அக்கறை.

அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் ஊக்கு விற்கும் நரிக்குறவ சிறுமிக்கு இரக்கப்பட்டு ஊக்குகளை வாங்கிய நண்பன், அது இது நிகழ்ச்சியின் சிரிச்சா போச்சு ரவுண்டில் நரிக்குறவர்களை கலாய்க்கும் காட்சிக்கு விழுந்து விழுந்து சிரிக்கிறான். இது தான் நாம். இவற்றை சுட்டிக்காட்டினால் என்ன பாஸ் அறச்சீற்றமா? பொங்குறியலோ? என்று டைட் ஸ்மைலி போடுகிறார்கள். அதிலும் இந்த நடுநிலைவாதிகள் தொல்லையை போல் உலகில் வேறொன்றும் இல்லை. நியூட்ரல் என்பவர்கள் மனிதர்கள் மட்டுமன்றி எந்த ஜீவ ராசியிலும் சேராதவர்கள் போல் தான் பேசுகிறார்கள்.

அதிமுக அமைச்சர்களை கலாய்க்கும் நம்மில் பலர், எந்த இடத்திலும் குனியாமல் தான் நிற்கிறோமா. அவர்களது குனிதலில் கூட ஒரு நேர்மை இருக்கிறது, வெளிப்படைத்தன்மை இருக்கிறது. ஆனால் நாம் அப்படியா, எங்கே குனிகிறோம், எதற்கு குனிகிறோம் என்பது கூட தெரியாமல் தான் குனிந்து வருகிறோம்.

//மணி 

No comments:

Post a Comment