Thursday, February 13, 2014

காதலர் தினம் வந்துருச்சு

இன்று ‘தி இந்து’ வில் வெளியானது

“காதலில் இளைக்கா பர்ஸ் ஒன்று வேண்டும்”, “ஸ்பீட் பிரேக்கர்  தேடா காதல் வாய்க்குமா”  இந்த மாதிரியான பழைய வரிகளை  மடித்து மடித்து  ஸ்டேட்டஸ் போடுகிறார்கள் என்றால் காதலர்  தினம் வந்துவிட்டதென்று அர்த்தம்.

காதல் ஜோடிகள் இந்த தினத்தை எப்போ எப்போ என்று காத்திருக்க,சூப் பார்ட்டிகளோ ‘நம்மல் நோக்கி ஏதோ மிகப்பெரிய ஆபத்து வருது,எல்லோரும் பாதுகாப்பான இடத்துக்கு போங்க’ என்று டாஸ்மாக் பக்கம் ஒதுங்கிவிடுவார்கள்.

நெட்டு, ட்விட்டு, என்று வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் சாட்டிங்கில் ப்ரொபோஸ் செய்தால், ஹ்ம்ம்ம்… என்ற பதிலில் காதல் பூக்கிறது. அந்த காலத்தில் டி.ஆரும், பாரதிராஜாவும் லவ் ப்ரோபசல் சீன்வைக்க எவ்வளவு மெனக்கிட்டிருப்பார்கள்.

நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்ல, உன்ன என் அண்ணேன் மாதிரி நினைச்சேனேடா, நாம அப்படியா பழகுனோம், ஐ ஆம் என்கேஜ்டு, என்ற வார்த்தைகள் உலகில் அதிகம் ஒலிக்கும் தினமும் இது தான். இதனால் காதலர் தினத்தில் என்ஜாய் பண்ணுபவர்களுக்கு நிகராக எக்ஷா தேடி அலையும் கூட்டமும் அதிகமிருக்கும்.

பிரின்ஸ்பாலும், எச்.ஓ.டி.யும் டிரஸ் கோடில் வரச்சொல்லி கத்திய போதெல்லாம் கண்டு கொள்ளாதவர்கள். பிப்ரவரி 14-ல் மஞ்சள், பச்சை என்று காதல் ட்ரஸ் கோடில் வந்து ராமராஜனுக்கு சவால் விட்டுக்கொண்டிருப்பார்கள்.

யார் விட்ட சாபமோ.. எல்லா காதலர் தினமும் இப்படி வொர்க்கிங் டேஸிலேயே வந்து தொலைக்கிறது. காலேஜிற்கு மட்டம் போட்டு, காதலர் தினத்தை கொண்டாட நினைத்தால், அந்த கோபுரங்களில் யூனிட் டெஸ்ட், இண்டர்னல் டெஸ்ட் என்று ஏவுகனை தாக்குதல் நடத்தி விடுவார் கிளாஸ் அட்வைசர். எனவே காதலர்களின் கவலை போக்க காதலர் தினத்தை உலக அரசு விடுமுறை தினமாக அறிவித்துவிடலாம்.

கடற்கரைகளில் காதலர்களை விட வயிற்றெரிச்சல் பார்ட்டிகளின் கூட்டம் அதிகமிருக்கும். அவர்கள் நொடிப்பொழுதில் இழுத்து விடும் மூச்சில் எழுபது ஜோடிகளுக்கு ப்ரேக் அப் வாய்க்குமென்றால் பாருங்கள். அவர்களின் கண்ணில் படாமல் காதல் செய்யவில்லையென்றால் காதலர் தினம் கருப்பு தினமாகிவிடும்.

நாள் முழுக்க ஜாலியாய் காதலித்துவிட்டு, மாலையில் காதலிக்கு மிக்கி மவுஸ் கொடுத்து, மறுநாள் காலை பேப்பரை பார்த்தால் தூக்கி வாரி போடும். ‘பூங்காவில் உற்சாக காதல் ஜோடி’ என்ற வர்ணிப்போடு காதலியுடனான போட்டோ அரைப் பக்கத்திற்கு வந்திருக்கும். வீட்டில் யாருக்காவது மாலை பேப்பர் படிக்கும் பழக்கமிருந்தால், அன்று மாலையே ஜோலி சுத்தமாகிவிடும்.

மாட்டிக்கொள்ளாமல் காதலர் தினத்தை கொண்டாட பீச்களை தவிர்ப்பது ரொம்பவே நல்லது. இல்லையெனில் அடையாறுக்கு அந்தபக்கம் லவ்வர்ஸ் பீச் என்று ஒன்றை உருவாக்கி, லவ்வர்ஸ் அடையாள அட்டையுடன் வரும் காதலர்களை மட்டும் உள்ளே விடப்படும் என்ற நிலை உருவான பிறகு பீச் பக்கம் போகலாம்.

காதலர் தினத்தன்று சினிமாவுக்கு செல்வதென்று முடிவு செய்தால், மாஸ் ஹீரோக்களின் படங்களை விட மொக்கை படங்கள் தான் காதலர்களின் முதல் சாய்ஸ். இதில் கொடுமை என்னவென்றால் காதாலர்களை கண்டு ரசிக்கவே வெளியே வரும் கூட்டம், என்ன மொக்கை படம் என்று தெரியாமல் போன பிப் 14-லிலேயே ரிசர்வேசன் செய்திருக்கும்.

இந்த முன் அனுபவம் உள்ள காதலர்கள், கூட்டத்திற்கு பயந்து சிட்டி லிமிட்டை தாண்டி தைரியமாக ரிசார்ட்களை நாடினால் உருட்டுக்கட்டை அமைப்புகள் குடி கும்மியடித்து, துவை துவை என்று துவைத்து அனுப்பிவிடும். அதிலிருந்து தப்பிக்க காதல் ஆதரவு பேசும் கட்சிகளின் ஆபீஸுக்குள் புகுந்து காதல் செய்வது சாமர்த்தியம்.
-மா.மணிகண்டன்
     

No comments:

Post a Comment