Wednesday, December 17, 2014

நாம் தான் இந்தியர்கள்....


பேருந்து பள்ளிக்கரணையை தாண்டியிருந்தது. வேளச்சேரி மேம்பாலத்திலிருந்து பேருந்து இறங்கும் நேரத்தில், சடேரன பிரேக்கில் ஏறி நின்றார் ஓட்டுநர். சாலையில் ஒரு கும்பல் ஒரு இளைஞனை துரத்தவே, அவன் குறுக்கே விழுந்திருக்கிறான். நல்ல வேளை, பேருந்தின் வேகம் குறைவென்பதால், பிரேக்கிற்கு கட்டுப்பட்டன சக்கரங்கள்.

பேருந்திலிருந்து இறங்கி ஓடிய சிலர், அந்த இளைஞணை அடிக்க துரத்தினார்கள். சிலர், சட்டையை கூட பிடித்து விட்டனர், அந்தப்பக்கமாக போன பெரியம்மா ஒருவர்,  ‘எவமுட்டு புள்ளையோ, யாண்டா அத அடிக்க இத்துன பேரு பாயுறீக’ என்று அதட்டியது. கூட்டம் கலைந்தது. அந்த இளைஞன், ஏதோ ஏதோ இந்தியில் பேசியபடி மீண்டும் ஓடத்தொடங்கினான்.

என்னவென்று விசாரித்ததில், அந்த இளைஞனின் பெயர் சஞ்சுவென்றும், ஏதோ தள்ளுவண்டியில், பாதாம் பால், ஐஸ்கிரீம் கடை போட்டு பிழைப்பு நடத்தி வருவதாகவும் கூறினர். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மேலாக வேளச்சேரியில் பிழைப்பு நடத்தி வந்த அவனுக்கு ஒரு பீப் ஸ்டால் மூலம் சோதனை வந்திருக்கிறது.

ஆதம்பாக்கத்தை சேர்ந்த இரண்டு பேர் சஞ்சு தள்ளு வண்டி நிறுத்துகிற இடத்தில் புதிதாக பீப் ஸ்டால் ஆரம்பித்துள்ளனர். இதுபற்றி அவர்களிடம் அவன் கேட்க போகவே,  ‘எங்க ஊருக்கு பொழைக்க வந்துட்டு எங்களையே கேள்வி கேக்குறியா’ என்கிற ஷாக்கில் விரட்டியடித்துள்ளனர். சஞ்சு தனது ரெகுலர் கஸ்டமர்கள் சிலரின் உதவியின் பேரில் வேளச்சேரி காவல்துறையை தொடர்பு கொள்ளவே, பீப் கடை போட்டவர்கள் வெட்ட வேண்டிய இடத்தில் வெட்டி, துட்ட வேண்டிய இடத்தில் துட்டிவிட்டனர். இதன் வெளிப்பாடாக அந்த பீகார் சிறுவனை அடித்து விரட்டியிருக்கின்றனர்.

‘உள்ளூருக்குள் ஒரு இந்திக்காரன் கடைபோடலாமா’ இந்த ஈகோ ஒரு பாலைவனத்து சிறுவனை அடித்து விரட்டியிருக்கிறது. சஞ்சு கடை போட்டிருந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ளது கே.எஃப்.சி, அங்கிருந்து இரண்டு தப்படி கிழக்கு பக்கமாக திரும்பினால் அங்கே இரண்டு மாடி கட்டிடத்தில் இயங்குகிறது மெக்டோனால்ட். சஞ்சு என்றவன் துரத்தியடிக்கப்பட்ட நேரத்தில் அந்த வெளிநாட்டு கடைகளி சிக்கன் லாலிபாப்பும், பட்டர் பீஸாவும் பரபரப்பாக விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன. தமிழர்கள் மட்டுமல்ல, அசண்டாஸ், சி.எல்.ஆர்.ஐ, ஐடி பார்க்கில் வேலை பார்க்கும்  வட இந்தியர்கள் கூட அங்கு தான் சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள்.

தலைமுறைகள் மாறிவிட்டது நமது ஜீன்களில் இருந்த உணர்வு மட்டும் போகவில்லை. வெள்ளைக்காரனுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ற நாம், நமக்குள் அடித்துக்கொண்டே 300 வருடங்களுக்கு மேல் இந்த தேசத்தை அடகு வைத்திருந்தோம், இப்போதும் ஸ்டைலீஷாக கியூவில் நின்று சிக்கன் ஹாட் விங்க்ஸ், எக்ஸ்ட்ரா க்ரிஸ்பி போன்றவற்றை ஆர்டர் செய்துக்கொண்டிருக்கிறோம். இதுமட்டுமல்ல, லூயிஸ் பிலிப், போலோ, என்று பிராண்ட் என்ற பில்டப் விட்டுக்கொண்டிருக்கிறோம். அந்நிய முதலீட்டை கூவி கூவி அழைக்கிறது அரசாங்கம்.

சஞ்சுவை விரட்டியடித்தவர்கள் சட்டை பையில் மக்களின் முதல்வர் படமோ, தங்கத்தளபதி படமோ இருந்திருக்க கூடும். சஞ்சுவின் சட்டைப்பைக்கு கீழ் பசி மட்டும் தான் இருந்தது. அந்த சிறுவன் இந்தியில் பேசிக்கொண்டே ஓடியது காதில் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. அந்த பாஷை புரியவேயில்லை. ஆனால், அதன் சப்தம்,  ‘என்னடா உங்க தமிழ்நாடு வந்தவன வாழவைக்கும்னு பினாத்துறீங்களே, இது தான் உங்க லட்சனமா என்றே அவன் பேசியதாக புரிகிறது.


நாம் தான் இந்தியர்கள்…. 

-மணிகண்டன் 
17/12/2014

Monday, October 27, 2014

பட்டாம்பூச்சியாலான பால்யம்!!

பாலை வனத்தின் வெம்மையை நினைத்து பிரம்மித்த போது மதகுகளை மூடி காவேரியை காட்டியது கர்நாடகம். சிரபுஞ்சியின் மழைக்காற்றின் ஈரத்தை யோசித்த போது, எப்போதுமில்லாமல் வயல்கள் காவேரியாகின. அம்மாக்களின் சமத்துக்களை கவனிக்க ஆரம்பித்த கொஞ்ச நாட்களில் மகள்கள் மருமகளாகியிருந்தனர். கடவுகளை கைகளில் பிடிக்க நினைத்த கனத்தில் பட்டுப்பூச்சிகள் சிறகு முளைத்து பட்டாம்பூச்சிகளாயின.

பால்யத்தில் பூண்டுச்செடிகளை பொறுக்கி மயில் தொகை போல் கோர்த்து பட்டாம்பூச்சிகளை பிடிக்கும் ரகுவரன் தான் எங்கள் கேங்க்ஸ்டார். வண்ணப்பட்டாம்பூச்சி கிடைத்தால் ரோட்டில் காசு கிடக்கும்; மஞ்சள் பட்டாம்பூச்சி பிடித்தால் கணக்கில் நூற்றுக்கு நூறு எடுக்கலாம்; கருப்பு பட்டாம்பூச்சியை பிடித்தால் தூக்கில் தொங்கிய கற்பகம் பேயாக வந்து பயமுறுத்தும்.இது தான் பட்டாம்பூச்சி பிடித்தலில் நாங்கள் வகுத்துக்கொண்ட ஆரூடங்கள்.

ஒருமுறை ஆற்றில் குளித்த ஈரத்தோடு பட்டாம்பூச்சி பிடித்ததில் சுகந்திக்கு காய்ச்சல் வரவே, கருப்பு பட்டாம்பூச்சிகளை பிடித்ததால், அவளை கற்பகம் பயமுறுத்தியதாக பேசத்தொடங்கினோம். அன்று முதல் கருப்பு பட்டாம்பூச்சிகள் எங்கள் பூண்டுச்செடிகளில் அகப்படாத சுதந்திர ஜீவன்கள் ஆகின. வண்ண பட்டாம்பூச்சிகள் மட்டும் எங்கள் கைகளில் சிக்கிக்கொண்டேயிருந்தன. ரகுவரன் பட்டாம்பூச்சி தலைவனான்.

ராமச்சந்திரனுக்கு கணக்கு என்றால் உயிரென்பதால், அவன் மட்டும் ஆர்.எஸ்.பதி காடுகளில் மஞ்சள் பட்டாம்பூச்சிகளை தேடியலைவான். மஞ்சள் பட்டாம்பூச்சி கிடைக்காத நாட்களில் வெள்ளை பட்டாம்பூச்சியை பிடித்து வந்து கலர்பொடி தூவி மஞ்சளாக்கிவிடுவான். கள்ள ஆட்டம் ஆடினாலும் அவன் தான் கணக்கில் டாப்பர். பட்டாம்பூச்சி பிடிக்கும் பரபரப்பிற்கு நடுவே நாங்கள் பால்யத்திலிருந்து இளைமைக்கு இடம்பெயர்ந்திருந்தோம். இம்முறை பூண்டுச்செடிகள் தம்பிகளின் கைகளுக்கு போயிருந்தன. அசன்டிங் ஆர்டர், டிசண்டிங் ஆர்டர் என கணக்குப்போட்ட நாங்கள், (a+b)2 அல்ஜீப்ராவுக்கு மாறியிருந்தோம்.

பட்டாம்பூச்சி பிடித்த காலம் வரை நூற்றுக்குநூறு வாங்கியிருந்த ராமச்சந்திரன், அல்ஜீப்ரா காலத்தில் பார்டரில் பாஸானான். சில மாதங்களில் பார்டர் தேய்ந்து முட்டை மார்க் எடுக்கவே, பிரம்பால் வெழுத்து வெளியில் முட்டி போட வைத்தார் சோமு வாத்தியார். மஞ்சள் பட்டாம்பூச்சி பிடிப்பதை நிறுத்தியதால் தான், ராமு மக்காகிவிட்டான் என நம்பிய சிறுவர்கள், ஆர்.எஸ்.பதிகளை படையெடுத்தனர். 

பிரம்புகள் முறிந்த கணக்குகளை எண்ணிய ராமச்சந்திரன், படிப்பு வேலைக்காவாது என்று சுப்ரமணியன் உரக்கடையில் கணக்குபிள்ளையாகிவிட்டடான். ராமச்சந்திரனுக்கு மீசை முளைத்தது. அவன் மீசையில் மயங்கிய ஒரு பட்டாம்பூச்சியுடன் அவன் திருப்பூர் பக்கம் பறந்திருந்தான்.

கணக்கு வாத்தியார் ரிட்டையர்டு ஆனதில், வண்ணப்பட்டாம்பூச்சிகள் பிடிக்கும் ரகுவரன் கைகளுக்கு பிரம்புகள் வந்து சேர்ந்தன. எங்கு தேடினாலும் பட்டாம்பூச்சிகள் கிடைப்பாதாகயில்லை என்பதால், பிள்ளைகளும் டோரா பூச்சிகளை தரிசிக்க பழகிக்கொண்டார்கள். மின்வெட்டின் போதுமட்டும் டிவியின் கருந்திரையில் கற்பகம் போல் ஏதோவொன்று பயமுறுத்துகிறதாம் .

-மணிகண்டன் நமஷ்
28/10/2014


Saturday, October 18, 2014

பரிசுத்தமென்பது!!


கர்நாடக நீதிமன்றம் போட்ட விலங்குகளுக்கு டெல்லி உச்சநீதிமன்றத்தில் சாவி கிடைத்துள்ளது. அவர்கள் கொண்டாடுகிறார்கள். மழையில் நனைகிறார்கள். ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் உயர்த்தி ஜோராக ஆடுகிறார்கள் . லாலு, சவுதாலா, ராசா, ஜெகன் மோகன், எடியூரப்பா போன்றவர்களுக்கு என்ன நடந்ததோ அதுவே ஜெ.வுக்கும் நடந்துள்ளது.

ஜாமின் கிடைத்த அன்று மதியம் போயஸ் கார்டனில் தான் பணி. திடீரென்று பேய்மழை பிடித்துக்கொண்டது.  ‘வானம் எங்கம்மாவுக்காக ஆனந்த கண்ணீர் விடுதுடா’ என்று அதிமுகவினர் தற்குறிப்பேற்றவணியில் பேசினார்கள்.  ஒதுங்கக்கூட இடமில்லை. எந்த பக்கம் ஓடினாலும் கேட் போட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் முட்ட முடியும். கட்டப்பட்டுக்கொண்டிருந்த ஒரு புதுக்கட்டிடம் மட்டுமே கேட் போடாமல் இருந்தது. வானம் லேசாக மின்னியதில் மவுலிவாக்கம் நினைவுக்கு வர கொஞ்சம் பேக் அடித்தேன். ஆனாலும் மழையின் தாக்கம் புதுக்கட்டிடத்துக்குள் நுழைய வைத்தது.

கொஞ்சம் ஓரமாக அன்னாந்து பார்த்தேன். அது 11 மாடி கட்டிடமெல்லாம் இல்லை. 4 அல்லது 5 மாடிகள் தான். கால்களை கொஞ்சம் ஊன்றி நின்றேன். கட்டுமான பணியில் ஈடுபட்டவர்கள் ஓய்வில் அவர்களுக்குள்ளாக பேசிக்கொண்டிருந்தார்கள். 35 வயது மதிக்கத்தக்க அக்கா ஒருவர், “அப்பாடா ஒரு வழியா அம்மா திரும்பிட்டாங்க. ஊரெல்லாம் பொண்டாட்டி வச்சுருக்கவன், லட்சம் கோடி ஊழல் பண்ணவனெல்லாம் வெளில சுத்துறான். நம்ப அம்மா என்ன பண்ணாங்கன்னு புடிச்சு போட்டானுக. இந்தா சிங்கமாறி வெளியே வந்துட்டாங்கல்ல. அம்மா மாறி வரமுடியுமா” இப்படியாக ஒரு அரை மணி நேரத்துக்கு அம்மா புகழ் பாடிக்கொண்டிருந்தது அந்த அக்கா.

மழை விடவேயில்லை. நேரமாக நேரமாக அந்தக்காவின் பேச்சு வேறெங்கேயோ போய்க்கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் தனது இறந்து போன தன் கணவர் பற்றி ஆரம்பித்தது. “என்னாடி ஊருல எல்லாம் யாராச்சும் செத்தா, சாவுக்குமட்டுந்தான் சட்டிபிகேட்டு கேப்பான். இங்க சுடுகாட்டு சட்டிபிகேட்டுலாம் கேக்குறான். அதை வாங்குறதுக்கு ரெண்டு மாசமா அழைஞ்சுகிட்டு இருக்கேன். 500 குடு, ஆயரம் குடுனு இழுக்கடிக்கிறான்” என்று நமைந்தார். பின்னர் மீண்டும் அம்மா புராணத்தை ஆரம்பித்தார்.

லஞ்சமும் ஊழலும் எவ்வளவு அழகாக பழகி போய்விட்டது. இங்கே பெரிதா சிறிதா என்பது மட்டுமே தான் பிரச்சினை. ஸ்பெக்ட்ரமா சொத்துக்குவிப்பா, ஹெலிகாப்டரா ஆதர்ஷா, சாரதா சிட் ஃபன்டா மாட்டுத்தீவனமா என்பது தான் பேசுபொருள். ஒரு முதலமைச்சர் கோடிக்கணக்கில் சொத்துக்குவிப்பதுக்கும், ஒரு கடைநிலை அதிகாரி நூறு ரூபாய் லஞ்சம் வாங்குவதற்கும் இடையில் உள்ள தூரம் ஒருவரின் கைகளை பரிசுத்தமாகவும், இன்னொருவரின் கைகளை கறைபடிந்ததாகவும் சித்தரிக்கின்றன.

இவர்களுக்கு பின்னே எத்தனை சித்தால்கள், நடவுக்கு போகும் பெண்கள், ரயில் நிலையங்களில் கொய்யாக்கூடை தூக்குபவர்கள் என எவ்வளவு பேரின் உழைப்புகள் உறிஞ்சப்பட்டுக்கொண்டிருக்கின்றன. மண்டையில் விழும் கோடாரியின் குருதியை துடைத்தபடி, உதட்டால் முத்தமிடவது போலத்தான், ஊழல் அரசியல்வாதிகளை கொண்டாடுவதும்.

காங்கிரஸ், திமுக, பாஜக, அதிமுக என்று விதி விலக்கெல்லாம் இல்லை. ஆட்சியதிகாரத்தில் ஊழல் என்பது ஒதுக்க முடியாத ஒன்றாகிவிட்டது. தமிழகத்தை பொறுத்தவரை திமுகவுக்கு ஸ்பெக்ட்ரம் , அதிமுகவுக்கு இந்த சொத்துக்குவிப்பு வழக்கு. இந்த  லெஸ் தென் கிரேட்டர் தென் கேமில் இன்றைக்கு அதிமுக தான் பரிசுத்தம்.

-மணிகண்டன் நமஷ்
18-10-2014


Tuesday, October 14, 2014

போதையென்னும் பெருஞ்சக்கரம்!!


பேருந்து பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சையை நோக்கி புறப்பட்டது. சாமியார் மடம் நிறுத்தத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் இடுப்பில் ஒரு குழந்தையோடு ஏறினார். குழந்தைக்கு 2 வயதிருக்கும். பேருந்து வேகமெடுத்தது. தனியார் பேருந்தென்பதால் வழிநெடுகிலும் ஆட்களை ஏற்றிக்கொண்டது, கூட்டம் கொள்ளளவை தாண்டியது. அந்தப்பெண்மணி நெரிசலுக்குள்ளானாள். குழந்தை வியான் வியான் என்று பீரிட்டது.

அழுத குழந்தையிடம் செல்போனை காட்டி கை நீட்டினேன். மறுப்பேதுமின்றி மடியில் வந்து அமர்ந்தது.  ‘ஏம்மா…. எல்லாம் உள்ள போ உள்ள போ’ என்ற கண்டக்டரின் கனீர் குரல், அந்த பெண்மணியை இரண்டு தப்படி உள்ளே போக வைத்தது. சுற்றி முற்றிப்பார்த்த குழந்தை மீண்டும் விரீர் என்று அழ ஆரம்பித்தது. அழுகை சத்தம் பேரிரைச்சலானது. இது தான் தாய்மையை பிரிதல்.

ஆனால் அன்பு அழவில்லை. அவன் மிகச்சாதரணமாகவே இருந்தான். பிளாட்பார்மில் தூங்க ஆரம்பித்த நாளிலேயே அவன் இதை எதிர்பார்த்திருக்கக்கூடும். எந்த காலையிலும் தான் ஆதரவற்றவனாகலாம் என்பதை அவன் அறிந்திருக்கக்கூடும்.

இந்த நாளை மிகப்பெரிய பரபரப்போடு தொடங்கிவிட்ட நம்மில் பலருக்கு அன்புவை தெரியாது. வேளச்சேரியில் பிளாட்பாரம் மீது கார் ஏறியதில் மூவர் பலி என்ற செய்தியை கடந்த நமக்கு இந்நேரம் வரை அன்புவின் ஞாபகத்தை கொண்டிருக்க வாய்ப்பில்லை.

அன்புவுக்கு பெரிதாக சொந்தக்காரர்கள் இல்லை. தாய் தந்தை மட்டும் தான். தாய் கர்ப்பமாக இருந்ததால், அவன் தம்பியையோ, தங்கையையோ கனவுக்கண்டிருக்கக்கூடும். சாமான்யர்களின் எதிர்பார்ப்பு என்றைக்குத்தான் நிறைவேறியிருக்கிறது.அன்புவின் கனவுகளுக்கும், ஓங்கியொரு முற்றுப்புள்ளியை வைத்தாகிவிட்டது. இச்சமூக பெருங்கடலில் அன்பு நேற்று முதல் தனி மனிதன். இரண்டு நாள் முன்புவரை அதே பிளாட்பாரத்தில் மல்லாந்து படுத்து நட்சத்திரங்களை எண்ணியவன் இன்று முதன் முதலாய் கூரைகளுக்கு கீழே வாழ்வை தொடங்கியிருக்கிறான்.

“இந்தா இவடத்த குந்திகினு தான் வெளையாடுங்க, முந்தாநாத்து ராத்திரிக்கூட தம்பி பாப்பா வேணுமா, தங்கச்சி குட்டி வேணுமானு அம்புவும் அம்மாக்காரியும் வெளாண்டுச்சுங்க. போன மாசம் வரை நார்த் மெட்ராஸுல இருந்துச்சங்களாம். இங்க தரமணி, தாம்பரம்னு பாட்ல் பொறுக்கினு சுத்துனுச்சுங்க. ஆறுமுகம் சமத்துக்காரன்பா. ஒரு நாளைக்கு எப்டிக்கா 100 பாட்லாவது இட்னு வந்துருவான். அந்தம்மா அயிஸ்வர்யா மாசமா இருந்தனால வேளச்சேரி தாண்டி எங்கயும் போவாது. இந்த அன்புப்பய அவன் வயசுக்கு ஒரு பிளாஸ்டிக் பேப்பரவுடமாட்டான். கின்னி எடுத்துன்னு போய் அம்மா ஓட்டல்ல இட்லி கட்டியாந்து இந்தா இந்தாப்புல வச்சு தான் துண்ணுங்க. குடிக்கார ---------- ங்க வண்டியவுட்டு எத்திடுச்சுங்க” வேளச்சேரி பாரதி நகர் பஸ் ஸ்டாப்பில் ஒருவர் அன்புவின் குடும்பத்தை பற்றி ஒருவர் விளக்கினார்.
போதையென்னும் மாபெரும் சக்கரத்தில் சிக்கி அட்ரஸ் இல்லாத ஒரு குடும்பம் சுக்குநூறாகிவிட்டது. நமது வழக்கமான ஆசா பாசங்களில் ஒன்றைக்கூட நினைக்காதவர்களால் மட்டும் தான் பிளாட்பாரத்தில் குடியேற முடியும். அவர்கள் 1BHK வீட்டை  யோசிப்பதில்லை, கார் வாங்குகிற கனவு கிடையாது, மகனை எந்த கான்வெண்ட்டில் சேர்ப்பது என்ற ஏக்கங்கள் இல்லை. இந்த அரசிடம் வாக்காளர் அடையாள அட்டை மட்டுமல்ல குறைந்த பட்சம் ரேஷன் கார்டை கூட அவர்கள் கேட்டதில்லை. கடைசி வரை உயிர் வாழ மட்டுமே வாழ்ந்தார்கள். ஆனால் இந்த மிக நுன்னிய ஏக்கத்திலும் இந்த ஊர் எவ்வளவு கோரமாக காரேற்றி இறக்கியிருக்கிறது.

காரேற்றிய அந்த மூன்று பேரால், அரசுக்கு அன்றைய நாள் அதிகபட்சம் ஒரு 3000 ரூபாய் வருமாணம் கிடைத்திருக்கக்கூடும். அந்த 3000 ரூபாய்க்கு பின்னால் மூன்று மனிதர்களின் இயக்கம் நின்று போயிருக்கிறது. காவலர்களும் அந்த போதை ஆசாமிகளை பிடித்துவிட்டார்கள்.

ஆனால் அன்றிரவு போதையோடு இருந்தது அவர்கள் மட்டும் தானா? காரேற்றியதால் அவர்கள் குற்றவாளிகள். ஆனால் அந்த எண்ணத்தை ஏற்படுத்தியது மது. குற்றம் செய்ய தூண்டியது மது. மதுவை விற்பது அரசாங்கம். அரசாங்கத்தை உருவாக்குவது யார்? நாம் தானே??

இதோ அந்த மூவர் மது அருந்திய டாஸ்மாக் கடை இன்றும் திறந்துவிட்டது. நிறைய பேர் கூடிவிட்டார்கள். ஆறுமுகம், ஐஸ்வர்யா சாப்பிடுகிற அந்த அம்மா உணவகமும் திறந்து தான் கிடக்கிறது. இன்றைக்கும் சில ஆறுமுகங்களும், கர்ப்பினி ஐஸ்வர்யாக்களும் அங்கு பசியாறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்நேரம் அன்பு ஏதோ என்.ஜி.ஓ-வின் அரவணைப்பில் துயிலுறங்கி கொண்டிருக்கலாம் அல்லது தன்னைப்போன்ற பிள்ளைகளுக்கு பின்னே தட்டை ஏந்திக்கொண்டு சாப்பிட காத்திருக்கலாம்.

பேப்பர் பொறுக்குவது, அம்மா ஓட்டலில் சாப்பிடுவது என்ற இலகுவான வாழ்க்கையை வாழ்ந்த அன்புவை முதல்முறையாக போதையென்னும் ஆயுதம் இச்சமூகத்திற்கே சேர்த்து தாக்கியிருக்கிறது. இனி இச்சமூகம் அன்புவை எப்படி பார்க்க போகிறது என்பதைவிட இனி இந்த சமூகத்தை அன்பு எதிர்கொள்ள போகிறான் என்று தெரியவில்லை. சதுரங்க வேட்டை நட்டியின் கதாபாத்திரம் தான் ஞாபகம் வருகிறது.

போதையின் வெறியில் ஒரு சிசு பிறக்கவே அருகதையற்றதாகி விட்டது. தமிழகத்தின் ஏதோ ஒருமூளையில் கைவிடப்பட்ட மூதாட்டி, அத்தனையே ரோசத்தோடு தனியே கிளம்பி வந்தது, வேளச்சேரி பிளாட்பாரத்தில் அகால மரணமடையத்தானா?


கைதானவர்கள் இன்னும் 2 வாரத்தில் ஜாமினில் வெளி வந்துவிடுவார்கள். இதோ நாமும் நுரைக்க நுரைக்க இரக்கப்பட்டுவிட்டோம். இனி என்ன மிச்சமிருக்க போகிறது. நம் நாளை தொடர்வோம்..  

// மணிகண்டன் நமஷ்
14-10-2014

Saturday, September 20, 2014

டெஸ்ட் வெர்ஷன்!!


சென்ற வாரம் நமக்கு பாடம் நடத்திய லெக்சரர் ஒருவர் பேசினார். என்னயெல்லாம் காலேஜுக்குன்னே நேந்துவிட்டுட்டாய்ங்க போல என்கிற தொனியில் இருந்தது அவரது பேச்சு. காலை 8 மணிக்கே காலேஜுக்கு வர வேண்டும். வந்ததும் யூனிட் டெஸ்ட் சூப்பர்வைசிங், அதற்கு பிறகு ஏற்கனவே வைத்து முடிக்கப்பட்ட டெஸ்ட் பேப்பர்களை திருத்தி கொடுக்க வேண்டும்; அதற்குபிறகு முந்தாநாள் வைத்த டெஸ்ட்டில் 50-க்கு 40 மதிப்பெண்ணுக்கு கீழ் எடுத்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட இம்போசிசனை சரிபார்க்க வேண்டும்; அதற்கு பிறகு இம்போசிசன் எழுதாதவர்களை உக்கி போடச்சொல்ல வேண்டும்.

பெண்கள் என்றால் இம்போசிசனை இன்னும் டபுளாக்க வேண்டும். இப்படி மாலை 6.30 மணி வரை பல அதற்கு பிறகுகளை கடக்க வேண்டியுள்ளது என்று பெரு மூச்சு அடித்தார். எம்.இ முடித்துவிட்டு எப்படியெல்லாம் மல்லுக்கட்ட வேண்டிருக்கு, இதையெல்லாம் ஏதாச்சும் உங்க பேப்பர்ல எழுதறது என்று அலுத்துக்கொண்டார்.

இவர் இப்படியென்றால் மாணவர்கள் பாடு அதுக்குமேல். யூனிட் டெஸ்ட், சைக்கிளிக் டெஸ்ட்,  வீக்லி டெஸ்ட், மந்த்லி டெஸ்ட், பீரியாடிக்கள் டெஸ்ட் என்று வாழ்க்கையே அவர்களுக்கு டெஸ்ட் வெர்ஷன் ஆகிவிடுகிறது. இதில் சில நானோ டெஸ்ட்களும் உண்டு அவை வகுப்பு நேரங்களில் வைத்து முடிக்கப்படுபவை. நிறைய கல்லூரிகள் நாமக்கல் பிராய்லர் கோழி கல்வி முறைக்கு வந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன. இப்படி பல சம்பவங்கள் நடக்கும்போது இந்த சமூவத்தை பத்தி எங்கே சிந்திப்பது. கேப் கிடைக்கும் போது பொங்கினாலும் நிமிர்ந்து நில் ஜெயம் ரவியாக செம அடிவிழுகிறது.

இப்படியெல்லாம் நொந்து நொங்கு மட்டையாகி சமூவத்துக்குள் நுழைந்தால் அங்கே ஆரம்பிக்கிறது ஜிங் ஜிங்க்கான். உண்மையில் கல்லூரியை முடித்து வெளியே வருகிற புது மாப்பிள்ளை பவுஸெல்லாம் இரண்டே மாதம் தான். ஐடி என்னும் பெட்ர்மாக்ஸ் லைட்டே தான் வேண்டுமென்று கம்பெனிகளுக்கும் கன்சல்ட்டன்சிகளுக்குமாய் பரபரக்கிற நேரத்தில் கூடை வச்சுருக்கவங்களுக்கெல்லாம் பெட்ரமாக்ஸ் லைட் கொடுக்க முடியாது என்று வழியனுப்பி வைப்பார்கள் எச்.ஆர்-கள். அதிலும் கொடுமையான விஷயம் சூப்பர் சிங்கர் நடுவர்கள் ரேஞ்சிற்கு அவர்கள் தருகிற டிப்ஸ் இருக்கிறதே.

ஐடி ஐடி என்று அலைந்து திரிந்துவிட்டு, ஆண்டவரே பேக்டோரில் பிபிஓ-வையாவது ஓப்பன் செய்யும் என்று போனால் கல்லா பெட்டிகளை திறந்து வைத்துக்கொண்டு கன்சல்டன்சிகள் காத்திருக்கும். இந்த நிலையை எத்தனை நாள் தான் தாக்குப்பிடிப்பது கழுதை குடிசையாயிருந்தாலும் பரவாயில்லையென்று கிடைக்கிற வேலையை தேட ஆரம்பிக்கிற போது, மனசு முழுமுதல் சென்னைவாசியாக பக்குவப்பட்டிருக்கும். உண்மையில் சொல்லப்போனால் விஐபி ரகுவரன் கேரக்டர் தனுஷ்கள் நிஜத்தில் ரொம்பவே குறைவு.

பிரபல நிறுவனத்தில் வேலை. மாதம் 20 ஆயிரம் வரை சம்பளம். மாணவர்கள், இல்லத்தரசிகள், ஓய்வு பெற்றவர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். இந்த போஸ்ட்டரில் பிரபல நிறுவனம் என்ற வார்த்தை தான் ஆக கேட்சியான ஒன்று. ’அடிச்சான் பார்ரா ஆண்டவன், கிண்டி ஸ்டேஷன்ல அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர’ என்று மனசுக்குள் மானாவாரியாய் மத்தளம் கொட்டும். பிரபல நிறுவனம் வேறல்லவா....!! இந்த ஒற்றை வார்த்தை ஐபிஎம், டிசிஎஸ், டிவிஎஸ் என்று எல்லாவற்றையும் கனவு காணவைக்கும். அங்கே போனாதால் சதுரங்க வேட்டை சாயலில் நட்டிகள் மருந்து டப்பாவை மார்க்கெட்டிங் செய்யச்சொல்லி உற்சாக உரை நிகழ்த்தி கழுத்தறுப்பார்கள்.

ஆத்தீ.. இந்த பொழப்பே வேணாம்.... இரண்டு மாசம் ஊருக்கு போய் ஓய்வெடுக்கலாம் என்றால், அங்கே அக்கம் பக்கத்திலுள்ள கலக்டர்களும், மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ-க்களும் நம்மை கேள்விகளால் துளைத்து எடுத்துவிடுவார்கள். அவர்கள் பேசுகிற பேச்சில் வீட்டாருக்கே சோறு போட கூச்சம் வந்துவிடும். அதையும் துடைத்து வாழ பழகுபவர்களுக்கு தியாகியென்று பேஸ்புக்கில் பேஜ் ஓப்பன் செய்யலாம்.

இதுக்கு மேல என்னாத்த சொல்ல.. மெத்தட மாத்துங்கய்யா.....

// மணிகண்டன் நமஷ்
20-09-2014
  

Monday, July 28, 2014

ஆடி மாதத்தில் ரம்ஜான்!!


வழக்கமாக தீபாவளிக்கு கொஞ்சம் முன்போ பின்போ வருவதாக அறியப்பட்ட ரம்ஜான் இந்தாண்டு கொஞ்சம் முன்பாக ஆடி மாதத்திலேயே வந்துவிட்டது. ஒரு பக்கம் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி இன்னொருபுறம் அம்மன் கோயிலில் ஆடி கூல். இதுவல்லவா ஒருமைப்பாடு.

நேற்றிரவு அலுவலகம் முடித்து தி.நகர் வந்திறங்கிய போது ஏதோ லாகூரிலோ, கராச்சியிலோ நிற்பது போல் ஒரு ஃபீல். தீபாவளிக்கும் பொங்கலுக்கும் சற்றும் சளைத்ததல்ல இந்த ரம்ஜான் என்று தான் தோன்றியது. சில மால்களில் ஈத் முபாரக் என்று பிறை கூட வைத்திருக்கிறார்கள்.

விவரம் தெரியாத நாளில்  வெறும் அரசு விடுமுறையாக கடந்து போன ரம்ஜான், அப்பாவின் நண்பர் முகம்மது அலி வீட்டு பலகார சுவையால் அறிமுகமானது. பாப்பாநாடு, பட்டுக்கோட்டை பக்கம் சித்திரை மாதத்தில் கரம்பயத்து மாரியம்மனுக்காக காய்ச்சப்படும் பச்சை அரிசி கஞ்சியை கொஞ்சம் காரமாக நோன்பு கஞ்சியாக அறிமுகப்படுத்திய அப்பாஸும், ஈசுப்பும் நிறைந்த பால்யத்தை கரம்பயத்து மாரி பறித்தேவிட்டாள்.

அலுவலகத்துக்கு அருகேயுள்ள எல்லீஸ் சாலையில் சுக்கு டீக்கடை வைத்திருக்கும் கனியக்கா, மாம்பலம் ஸ்ரீநிவாசா தியேட்டர் அருகே இட்லிக்கடை போடும் புகாரி தாத்தாவாலும், நோன்பு கஞ்சியின் வாசம் வருடந்தோறும் வீசிக்கொண்டிருக்கிறது.

புகாரி தாத்தாவை பார்க்கும் போதெல்லாம் ஊரில் ஹாஜான் ராவுத்தர் ஞாபகம் தான் வரும். கே.ஆர். தியேட்டரில் இரண்டாம் ஆட்டம் முடித்து வருபவர்களுக்கு ஹாஜான் ராவுத்தரின் பின்னிரவு இட்லிக்கடை தான் பசியாறும் திருத்தலம். பின்னாளில் கே.ஆர். தியேட்டர் மண்டபமானதில் ஹாஜான் ராவுத்தரின் வருமானமும் குறைய சில நாட்கள் கடை போடுவதில்லை என்று சொன்ன போது “வசீகரா, செந்தூரப்பூவேனு போடுறதுக்கு பதிலா ஏதாவது செகண்ட் ரிலீஸ் படத்தை போட்டா என்னவாம்” என்று மாம்பல ஸ்ரீநிவாசா தியேட்டரரருகே நமைந்து கொண்டிருந்த புகாரி தாத்தா ஞாபகம் தான் வந்தது.

இதேபோல் தான் கனியக்காவும். 50 ஐ தொடுகிற வயது. கோட்டைப்பட்டினத்தில் வாக்கப்பட்ட கனியக்காவின் கணவர் சாலை விபத்தொன்றில் இறந்துவிட தன் சித்தப்பாவின் ஆதரவில் திருவல்லிக்கேணியில் குடியேறி 20 ஆண்டுகள் ஓடிவிட்டது. ஒரே மகன் புதுப்பேட்டையில் பைக் உடைக்கும் கடையொன்றில் வேலை பார்க்கிறான். இன்று மாலை சுக்கு டீ அருந்திய போது,   ‘என்ன கனியக்கா நாளைக்கு உங்க பெருநாளு பிரியாணியுண்டா?’ என்றேன்.

“அட போ மணி இந்த ஊருல என்ன பெருநாளு. இங்கயும் பள்ளிவாசல் ஜமாத்தெல்லாம் இருக்கு ஆனா கோட்டைப்பட்டுனத்த மறக்க முடியுமா. எங்காளுகவிட்டு புள்ளைகனு இல்ல எல்லாரும் புள்ளையலும் அத்தா அத்தானு எங்க வூட்டாரயே சுத்தி சுத்தி வருங்க, ஜமாத்தே களைக்கட்டும். அதெல்லாம் இங்க வருமா, ஏதோ பிரியாணிய கிண்டுனோமா, தொழுதோமானு தான் மெட்ராஸுல எல்லா பெருநாளும் கழியுது” என்றவர் கண்ணில் மல மலவென மல்லிப்பட்டணத்து கடல் வலிந்தது.

“இருந்துட்டுப்போவுது நாளைக்கு சாப்புட வந்துரு மணி” என்ற அவருக்கு காஸா, இஸ்ரேல், பாலஸ்தீன், பாகிஸ்தான், துப்பாக்கி, ஜிகாதி, ஸ்லீப்பர் செல் என்ற வார்த்தைகளில் ஒன்று கூட தெரியாது. இவர்கள் மட்டுமல்ல பத்து பேர் கொண்ட கேங்கில் பிரியாணி கேட்டு நச்சரிக்கப்படுகிற உசேன்களும், கான்களும் இப்படி தான். இவர்களும் நம்மவர்களே...


இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் நட்பூஸ்...

Friday, May 9, 2014

வெற்றியை அல்ல திறமையை போற்றுவோம்:வழக்கம் போலவே இந்தாண்டும் +2 முடிவுகள் வெளியாகிவிட்டன. 8 லட்சம் பேரில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களை எப்போதும் போலவே கொண்டாடி கொண்டிருக்கிறோம். இந்த மூவரையும்  கொண்டாடி தீர்ப்பது தவறல்ல.ஜெயித்தவர்கள் போற்றப்பட வேண்டியவர்களே. ஆனால் இங்கு வெற்றியை புரிந்து கொள்வதில் தான் குழப்பமாகவுள்ளது.

சத்தியமாக அது புரியவேயில்லை, இங்கே ஏதோ ஒன்றில் ஜெயிக்க வேண்டும், அதற்காக ஓட வேண்டும், அந்த வெற்றிக்காக எத்தனை தோல்விகளை வேண்டுமானாலும் சந்திக்கலாம், எத்த்னை உணர்வுகளை வேண்டுமானாலும் நசுக்கலாம்.

ஏன் ஒரு 16 வயது மனிதனை படிப்பை ஒன்றை மட்டும் கொண்டு தான் கணக்கிட வேண்டுமா.ஏன் விளையாட்டு,சமூக சேவை, இசை, பாட்டு, இலக்கியம் என்று எல்லா திறமைகளையும் ஒரே அளவில் நிறுத்தி தேர்வுகளை நடத்த கூடாது. இங்கே எல்லாமே பொருள் சார்ந்த வாழ்க்கையை சுற்றி இயங்குவது தான் இந்த அவலத்திற்கு ஆதார காரணம்.

இதுவரை இந்த தமிழகம் எத்தனையோ ஸ்டேர் ஃபர்ஸ்ட்களை பார்த்துவிட்டது.அவர்கள் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். நானூறு மார்க் எடுத்தவன் கூட சமுதாயத்திற்கு ஏதோ ஒன்றை ஏதோ ஒரு வழியில் செய்து விடுகிறான்,ஆனால் இந்த ஸ்டேட் ரேங்க் பார்ட்டிகள் என்ன செய்கிறதென்று தெரியவில்லை.

ஸ்டேட் ரேங்க் எட்ப்பவர்கள் பெரும்பாலும் டாக்டராக ஆவேன் என்று சொல்கிறார்கள் ஆனால் அவர்களால் ஒரு இலவச மருத்துவமனை உருவாக்கப்பட்டது என்று செய்தி இல்லை. இவர்கள் தானே ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகிறார்கள், ஊழலும் ஒழிந்த மாதிரியில்லையே. லண்டனில் 2 கோடி மக்கள் தொகை ஃப்ளோட்டிங் பாப்புலேஷன்,  ஆனால் இங்கு சென்னையிலிருந்து விழுப்புரம் போகவே காத்திருப்போடு சேர்த்து 5 மணி நேரம் ஆகிறது. இந்த ஸ்டேட் ரேங் எடுத்த பொறியாளர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லையா?? இப்படியென்றால் இவர்களுக்கான சலுகைகள் ஏன், லைம் லைட்டிற்கு கொண்டு வருவத்ன் காரணம் என்ன? இவர்களை கொண்டாடப்படுதலின் தேவை தான் என்ன..

ஒரு வேளை வருஷா வருஷம் ஒரு மூனு பேர கொண்டாடனும் என்று மரபாகிவிட்டதா?

ஊத்தங்கரைக்கு அருகே ஏதோ ஒரு விகாஸில் கரண்ட் போனாலும் ஜெனரேட்டர் உதவியோடும், பொறுக்கியெடுத்த ஆசிரியர்களின் 24 மணி நேர வழிகாட்டுதலோடும் கிட்டத்தட்ட 2 ஆண்டு காலம் ஒரே +2 பாடத்தை வேறு வேலைகளின்றி முழுக்க முழுக்க படித்து 1193 மதிப்பெண்ணை எடுத்த மாணவியை கொண்டாடும் அதே வேளையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஒரு குக்கிராமத்தில் அப்பாவை இழந்து தாயுடன் கூலி வேலைக்கு சென்று, அன்றாடம் நேரம் கிடைக்கும் போது மட்டும் அதையும் மின்வெட்டு விழுங்க அந்த கொடுரங்களை சமாளித்து 967 மதிப்பெண் வாங்கியிருக்கிறாள் ஒரு மாணவி.

இதில் எதை கொண்டாடுவது. ஒன்று விமானத்தில் சென்று சூரியனை பார்த்திருக்கிறது. இன்னொன்ரு ஒரே உந்தலில் இரண்டு தென்னை மரங்களை தாண்டியிருக்கிறது. இதில் கொண்டாடப்பட வேண்டியது எதுவென்ரு யோசியுங்கள்.

ஸ்டேட் ரேங்க் எடுத்தவர்களை தாங்கி தாங்கி படம் பிடித்து  டி.வி.க்களிலும் பேப்பர்களிலும் போடுவதன் மூலம் ,சராசரியாக தேர்ச்சியுற்ற லட்சக்கணக்கானவர்களின் மனதில்  தாழ்வு மனப்பாண்மையை விதைக்கப்பட்டு விடுகிறது.

முதல் மூன்று மதிப்பெண் வாங்கிய பிள்ளைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் இனிப்பு ஊட்டும் அதே வேளையில், ஏதோ ஒரு கடைக்கோடியில் தோற்றுப்போன துன்பத்தில் தற்கொலை செய்து கொள்ளும் பிள்ளையின் உடலை தழுவி அழும் பெற்றோர்களும் இருக்க தானே செய்கிறார்கள்.

நிறைய முறை சொல்லியாயிற்று மீண்டும் சொல்வது பொருத்தம் என்று நினைக்கிறேன், ‘நான் கற்ற கல்வி இந்த சமூகத்துக்கு உதவவில்லை என்றால் சுட்டுக்கொள்வேன்’ என்றார் அம்பேத்கர்.போவான் ,போவான் படித்தவன் மட்டும் தவறு செய்தால் அய்யோவென்று போவான் என்றான் பாரதி. இங்கு சுட்டுக்கொள்பவர்கள் குறைவு ஆனால் ஐயோ என்று போய்க்கொண்டிருக்கிறவர்களோ ரொம்பவே அதிகம்.

வெற்றி தோல்விகளை அல்ல திறமையை கொண்டாடுவோம்.

Sunday, April 20, 2014

நாம்..திரும்பி பார்த்தலை விட சுகமானதாக எதைச்சொல்ல முடியும். பால்யத்தில் சுவைத்த முதல் சேமியா ஐஸ்ஸில் ஆரம்பித்து கல்லூரி தென்னை மரத்தடியில் கடைசியாக வாங்கிய காற்று வரை எத்தனையோ சுகமான நினைவுகளால் நிரம்பியுள்ளது வாழ்க்கை. என்றாலும் இது எல்லாவற்றையும் தேடல் என்ற பெயரில் எளிதில் தொலைத்துவிடுகிறோம். எதை தேடுகிறோம் என்று தெரியாமல் தொலைப்பதுதான் இந்த வாழ்வளித்த சாபம்.

3 வருடங்களுக்கு முன்பு மஹா கல்லூரியில் கைகோர்த்து சுற்றிய அசோக், மிதுன், ஆனந்த்ராஜ், கவுதம், மகி, அஜ்மீர், எஸ்.மணி, குண்டு சரத் என்ற நண்பர்கள் பட்டியலில் ஒருவர் கூட இன்று உடன் இல்லாதது தான் இந்த பிராய்லர் கோழி கல்விமுறை தந்த பரிசு. அவலம், அசிங்கம், நிராகரிப்பு, காத்திருப்பு, கேவலம், அவமாணம் என்ற அனைத்திற்கும் ஒருவனை தாரை வார்த்து கொடுக்கிறது இந்தக் கல்விமுறை. கல்லூரி நட்பின் பிரிவிற்கு பேர்வெல் டேக்கு நான் வாசித்த இந்த கவிதை தான் மருந்து போட்டு வருகிறது. https://www.youtube.com/watch?v=8fp8eKvMMj8

உண்மையில் நண்பர்களால் சூழப்படுகிற உலகம் பிறந்த குழந்தையின் பாதத்தை போன்றது. ஆனால் திடீரென தேடல் என்ற பெயரில் பாதங்கள் பழுக்க பழுக்க நம்மை நாமே மிதித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்துவிடுகிறோம். இதில் மொத்த ஈரமும் வற்றிவிடுகிறது.ஆதியில் உயிர்ப்பிழைத்து கிடப்பதற்காக ஆப்ரிக்காவில் இருந்து இடம்பெயர ஆரம்பித்த மனித இனம், இன்றும் அதிலிருந்து விடுபடவில்லை.

இடம்பெயர்தலின் வலியை எந்த மொழியின் வார்த்தைகளிலும் அடக்கிவிட முடியாது. மாம்பலம் ரயில் நிலையத்தில் ஊதா சட்டை யூனிபார்முடன் சாத்துக்குடி போடும் செல்வத்திற்கு ஒரத்தநாடு பக்கம். தஞ்சை ஜில்லாவில் அறுப்பு முடிந்த வயக்காடுகளில் கிடக்கும் மாட்டு வண்டி தடத்தில் தவம் கிடந்த அவரது கால்களை, காலம் மாம்பலம் ரயில் தடத்திற்கு கொண்டு வந்துவிட்டிருக்கிறது.

இன்றைக்கும் காவேரிப்படுகைகளில் விவசாயம் பார்க்க வேண்டிய இளைஞர்கள் பலர் விசா வாங்கிக்கொண்டு கிடைத்த வேலையை செய்ய சிங்கப்பூர், மலேசியா பறக்கிறார்கள். ஊரில் ஜாலியாக சுற்றித்திரிந்த அவர்களில் பலர் இன்று பேஸ்புக்கில் அரசியல் பேசுகிறார்கள், தமிழ் தேசியத்தை முன் வைக்கிறார்கள். தமிழண்டா சொல்கிறார்கள். இது எல்லாம் ஒரு இடைவெளி ஏற்படுத்திய அக்கறை.

அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் ஊக்கு விற்கும் நரிக்குறவ சிறுமிக்கு இரக்கப்பட்டு ஊக்குகளை வாங்கிய நண்பன், அது இது நிகழ்ச்சியின் சிரிச்சா போச்சு ரவுண்டில் நரிக்குறவர்களை கலாய்க்கும் காட்சிக்கு விழுந்து விழுந்து சிரிக்கிறான். இது தான் நாம். இவற்றை சுட்டிக்காட்டினால் என்ன பாஸ் அறச்சீற்றமா? பொங்குறியலோ? என்று டைட் ஸ்மைலி போடுகிறார்கள். அதிலும் இந்த நடுநிலைவாதிகள் தொல்லையை போல் உலகில் வேறொன்றும் இல்லை. நியூட்ரல் என்பவர்கள் மனிதர்கள் மட்டுமன்றி எந்த ஜீவ ராசியிலும் சேராதவர்கள் போல் தான் பேசுகிறார்கள்.

அதிமுக அமைச்சர்களை கலாய்க்கும் நம்மில் பலர், எந்த இடத்திலும் குனியாமல் தான் நிற்கிறோமா. அவர்களது குனிதலில் கூட ஒரு நேர்மை இருக்கிறது, வெளிப்படைத்தன்மை இருக்கிறது. ஆனால் நாம் அப்படியா, எங்கே குனிகிறோம், எதற்கு குனிகிறோம் என்பது கூட தெரியாமல் தான் குனிந்து வருகிறோம்.

//மணி 

Thursday, February 13, 2014

காதலர் தினம் வந்துருச்சு

இன்று ‘தி இந்து’ வில் வெளியானது

“காதலில் இளைக்கா பர்ஸ் ஒன்று வேண்டும்”, “ஸ்பீட் பிரேக்கர்  தேடா காதல் வாய்க்குமா”  இந்த மாதிரியான பழைய வரிகளை  மடித்து மடித்து  ஸ்டேட்டஸ் போடுகிறார்கள் என்றால் காதலர்  தினம் வந்துவிட்டதென்று அர்த்தம்.

காதல் ஜோடிகள் இந்த தினத்தை எப்போ எப்போ என்று காத்திருக்க,சூப் பார்ட்டிகளோ ‘நம்மல் நோக்கி ஏதோ மிகப்பெரிய ஆபத்து வருது,எல்லோரும் பாதுகாப்பான இடத்துக்கு போங்க’ என்று டாஸ்மாக் பக்கம் ஒதுங்கிவிடுவார்கள்.

நெட்டு, ட்விட்டு, என்று வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் சாட்டிங்கில் ப்ரொபோஸ் செய்தால், ஹ்ம்ம்ம்… என்ற பதிலில் காதல் பூக்கிறது. அந்த காலத்தில் டி.ஆரும், பாரதிராஜாவும் லவ் ப்ரோபசல் சீன்வைக்க எவ்வளவு மெனக்கிட்டிருப்பார்கள்.

நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்ல, உன்ன என் அண்ணேன் மாதிரி நினைச்சேனேடா, நாம அப்படியா பழகுனோம், ஐ ஆம் என்கேஜ்டு, என்ற வார்த்தைகள் உலகில் அதிகம் ஒலிக்கும் தினமும் இது தான். இதனால் காதலர் தினத்தில் என்ஜாய் பண்ணுபவர்களுக்கு நிகராக எக்ஷா தேடி அலையும் கூட்டமும் அதிகமிருக்கும்.

பிரின்ஸ்பாலும், எச்.ஓ.டி.யும் டிரஸ் கோடில் வரச்சொல்லி கத்திய போதெல்லாம் கண்டு கொள்ளாதவர்கள். பிப்ரவரி 14-ல் மஞ்சள், பச்சை என்று காதல் ட்ரஸ் கோடில் வந்து ராமராஜனுக்கு சவால் விட்டுக்கொண்டிருப்பார்கள்.

யார் விட்ட சாபமோ.. எல்லா காதலர் தினமும் இப்படி வொர்க்கிங் டேஸிலேயே வந்து தொலைக்கிறது. காலேஜிற்கு மட்டம் போட்டு, காதலர் தினத்தை கொண்டாட நினைத்தால், அந்த கோபுரங்களில் யூனிட் டெஸ்ட், இண்டர்னல் டெஸ்ட் என்று ஏவுகனை தாக்குதல் நடத்தி விடுவார் கிளாஸ் அட்வைசர். எனவே காதலர்களின் கவலை போக்க காதலர் தினத்தை உலக அரசு விடுமுறை தினமாக அறிவித்துவிடலாம்.

கடற்கரைகளில் காதலர்களை விட வயிற்றெரிச்சல் பார்ட்டிகளின் கூட்டம் அதிகமிருக்கும். அவர்கள் நொடிப்பொழுதில் இழுத்து விடும் மூச்சில் எழுபது ஜோடிகளுக்கு ப்ரேக் அப் வாய்க்குமென்றால் பாருங்கள். அவர்களின் கண்ணில் படாமல் காதல் செய்யவில்லையென்றால் காதலர் தினம் கருப்பு தினமாகிவிடும்.

நாள் முழுக்க ஜாலியாய் காதலித்துவிட்டு, மாலையில் காதலிக்கு மிக்கி மவுஸ் கொடுத்து, மறுநாள் காலை பேப்பரை பார்த்தால் தூக்கி வாரி போடும். ‘பூங்காவில் உற்சாக காதல் ஜோடி’ என்ற வர்ணிப்போடு காதலியுடனான போட்டோ அரைப் பக்கத்திற்கு வந்திருக்கும். வீட்டில் யாருக்காவது மாலை பேப்பர் படிக்கும் பழக்கமிருந்தால், அன்று மாலையே ஜோலி சுத்தமாகிவிடும்.

மாட்டிக்கொள்ளாமல் காதலர் தினத்தை கொண்டாட பீச்களை தவிர்ப்பது ரொம்பவே நல்லது. இல்லையெனில் அடையாறுக்கு அந்தபக்கம் லவ்வர்ஸ் பீச் என்று ஒன்றை உருவாக்கி, லவ்வர்ஸ் அடையாள அட்டையுடன் வரும் காதலர்களை மட்டும் உள்ளே விடப்படும் என்ற நிலை உருவான பிறகு பீச் பக்கம் போகலாம்.

காதலர் தினத்தன்று சினிமாவுக்கு செல்வதென்று முடிவு செய்தால், மாஸ் ஹீரோக்களின் படங்களை விட மொக்கை படங்கள் தான் காதலர்களின் முதல் சாய்ஸ். இதில் கொடுமை என்னவென்றால் காதாலர்களை கண்டு ரசிக்கவே வெளியே வரும் கூட்டம், என்ன மொக்கை படம் என்று தெரியாமல் போன பிப் 14-லிலேயே ரிசர்வேசன் செய்திருக்கும்.

இந்த முன் அனுபவம் உள்ள காதலர்கள், கூட்டத்திற்கு பயந்து சிட்டி லிமிட்டை தாண்டி தைரியமாக ரிசார்ட்களை நாடினால் உருட்டுக்கட்டை அமைப்புகள் குடி கும்மியடித்து, துவை துவை என்று துவைத்து அனுப்பிவிடும். அதிலிருந்து தப்பிக்க காதல் ஆதரவு பேசும் கட்சிகளின் ஆபீஸுக்குள் புகுந்து காதல் செய்வது சாமர்த்தியம்.
-மா.மணிகண்டன்
     

Wednesday, January 22, 2014

ஸ்டேட்டஸ் போடுறாங்களாமாம்.....


ஒன்னாவது வார்டு கவுன்சிலர்ல ஆரம்பிச்சு ஒபாமா வரைப்போயி வாலன்டியரா வாறுர ஆன்லைன் அரசியல். ஒரு கால் கிலோவுக்கு காதல், போரடிச்சா புரட்சி, அரூன் ஐஸ் க்ரீம் டப்பி மாதிரி இப்படி ஃபேஸ்புக்ல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு டைப்.
பய்ப்புளைக போடுற ஸ்டேட்டஸ வச்சே அதுக யாருனு கண்டுபிடிச்சிசலாம் :

எழுத்தாளர்:
தம்மாத்தூண்டு பெண்ணியம். முன் நவீனத்துவம், பின் நவீனத்துவம். எதிர் எழுத்தாளருக்கு கொஞ்சூண்டு டோஸ் , இதுதான் நம்மூரு எழுத்தாளர்களின் பிரதான ஸ்டேட்டஸ். அப்புறம், “நேற்றைக்கு அந்திமத்தின் பிந்திக்கு மேல் ஒரு ஈரானிய படம் பார்த்தேன் ரொட்டித்துண்டுகளுக்காக அல்லாடும் நாயகனிடம் லெக் பீஸ் பிரியானியாக வந்து சேர்கிறாள் நாயகி’’ என்று உலக சினிமாவின் உன்னத ஹார்ட் டிஸ்காக மாறுவார்கள்.

ஐ.டி துறையினர் : 
             “ஃபார்ம் வில்லா, சிட்டி வில்லா, ஆங்கிரி பேர்ட்ஸ், டோமினோஸ் பீட்சா”னு ஏதாவது அலுச்சாட்டியங்கள் இருந்தா அந்த ப்ரொஃபைல உத்து பாத்தீங்கன்னா அது அது ஐ.டி பீபுள்ஸோடதா இருக்கும்.

காலேஜ் யூத்ஸ் :
            கண்டபடி ரியாக்ஷன் தர்ற சந்தானம் படத்தையோ, பழைய கவுண்டமணி படத்தையோ அப்லோட் பண்ணிவச்சுகிட்டு, மை ரியாக்ஷன் டூரிங் எக்ஸாம், வைல் லெக்சரிங்னு, ஷேர் பண்ணி மேட்ச் பண்ணுவாங்க. இல்லாட்டி ஏதாவது கார் பக்கத்துல நின்னுகிட்டு ஓனர் மாதிரியே போஸ் கொடுக்குறது மாதிரியான படங்கள அப்லோட் பண்ணி அரஜாகம் பண்ணுவாங்க.

பொண்ணுங்க :
எல்லாத்தையும் விட பெரிய அட்டூழியம் நம்ம புள்ளைக போடுற ஸ்டேட்டஸ் தான். ஏதாவது பாட்டுல வர ஃபீலிங்கான வரிகள மட்டும் தனியா சுட்டு கொஞ்சம் டிங்கரிங் பண்ணி கவிதையாக்கிடுவாங்க. இன்னும் சில பொண்ணுக என்ன ஸ்டேட்டஸ் போடுறதுனு தெரியாம மிக்கி மவுஸையும், பிங்க் ரோஸையும் போட்டுட்டு எஸ் ஆகிடுவாங்க. சாட்ல ஒரு பையன் பத்து ஹாய் சொன்னாதான் அவங்கள்ட்டேயிருந்து ஒரு ஹ்ம்ம் வரும்.அவ்ளோ உஷாராமாம்..

அரசியல்வாதிகள்: இன்னைக்கு அரசியல்வாதிகளோட அலப்பறையும் ஃபேஸ்புக்குல கொடிகட்டி பறக்க ஆரம்பிசிடுச்சு. இன்னைக்கு தலைவர் தட்டி கொடுத்தாரு. மக்கள் எல்லாரும் எங்களத்தான் விரும்புராங்க. போராட்டம் பயங்கிற வெற்றி.என்னாவொரு எழுச்சி,,,,, இந்த வகையறா ஸ்டெட்டஸ தட்டிவிட்டு ஓட்டு வாங்கறது மாதிரியே லைக்ஸயும் அள்ளுவாங்க.

காதலர்கள்:
காதலிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் பெரும்பாலான ஆளுங்க  ஃபேஸ்புக் பக்கம் எட்டி பார்க்குறதே இல்ல.அப்படியே வந்தாலும் வின்னைத்தாண்டி வருவாயா மாதிரி ரொமெண்டிக் பட வசனத்தையோ ,போட்டோவையோ ஷேர் பண்ணி வைப்பாங்க.  மொபைல்ல எஸ்.எம்.எஸ் பூஸ்டர் முடிஞ்சா மட்டும் ஃபேஸ்புக் சாட்டிங் மூலம் காதல் வளர்ப்பாங்க.

சினிமா நட்சத்திரங்கள்:
நேத்தைக்கு சூட்டிங்கில செம காமெடி மொத்த யூனிட்டும் சும்மா ஜமாய்ச்சிட்டோம். கிராமத்துல சூட்டிங் நடந்தப்ப கேரவன தேடி கேள்வரகு கூள் வந்தது. அந்த ஊர் மக்களோட அன்ப மறக்கவே முடியாதுனு அயல் கிரகவாசி மாதிரி ஸ்டேட்டஸ் போடுறது நம்ம நட்சத்திரங்களோட ஸ்டைல்.
                                    இந்த புக்ல இம்புட்டு இருக்கா கண்ணகட்டுதுடா சாமிங்கிறியளா