Saturday, September 14, 2013

இன்றியமையாதவை......மனித வாழ்க்கையில் நல்லது கெட்டது என்பன பிரிக்க முடியாத இலவச இணைப்புகள். அதுபோலத்தான் பெருநகரத்தின் காற்றும். தீதும் நன்றும் அதில் ஒன்றாய்  திரிந்தலையும். ஆக்ஸிஜனை கொண்ட அதே காற்றில் மதுரவாயலோரம் மலையளவு நிற்கும் குப்பையின் துகல்களும் கல்ந்தே இருக்கிறது. இந்த இரண்டிற்கும் அப்பால் இன்னொன்றும் சென்னைக்காற்றில் கலந்திருக்கிறது. இங்கு பலருக்கு அது தான் இரண்டாம் ஆக்ஸிஜன்.

வேறென்ன, “வணக்கம் சென்னை நான் ரமேஷ் பேசறேன். நீங்கள் கேட்டு கொண்டிருப்பது என்று நம்மைவிட நம் மீது அதிகம் உரிமை கொண்டாடி தடதடக்கும் ரேடியோ ஜாக்கிகளின் குரல்கள் தான் அவை.  

‘சென்னைக்குப் போய் மொதல்ல யார்ட்டயாவது அசிஸ்டெண்ட்டா சேரனும்,அப்படியே மூனு வருஷத்துக்கு அப்புறம் பாலா மாதிரி பெரிய டைரக்டராவோ இல்லை சசிக்குமார் மாதிரி டைரக்டர் கம் நடிகராகவோ ஆகிடனும்” என்ற கலர் கலர் கனவுகளோடு திருச்சியிலும்,மதுரையிலும், சேலத்திலும் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தேறும் கனவுக்கண்கள் இன்னும் வற்றவில்லை.இந்தக் கனவுகளை கட்டமைத்ததில் பெரும்பாலான பங்கு ராகத்திற்கும் தாளத்திற்கும் தான். 

கத்திப்பாரா வந்திருச்சு, கிண்டிலாம் வாங்க என்று கண்டக்டர் கத்தும் போது புஷ் பேக்கை நிமிர்த்தி இயர் போனை சொருகினால் கனவுகளுக்கு பாலிஷ் போடுவது போல் எஃப்.எம்.ல் கந்த சஷ்டி கவசம் ஓடிக்கொண்டிருக்கும். அப்போது நல்ல சகுனம்டா என்று கொக்கரிக்கும் மனது, பின்னாளில் அதே எஃப்.எம்.ல்  ‘ஆறு மனமே ஆறு’ கேட்பதும் காலத்தின் அதிதீவிரமான விளையாட்டுகளில் ஒன்று.

       பொறியியல் முதலாமாண்டு என்பதை மசாலா ஆண்டு என்று தான் சொல்லவேண்டும்.அந்தளவுக்கு ஆங்கிலம்,கணக்கு,வேதியியல்,இயற்பியல் என +2வில் படித்த எல்லாமும் இருக்கும் என்ன அந்தந்த பாடப்பெயருக்கு முன்னாள் இன்ஜினியரிங் என்றோ டெக்னிக்கல் என்றோ ஒரு வார்த்தைக்கூட இருக்கும் அப்படிதான் 4 வருடங்களுக்கு முன்னர் எலக்ட்ரானிக் டிவைஸஸ் அண்ட் சர்க்யூட் என்று ஒரு பேப்பர் இருந்தது. அதுக்கு ரெக்கார்ட், லேப், பிராக்டிக்கல் போன்ற கொடுமைகள் வேறு. உலகில் ஆகப்பெரிய துன்பியல் சம்பவம் உண்டென்றால் அது இன்ஜினியரிங் மாணவர்கள் ரெக்கார்டு சைன் வாங்குவது தான்.  ‘என்ன டேட் மாத்தி போட்டுருக்க, இது எக்ஸ்பரிமண்ட் நம்பர் 13 ஆச்சே  ஆர்டரே இல்லாம எழுதிருக்க, என்ன இதுக்கு கீ சரியில்ல, ரிசிஸ்ட்டரா இது, ஏதோ தீபாவளிக்கு கொழுத்துற பாம்பு மாத்திரை மாதிரி இருக்கே, ஆம்பியருக்கும் ஓஹ்முக்கும் வித்தியாசம் தெரியாதா போய் மாத்துங்க”என்று அக்டோபரில் எழுதி முடித்த ரெக்கார்டுக்கு டிசம்பரில் தான் சைன் கிடைக்கும்.
அப்படியொரு டிசம்பர் பெருநாளின் மாலை நேரமொன்றில் இன்பரசி மேடத்திடம் ரெக்கார்டை நீட்டினேன். எல்லாவற்றிற்கும் ரைட் போட்டுக்கொண்டே வந்தார். எனக்கு பின் ரெக்கார்ட் கையெழுத்து வாங்க இரண்டு பேர் வேறு. நேரம் மாலை 5.30ஐ தாண்டியது. பஜனை மாதமென்பதால் கல்லூரிக்கு பக்கத்தில் இருந்த முருகன் கோவிலில் ’கோகுலத்தில் மாயக்கண்ணன்’ என்று சம்பந்தமே இல்லாமல் ஒரு பாட்டு ஓட ஆரம்பித்தது. ரைட் போட்டு கொண்டிருந்த மேடம், சட்டென வாட் நான் சென்ஸ் என்று கத்தினார், ஆண்டி கிளைமேக்ஸ் ஓடும்போது அமிதியாகும் திரையரங்கம் போல் அறையே நிசப்தமானது. என்னை அறியாமலேயே கோகுலத்தில் மாயக்கண்ணன் பாட்டுக்கு லைட்டான வாய்சில் லிப் மூவ்மெண்ட் கொடுத்து தொலைத்துவிட்டேன்.

அதை கண்டுபிடித்துதான் மேடம் டென்ஷன் ஆகிவிட்டார். பின்பு வழக்கம் போல கடுப்பாகி ஸாரிக்கு மேல் ஸாரி கேட்டு மறுநாள் மதியம் 12 மணிக்கு ரெக்கார்டு சைன் வாங்கி, மாலை பேட்சில் யுனிவர்சிட்டி பிராக்ட்டிக்கல் முடித்தேன். பாடல் நம்மையே நம்மிடமிருந்து இழக்க செய்கிறது அல்லவா??.
     
      அயோத்தியாப்பட்டினம் அருகே ஒரு பாணிப்புரி கடை உண்டு.அங்கே தினமும் ஹெட் செட் மாட்டிகொண்டு வரும் சத்தியக்குமார் அண்ணன், மிகவும் நெருக்கமானவர். தனது ஐ-பாடில் கண்ணதாசன் முதல் மதன் கார்க்கி வரை அனைத்து பாட்டையும் குவித்து வைத்திருப்பார். நான் வேறு கவிதைலாம் எழுதுவேன் என்று சொல்ல, எங்க சொல்லு பாப்போம் என்று ஆரம்பித்தது எங்கள் நட்பு. தினமும் அந்த பாணிப்புரி கடையில் சந்திக்கும் நாங்கள் ராக ரசிகர்களாகவும் கவிதைப்பிரியர்களாகவும் செய்த அட்டூழியங்கள் ஏராளம். 
           திடீரென இளம்  ஆன்மீகவாதி ஒருவரின் ஆன்மீக முகாம் ஒன்று எங்கள் கல்லூரியில் நடத்தப்பட்டது (வீடியோவில் சிக்குவதற்கு முன் சிங்கம் எங்க காலேஜுக்கு தான் வந்து போச்சு. புரியுதா யாருன்னு). ஆன்மீக முகாம் காரணத்தால் கல்லூரிக்கு ஒரு வாரம் லீவு விட்டார்கள். விடுதியிலிருந்து கிளம்பிய நான் நேரே கடைக்கு போய் சத்தியக்குமார் அண்ணனோடு சேர்ந்து ஒரு ப்ளேட் மசால் பூரி சாப்பிட்டுவிட்டு அவருக்கு டாட்டா காட்டி பேருந்தெறினேன். கல்லூரி திறந்த போது பின்னாடியே செமஸ்டரும் வர அதிகம் அவுட்டிங் போக முடியாமல் போனது.( நாம பெரிய படிப்பாளிலாம் கிடையாது வார்டன் விடல. )

      இந்த நிலையில் தேர்வுகள் முடிந்து மீண்டும் ஒரு வாரம் லீவு. திரும்ப வீடு வாசம் அதனால் கடைக்கு விஜயம் செய்ய முடியவில்லை. லீவு முடிந்து கல்லூரி திறந்த முதல் நாளே சத்தியக்குமார் அண்ணனின் முகம் நினைவுக்கு வர அன்று மாலையே பாணிப்புரி கடைக்கு போனேன். ஆள் வரவில்லை.  ‘சத்தி அண்ணேன் முன்னாடியே வந்துட்டு போய்ட்டாரா ’ என்று கடைக்காரரிடம் கேட்டுக்கொண்டே அவர் வீட்டுக்கு போகும் சந்தினை பார்த்தால், அந்தப்பகுதி முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள். ‘போன வாரம் ஹெட்செட்ட மாட்டிகிட்டு வாக்கிங் போறேன்னு தண்டவாளத்துல போயிருக்காரு, பின்னாடி ஏற்காடு எக்ஸ்பிரஸ் தட்டிருச்சு” என்ற கடைக்காரரின் குரல் ஆயுளுக்கான வருத்தத்தை அப்படியே இதயத்தில் இறக்கி வைத்தது.

புத்தி சுவாதீனம் கெட்டவர்களுக்கு காகிதங்கள் மீதும் பாடல்கள் மீதும் அப்படி என்னதான் பிரியமோ. பட்டுக்கோட்டை கோட்டைக்குளம் சுடுகாடு அருகே, பினமெரியும் மாலையொன்றில் தலைவிரி கோளத்தோடு பழுப்பேறிய தந்தி தாளை படித்த பொண்ணுரங்கு நினைவை இங்கு  மாம்பலத்தில் கிளறுகிறார் ஒரு வயதான பாட்டி. நானிருக்கும் அப்பார்ட்மெண்டின் கீழே 3-வது வீட்டு வாசலில் நைந்த நைட்டி சகிதம் பழுப்பேறிய பேப்பர்களோடு உட்கார்ந்திருப்பார் அந்தப்பாட்டி . அதே மாலை வேளையென்றால் பி.சுசீலாவாகவோ, எம்.எஸ்.சுப்புலக்‌ஷ்மியாகவோ மாறியிருப்பார். உடனே வீட்டினுள் இருந்து தொப்பையும் தொந்தியுமாக வரும் ஆசாமி பாட்டை நிறுத்த சொல்லி கையிலிருக்கும் கட்டையால் மட்டார் மட்டாரென்று நான்கு போடுவார்.

ஆனால் பாட்டியோ ரிவர்ஸ் வெர்ஷன். தலையில் தட்டியதும் சீராய் ஓடும் பழைய டிரான்சிஸ்டர் போல அப்போது தான் அவர் வேகமாக பாட ஆரம்பிப்பார். ஒரு சனிக்கிழமை மாலை குறையொன்றுமில்லை பாடிய அவரை உற்றுப்பார்த்தேன். கல்லெறிந்ததில் கலைந்து பறந்த குயிலைப்போல் பாட்டை நிறுத்திக்கொண்டு உள்ளே புறப்பட்டார்.

மின்சார ரயில் யாசகனின் ‘அதோ அந்த வானம் போல’, மாநகர பேருந்தில் புட் போர்டு அடிக்கும் மாணவர்களின் ‘ஆடிப்போனா ஆவணி’,மன்னடியின் புழுதி சந்தில் கசியும்  ‘எனக்கென பொறந்தவ ரெக்கை கட்டி பறந்தவ’ ஸ்பென்சரிலும்,எக்ஸ்பிரஸ் அவன்யூவிலும் சுற்றித்திரியும் ட்யூடுகளின் ஹெட்போனுக்குள் கிறங்கும் ஜஸ்டின் பைபர் என எங்கும் பாடல் எதிலும் பாடல். பாடல்கள் வெறும் கீதங்கள் அல்ல வாழ்வியலின் அடையாளம். பணக்காரர்கள் குடித்துவிட்டு பப் பார் என்று சுற்றும் அதே நேரத்தில்  அடுத்த வேளை உணவுக்கு உத்தரவாதமில்லாமல் வயிறொட்டி கிடக்கும் ஆப்ரிக்க பழங்குடிகள் ஆடிப்பாட மறப்பதில்லை.பின்ன ஆராரோவில் ஆரம்பிக்கும் மனித வாழ்க்கை மூச்சு நின்றபின் சுவைப்பதும் டண்டனக்காவை தானே..


                                // மணி

No comments:

Post a Comment