Friday, August 16, 2013

தலைவா---- :-)


தலைவா!!!- 

அயல்நாட்டு படங்களை தழுவி மதராசப்பட்டினம், தெய்வத்திருமகன், தாண்டவம் போன்ற இறவாத தமிழ்க்காவியங்களை தந்த ஏ.எல்.விஜய், நிச்சயம் சென்றாண்டு 3 இன் 1 டி.வி.டி.யில் நாயகன்,தேவர் மகன், நாட்டாமை போன்ற படங்களை ஒரே நேரத்தில் பார்த்திருக்க வேண்டும்.

“அப்பாக்களை கொல்லும் வில்லன்களை அறச்சீற்றம் கொண்டு அழிக்கும் கதாநாயகன்கள்” என்னும் தமிழ்சினிமாவின் பழைய பஞ்சுமிட்டாய் தான் படத்தின் ஒன்லைன். இந்த ஒன்லைனை ஒப்புக்கொண்ட தயாரிப்பாளரை பாராட்டுவதா இல்லை சீராட்டுவதா என்று தெரியாமல் தமிழ்ச்சமூகம் திகைத்து நிற்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

டைட்டில் கார்டில் உலகத்தலைவர்கள் பெயர் மற்றும் பிறந்த வருடங்களை ஓட்டிக்காண்பித்துவிட்டு முதல் ஃப்ரேமிலேயே வில்லனை காட்டுகிறார்கள் கூடவே விநாயகரும். ‘நாலையிலிருந்து மொத்த மும்பையும் என் கண்ட்ரோல்டா’ என்று வில்லன் டயலாக் பேசியதும், அவர் ஒரு டான் என்றும் டானுக்கெல்லாம் டானாகாத்தான் ஏதோ ட்ரை பண்ணுகிறார் என்றும் அந்த வசனத்தின் வேகத்தில் புரிந்தது.

அடுத்த நொடியே தமிழர்கள் வாழும் பகுதியான மும்பை தாராவி நீராவியாகிறது. பம்பாய் படத்தில் பார்த்ததை போல் குர்தா போட்ட பயில்வான்கள் பல்க்காக வந்து, பெட்டிக்கடைகளில் இருக்கும் முறுக்கு டப்பாக்களை தேடிப்பிடித்து உருட்டுக்கட்டைகளால் அடித்து நொறுக்க்க்குகிறார்கள். ஊரே கலவராக்காடாகி கிடக்க ஸ்பாட்டிற்கு வரும் இளைஞர் சத்யராஜ் அங்கே இருப்பவர்களை காப்பாற்றுகிறார்.

ஆனால் இன்னொரு டானான நாசர், ‘விட்டுறேன்… இன்னையோடு எல்லாத்தையும் விட்டுறேன்’ என்றபடி அன்பு மகன் சந்தாணத்தோடு அயல்நாடு எஸ்கேப் ஆக பார்க்கிறார். ஆனால் சத்யராஜ், பொன்வண்ணன், மனோபாலா போன்ற சூடான இளைஞர்கள்ப்படை, ‘நீங்க இப்டி போய்ட்டா இந்த சனங்கள யார் காப்பாத்தாறது என்று விக்கும் வீரமுமாக தடுத்து நிறுத்துகிறது. இருந்தும் நோ சொல்லிவிடுகிறார் நாசர்.

அப்போது தான் சத்தியராஜை துளைக்க வரும் குண்டை அவரது இல்லாள் ‘என்னங்க….’ என்று ஓடிவந்து தன் மீது வாங்கிக்கொண்டு உயிர் துறக்கவே ராமதுரையாக இருக்கும் சத்யராஜ் அண்ணாவாகிறார். அதாவது டானுக்கெல்லாம் டான்.

தான் டானாக இருக்கிற விஷயம் மகனுக்கு தெரியக்கூடாது என்று ஆஸ்த்திரேலியா அனுப்பிவைத்துவிடுகிறார். அங்கே அருப்பெரும் டான்ஸராகி ஆஸ்த்திரேலியவாசிகளின் மைக்கெல் ஜாக்ஸனாக அறியப்படுகிற விஜய் ஒரு மினரல் வாட்டர் கம்பெனி நடத்துகிறார். கூடவே ப்ரோவாக சந்தாணம். டைமிங் ரைமிங் என்னும் பழைய பருப்பை ரொம்ப நாட்களாகவே வேக வைத்துக்கொண்டிருக்கிறார்.

அடுத்த உருப்படி அமலா பால்.விஜயின் டான்ஸ் ட்ரூப்பில் சேருகிறர். டடடாட…. டாடடையின்…. டாடடையின் டாடையின் என்னும் கமலின் புன்னகை மன்னன் பிட்டைப்போல வரும் ஒரு சீக்வென்சில் காலொடிந்த அமலாவை விஜய் கதக்களிக்க ஆடவைக்கிறார்.

ஆத்தீ…..அப்போது அமலா பாலின் கால்களை அவ்வளவு க்ளோஸ் அப்பில் காட்டியிருக்க தேவயில்லை. தயவு செஞ்சு அமலா பாலோட கால இன்னொரு படத்துல க்ளோஸ் அப்ல காட்டாதீங்க ப்ளீஸ்..என்று கதறும் தமிழ் ரசிகனுக்கு படைப்பாளிகள் பார்த்து ஏதாவது செய்ய வேண்டும்.

அமலாவை கண்டதும் காதலிக்கிறார் விஜய், கூடவே சந்தானமும். சந்தானம் தன் காதலை சொல்ல போகும் போது ஏகப்பட்ட எவர்கிரீன் மற்றும் சோலார் ஸ்டார்களும் ரோஜாவோடு நிற்க ஆஃப் ஆகிவிடுகிறார் சந்தானம்.

இதுகூட பரவாயில்லை விஜய் தன் காதலை சொல்லப்போகும் போது, ‘அகிலாண்ட நாயகன், யூட்யூப் இளவரசன் , புவர் ஸ்டார் என்ற பலப்பட்டங்களுடன் தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக இருக்கும் சாம் அண்டார்சனை, காதலித்து திருமணம் செய்து கொண்டுவிட்டதாக அமலா பால் பெரிய பல்ப் கொடுக்கிறார்.

ஹீரோவாச்சே சும்மாவா அமலா பால் சொல்லும் பொய்யை கண்டுபிடித்து விடும் விஜய் காதலுக்கு ஓ.கே வாங்கி அப்பாவிடமும் அனுமதி பெற அமலாவோடு மும்பை பறக்கிறார். அங்கே தான் அமலா பால் கிரைம் பிராஞ்சில் ஒரு சின்சியர் போலீஸ் ஆஃபிஸர் என்பதும் டான் சத்யராஜை பிடிக்க விஜயை பயன்படுத்தினார் என்பதும், உலகமாக சீக்ரெட், சஸ்பென்ஸ், ரகசியம், ட்விஸ்ட் என்றும் சொல்கிறார்கள்.சிந்து சமவெளி அமலாபால், விஜயை டீஸ் செய்யும் போலீஸா கண்டிப்பா வாழ்க்கை ஒரு வட்டம் தான்.

அப்பறம் சத்யராஜ் செத்து போக, விஜய் வெளை சட்டை ஷேடோ ஜீன் மீசை சகிதம் விஷ்வா பாய் ஆக, மக்களை காப்பாத்த போக … ஷ்ஷப்பா… முடியல…. அதுக்கப்புறம் தான் கொலைகுத்தே இருக்கு. நீங்களும் தேவர் மகன், நாயகன் பாத்துருப்பீங்கன்னு நம்புறேன். எது எப்படியோ ஹீரோ ஹீரோயின் சேர்ந்துடுவாங்க அப்புறம் வில்லன் செத்துடுவாரு இப்படியொரு வித்தியாசமான க்ளைமாக்சோடு முடிகிறது படம்.

இதுக்கு போய் தடையெல்லாம் ரொம்பவே டூ மச்தேன்… என்ன பண்ண அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பான்னு போ வேண்டியதாயிருக்கு.

//மணி

No comments:

Post a Comment