Monday, June 17, 2013

மேளக்காரரின் உலகம்!!

மேளக்காரரின் உலகம்!!

எல்லா திருமணங்களிலும் முதல் ஆளாக ஆஜராகி விடுபவர்கள் இந்த மேளக்காரர்கள் தான். வைகாசி, தை, மாசி போன்ற மாதங்களின்     அதிகாலை பயணங்களில் அவர்களை பேருந்துக்களில் உத்தேசமாக பார்த்திட முடியும். 2 அல்லது 3 மணி அளவிற்கே வீட்டை விட்டு கிளம்பியிருப்பார்கள்.கருகருவென்ற சுருட்டை தலை, மீசையற்ற வட்ட முகம், விசாலமான நெற்றி சந்தனம் மேல் குங்குமம் என எல்லோருக்கும் பொதுவாக பரிச்சயப்பட்டவர்கள் தான் அவர்கள். பட்டிற்கும் பருத்திக்கும் இடைப்பட்டதோர் துணியில் நெய்யப்பட்ட தடித்த கரை வேஷ்டி, ஜிகினா துணிகளில் உறையிடப்பட்ட கெட்டிமேளம், நாதஸ்வரம் என்று அவர்களின் அடையாளங்களே தனி.

எங்கள் ஊருக்கு அருகே அம்புக்கோயில் என்றொரு ஊருண்டு,அங்கு தான் சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்கள் எல்லாம் மேளபார்ட்டிகளை புக் செய்வார்கள். குறிப்பாக சுப்ரமணியம் பார்ட்டிக்கு தான் அவ்வளவு மவுஸ். பாக்கு பழம் வெற்றிலை, கூட சில ஆயிரங்கள் தான் மேளக்காரர்களுக்கு கொடுக்கப்படும் கூலி. சமையல் ஆட்கள், வாழை மரம், சீரியல் பல்ப்புகள் என எல்லாமும் வந்தாலும், மேளக்காரர்களின் வருகைக்கு பின்னர் தான் மண்டபங்களுக்கு கல்யாண கலையே வரும். காபியோ டீயோ முடித்துவிட்டு வாசிக்க ஆரம்பிப்பவர்கள் கெட்டி மேள கொட்டிவிட்டு தான் ஓய்வார்கள், தாலிக்கட்டி முடிந்ததும் கூட்டம் முழுக்க பந்தியை நோக்கி படை எடுக்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் கொஞ்சம் சால்வையை விரித்து கட்டையை சாய்ப்பார்கள்.சில நேரங்களில் விருந்தாளிகளை வரவேற்கும் தேவைக்கரரிடம், பாக்கி வர வேண்டிய காசை கேட்க, பந்தியின் வாசல், பன்னீர் தெளிக்குமிடம் என்று அங்குமிங்கும் தர்மசங்கடைத்தை சுமந்து திரிந்துகொண்டிருப்பார்கள்.           

சென்ற வாரம் திருமணம் ஒன்றிற்காக ஊருக்கு சென்றபோது அதே சுப்ரமணியம் பார்ட்டி தான் அந்த திருமணத்தில் வாத்தியம்.கடைசி முகூர்த்தம் என்பதால் அன்றைய தினத்தில் திருமணம்,காதுகுத்து,புதுமனை புகுவிழா,ஏன் சில கடை திறப்பு விழாக்களும் நிறையவே இருந்தது.நெருங்கிய சொந்தத்தின் திருமணம் நானும் வீட்டாரும் அதிகாலையே மண்டபத்திற்கு சென்றுவிட்டோம். கெட்டிமேளம் முழங்க கல்யாணமும் முடிந்திருந்தது, வாயிலிருந்து குழலை பிரித்த  நாதஸ்வரக்காரர் அந்த ஜிகினா துணிக்குள் லாவகமாய் மூடிவைத்துவிட்டு.  வெற்றிலை பெட்டியை திறந்து ஆசுவாசப்பட்டுக்கொண்டிருந்தார்.அந்த நேரத்தில் என்னை அழைத்த அம்மா , பக்கத்துல கணபதி ஜிவல்லர்ஸ் நகைக்கடை திறப்பு விழா,அப்பா கட்டாயம் போச்சொன்னாரு பிரண்டாம்  போய் ஒரெட்டு தலைய காமிச்சிட்டு வந்திரு என்று சொல்ல  நானும் சென்றேன்.

நகை கடை என்றால் பிரின்ஸ்,லலிதா போல் கனவு காணக்கூடாது, எங்கள் ஊரில் நகைக்கடைகள் எல்லாம் சேட்டு கடை சைசில் தான் இருக்கும். கடைக்கு நுழையும் முன்னரே  தூக்கி வாரிப்போட்டது.சென்னையில் மினிஸ்டர்கள் வருகை, தொழிலதிபர்கள் பிறந்த நாள் போன்ற சுபயோக சுப தினத்தில்  இசைக்கப்படும் அந்த கேரள செண்ட மேளம்.அங்கே தூள் கிளப்பிக்கொண்டிருந்தது,  எதற்கு இதை இங்கே இசைக்கிறார்கள் என்று நெளிந்தேன், நகைக்கடைக்காரர் செட்டியாரு கைல காசு நெறையா இருக்கு செய்ய வேண்டியது தானே என்றான் நண்பன்.செண்டை மேளக்காரர்கள் நம்ம ஊர் கெட்டிமேளக்காரர்கள் போல் இல்லை ,மனோபாலா பாடி தான். மேல்சட்டை கிடையாது செண்டை தொங்க லாவகமாய் துண்டு மட்டும் கட்டப்பட்டிருந்தது.கூலி எவ்வளவு என்று விசாரித்த போது கொஞ்சம் தலை சுற்றியது.

இதுக்கு உஷாவோ , மோகனோ ஏதோ ஒரு மைக் செட்காரரிடம் சொல்லியிருந்தால் கேசட்டிலோ சிடியிலோ செண்டை மேளத்த அருமையா ஓடவிட்டிருந்திருப்பாருல என்று நினைத்துகொண்டேன்.அப்போது  மண்டபத்தில் கல்யாணத்திற்கு வாசித்த கெட்டி மேளக்காரர்கள்,வைபவம் முடித்து அந்த நகைக்கடை வழியே பேருந்தேற சென்றார்கள்.நகை கடையில்  இருந்த செண்டை மேளகாரர்களை அவர்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை என்பது அவர்களது பார்வையிலேயே தெரிந்தது. 

சினிமாக்காரைங்க தான் வெள்ளைக்காரன் வாத்தியத்துல பாட்டு போட ஆரம்பிச்சுட்டான் ஏதோ கல்யாணத்துலையும் காதுகுத்துலையும் மட்டும் நம்ம மேள சத்தத்தை சம்பிரதாயத்துக்காக  சம்பிரதாயமா கேக்குறான் தமிழன்,அதுலயும் இப்புடியா  என்று சுப்ரமணியிடம் ஆர்மோனியப்பெட்டிக்காரர் அலுத்து கொண்டு வேட்டியை இழுத்துபிடித்து நடந்தார்.

அடக்கொடுமையே அப்போது தான் ஆத்தா(பாட்டி ) சொன்னது  ஞாபகம் வந்தது முன்பெல்லாம் கல்யாணத்தில் மேளக்காரர்களுக்கு முன்னராக  திருமணத்தில்  தப்பிசைக்கப்பட்டு தான் தான் தாலி கட்டுவார்களாம்.அப்படி இருக்கையில் ஏதோ ஒருகாலகட்டத்தில் தான் இந்த கெட்டி மேளம் உள்ளே  நுழைந்தது என்பார் ஆத்தா. அவர் சொல்வது உண்மையா என்று தெரியவில்லை ஒரு வேலை இருக்கக்கூடும்,ஆனால் கொஞ்ச நாளைக்கு  ட்றம்பட்டின் ஆதிக்கமும் நம்மூர் விழாக்களில் ஓங்கி தான் இருந்தது. இதோ இப்போது அரசியல்வாதிகளின் தயவில்  கேரள செண்டை.

எல்லா இருப்புகளையும் ஏதோ ஒன்று இடம்பெயர்த்து கொண்டேதான் இருக்கிறது.

//மணி 

No comments:

Post a Comment