Wednesday, July 25, 2012

பிரிவுகள்....


                   
                  யாயி...   ஏன் அழுவுற, பத்து தேசம் தாண்டியா போற ரெண்டு ஊரு தான தள்ளி இருக்கு ஒம்புருசன் ஊரு. அழுவாத_த்தா என்றே மகளை சமாதானப்படுத்தி கொண்டிருந்தார் முத்துச்சாமி பெரியப்பா.சுமதி அக்காவ அழுவாத அழுவாத என்று சமாதானம் செய்த அவர் கண்ணிலும் நீர் ததும்பியதின் காரணம் அன்றைய சிறுவர்களான எனக்கும்,நண்பன் சுப்பிரமணிக்கும், அவன் தங்கை சுபாவிற்கும் எதுவும் புரியவில்லை.எதுக்குடா இவுகல்லாம் கல்யாண வீட்டுல போய் அழுதுக்கிட்டு இருக்காவ என்று சுப்பிரமணி கேட்க, மாப்பிள பொல்லாதவர் போலடா என்றாள் அவனின் தங்கை சுபா.. (அவள் நிறைய தமிழ் படங்கள் பார்த்திருக்க வேண்டும்.) அதற்கேற்றார்போல் தங்கராசு மாமாவும் “சுமதி அழுதது போதும் ம்ம்ம்.. வண்டில ஏறு “ என்றதும், மாலையும் கழுத்துமாய் சுமதி அக்கா தங்கராசு மாமாவுடன் காரில் ஏறி சென்றாள்.தங்கராசு மாமாவின் அந்த எதார்த்த பேச்சு அவரை எங்களுக்கு ஒரு வில்லனாகவே அறிமுகப்படுத்தியது..
                          
                       பெற்றோர்களின் பாசத்தையும் அந்த மகளின் நேசத்தையும் தனது ரோதையின் அச்சாக வரைந்து சென்ற அந்த காரின் வழித்தடங்கள் மறுநாள் எதையோ உணர்த்தியது. அழுவக்கூட பெறக்கென இல்லடா, என் பேத்தி வீட்ல இல்லாதது வீடே வெறிச்சு கெடக்கு என்று கண்ணியம்மா பாட்டி சொன்ன அந்த பிரிவின் வலி பின் ஒரு நாள் எனக்கும் கூட வேறு வழியில் வந்தது ,, அது பத்தாவது முடித்த பின்னர் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்காக  தஞ்சையில் விடுதியில் சேர்ந்து படிக்கும் போது நேர்ந்த பிரிவு வலி.
                   வெள்ளிக்கிழமை ஆனால் ப்ளஸ் ஒன் மாணவர்கள் எல்லாம் ஒரு லெட்டரை எழுதிக்கொண்டு கண்ணீருடன் வார்டன் அரை முன் குழுமி அழுது புரண்டு வீட்டிற்கு சென்று விடுவதுண்டு.பின்பு ப்ளஸ் டு முடித்தப்போது அதே கண்ணீர் வந்தது  ஆனால் இந்த முறை கண்ணீர் வீட்டிற்கு செல்வதற்காக இல்லை, விடுதியை விட்டு பிரிவதற்காக இருந்தது. கல்லூரியிலும் இதே கதை இன்னொரு முறை நிகழ்ந்தது. கல்லூரியில் வகுப்பை கட் அடித்துவிட்டு விடுதியில் வெளியே எவனையாவது பூட்ட சொல்லிவிட்டு உள்ளே படுத்து தூங்கிவிடுவோம். சாப்பிட போகும்போது மட்டும் கல்லூரி ட்ரஸ் கோடிலே சென்று சாப்பிட்டுவிட்டு மீண்டும் பூட்டி துயிலும் படலம் தொடரும்,, அப்பொழுது வலிக்காத வகுப்பு மாணவர்களின் பிரிவு, பின்பு கல்லூரியில் படிப்பை முடித்து வெளியேறும்பொழுது அதற்கெல்லாம் சேர்த்து வலித்தது.. 
                   
                                                                 
                       இந்த வாழ்க்கை எவ்வளவு சுவாரசியமானது.....எவ்வளவு அடர்த்தியானது,,, எதை வெறுத்து ஒதுக்குகிறோமோ  சில நேரங்களில் அந்த பொருளையே நேசித்துருகி, நேசிப்பின் அடுத்த கட்டத்திற்கு அழைத்து  செல்கிறது வாழ்க்கை..
                  மூன்றாவது படித்துக்கொண்டிருக்கும் பொழுது ஒருநாள் இரவு அப்பா பேன்ட் சர்ட் சகிதம் கிளம்பிக்கொண்டிருந்தார் என்னை பார்த்து மனியண்டா அம்மாவ தொந்தரவு பண்ணக்கூடாது, ஆயிய அடிக்காம பாத்துகிடனும், சண்டை போடாம சொல்றத கேட்டுகிட்டு இருக்கணும் என்று சொன்னார், எனக்கும் ஒன்றும் புரியவில்லை, அப்பா எங்கம்மா போவுது என்ற போது, எல்லாம் ஒங்கள வளக்கத்தான் சிங்கப்பூரு போறாருடா என்றது அம்மா..அப்பா ஒரு பி பேக்கை தூக்கிக்கொண்டு பழைய  நடிகர் ரவிச்சந்திரன் போல் சும்மா கெத்தாக சென்றார். 
    
பெத்தபுள்ளைக, கட்டுனது, ஊரு தேசத்தெல்லாம் உட்டுபுட்டு, ஓவர் ஸ்டேயில போலிஸ்காரனுக்கு பயந்து பயந்து ஒரு வாய் சோறு கூட நிம்மதியா திங்க முடியாது ஆயி என்று அப்போதைக்கு சிங்கையிலிருந்து புடிபட்டு வந்திருந்த ராசப்பா மாமா சொன்னபோது அம்மா விம்மி அழுக ஆரம்பித்தாள்.. அதற்குள் ராசப்பா மாமா யாத்தா அழுவாத மாப்ளை  இருக்குற எடத்துல எந்த பிரச்சினையும் இல்லை,  போலிஸ் கெடுபிடியும் கம்மி தான், நாந்தான் கூறுகெட்டு தேக்காவுக்கு ஸ்நேகா வாரானு பாக்க போய் கூட்டத்துல  போலீஸ்காரன்ட்ட  மாட்டிகிட்டேன் எல்லாம் நேரம் என்ன பண்றது,,  இப்போ வேலை சீசன் தான், ஒன்னும் பயப்புடாத, வெள்ளி நம்ம ஊருக்காசுக்கு ஏறிகிட்டு வருது, நல்ல சம்பளமும் கெடைக்கும், அரசாங்கம் எதற்கு வருத்தப்படுகிறதோ அதற்கு அந்த மனிதர் சந்தோசித்தார், அவர் மட்டுமல்ல அவரைப்போல் சிங்கப்பூரில் வாழும் பலருக்கும் அதே மனநிலை தான்.. மாமா ஸ்னேகாவ பாத்தியலா என்று கேட்ட போது கொஞ்சம் கடுப்பானவர்,ஒழுங்கா படி டா என்ற போது அம்மா சிரித்துவிட்ட்டாள்.
                        
             பின்பு ஒருநாள் அப்பா போன் பண்ணியப்போது, உங்க மவனும், மவளும் ஆயி அப்பன் வீங்கெயாயிருக்குதுவ, அப்பா எப்ப வருவாரு வருவாருன்னு நச்சரிக்குதுவ, என்னையும் கல்யாணம் காட்சி நல்லது கெட்டதுக்கு போவ விட  மாட்டேங்குது ரெண்டும் என்று அம்மா சொன்னதும், போன்  என் காதிற்கு வந்தது. வேறென்ன பேச முடியும், அம்மாவிடம் சொன்ன அதே பல்லவி தான்..  

                     உறவுகளை சிதறடித்து போட்டுவைக்கும் சக்தி இந்த பொருளாதாரம் என்னும் பேய்க்கு தொன்று தொட்டு கை வந்த கலை, சத்தியமாக திரைகடல் ஓடி திரவியம் தேடுதலில் தான் எத்தனை வலி...

          இன்றும் கூட பொங்கல் தீபாவளி விடுமுறைக்கு கல்லூரியிலிருந்து ஊருக்கு திரும்பும்போது திருச்சியில் பல பழகிய முகங்களை காண நேரும் அவர்கள் எல்லாம் திருப்பூரில் பனியன் ஆடையகங்களில் வேலை செய்பவர்கள், பண்டிகை நேரத்தில் கண்விழித்து வேலை செய்துவிட்டு விடுமுறைக்கு வீடு திரும்பிக்கொண்டிருப்பார்கள் , திருச்சியிலிருந்து ஊரனிபுரத்திற்கு அரிதாய் வரும் பேருந்துக்காக காத்திருந்து பின் பேருந்தில் ஏறும் பொழுது, அந்த ஒன்னே முக்கால் மணி நேர பயணத்தில் அந்த பழகிய முகங்கள் பெரும்பாலும் , அலைபேசியில் என்ன ஓட்டுறான் இப்ப தான் பால்ப்பன்னைய நெருங்குறான் , இந்த இடத்தில வந்துகிட்டு இருக்கேன், என்று அக்காள், அம்மா, அக்கா குழந்தைகள் என்று உறவினர்களோடு பேசிக்கொண்டே வருவார்கள். அவர்கள் பேசும் அத்தனை வார்த்தைகளிலும் பிரிவின் துயரமும் ஏக்கமும்  நெடியடிக்கும்..   
                                  

                            சில நேரங்களில் சில மனிதர்களை ஏன் பிடிக்கிறதென்றும் சில நேரங்களில் எப்படி அவர்கள் நம் பிரியத்திற்கு ஆளாகிறார்கள் என்றே புரிவதில்லை, வேலை நிமிர்த்தமாக கடந்த மாதம் சென்னையில் மாமாவின் அன்பர்கள் தங்கியிருக்கும் அறையில் குடியேறி இருந்தேன், நான் குடியேறிய ஒரு வாரம் கழித்து புதியவர் ஒருவர் அறைக்கு வந்திருந்தார், மிக அமைதியானவர், ஒருமுறை நான் சாப்பிட சென்றபோது, அண்ணேன் ஞ்சாப்பிட்டியலா என்று கேட்டபோது அவர் தன் வயிற்றிற்கு முன்னதாய்  இரண்டு கைகளையும் நேராக நீட்டி காற்றை பக்கவாட்டில் கிழித்து நமக்கெல்லாம் எட்டு மணிக்கே முடிஞ்சிரும்பா என்றார், பின்பு பேச ஆரம்பித்த போது சொந்த ஊர் ராஜபாளையம் என்றும்,அபுதாபியில் வேலையில் இருப்பதாகவும், ஏதோ தேர்விற்காக சென்னை வந்துள்ளதாக கூறியவர்,ஒரு நாள் மாலை , தம்பி எக்ஸாம் எல்லாம் முடிஞ்சிருச்சு நைட் ஏழு மணிக்கு ஊருக்கு கிளம்பறேன் என்று கூறிவிட்டு ஆறு மணிக்கே ட்ராவல் பேக்கை மாட்டிக்கொண்டு தம்பி போயிட்டுவறேன் என்று கிளம்பியபோது எதையோ இழப்பதை போல் இருந்தது ஒரு பத்து நிமிடம் கூட அந்த சகோதரரிடம் பேசியிருக்க மாட்டேன், ஆனால் அத்தனை அன்போடு பத்தரமா போங்க அண்ணே என்றேன், அந்த பிரிவின் பிரக்ஞையற்று சிரித்துக்கொண்டே  அவர் கடந்து போனார்.

                   இதே போல் கல்லூரியிலும் ஒரு அனுபவம் உண்டு ஒரு பெண் பார்ப்பதற்கு அப்படியே மறைந்த என் சித்தப்பா மகள் சாயலிலேயே இருப்பதால், அவளிடம் நானாகவே பேசினேன், அவள் ஊர்க்கூட எங்கள் பகுதியில் தான் என்றதும், அவள் என் தங்கையாகவே பட்டாள். அந்த சென்னை அறை நபர் சிரித்துக்கொண்டே சென்றதற்கு எதிராய், இந்த கல்லூரி பெண், முறைத்துக்கொண்டே பிரிந்து சென்றாள், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தம் மட்டுமல்ல அன்பும் நஞ்சுதான் என்று உணர்த்தியது அந்த பிரிவு..      
             
                     ஒருமுறை ஒரு ஜூனியர் மாணவனோடு உரசல் ஏற்பட்டு கைகலப்பு வரை சென்றது பின்பு அவனோடு மட்டுமல்ல, அவன்சார்ந்த மூன்றாம் ஆண்டு தோழர்கள்  (ஒரு சிலரை தவிர்த்து ) அனைவரையும்  தவிர்த்துவிட்டேன், அவர்களும் அப்படியே என்னை தவிர்த்தார்கள்.. ஆனால் இப்பொழுது நினைக்கும் பொழுது அந்த மாணவன், "அண்ணா சேவிங் ரேசர் இருக்கா, இன்னைக்கு கிளாஸ் செம்ம மொக்கனா நீங்க ஊதிப்போன ரெய்னா மாதிரியே இருக்கீங்க" என்று அவன் அன்று சொன்ன ஞாபகமும்  அவன் அத்தனை அன்போடு பழகியதும் தான் நினைவிற்கு  வருகிறது மற்றவர்களிடமும் இப்படி நிறைய நினைவுகள் நெகிழும் வண்ணம் நிறைந்து கிடக்கிறது. இப்படி அந்த ஜூனியர் மாணவர்களோடு நேர்ந்த பிரிவு என்னைப்பக்குவ படுத்தியதோர் பிரிவு..      
   
             இப்படி வாழ்க்கையின்  நீண்ட நெடிய பயணத்தில், எத்தனையோ இழப்புகள், நிரந்தரமின்மைகள், பிரிவுகள் வழியெங்கும் நிறைந்து கிடக்கிறது,, இந்த நிச்சயமின்மைகள் நம்மை சில நேரம் வைராக்கியப்படுத்தவும், சந்தோசப்படுத்தவும், சலனப்படுத்தவும், பக்குவப்படுத்தவும் கட்டமைக்கப்பட்டவை. எல்லோருக்கும் பிரிவுகள் சொல்லி தந்தவை பற்பல .. பிரிவுகள் எப்போதும் நம்மைவிட்டு பிரிவதில்லை அவை  சில நேரம் வரங்கலாயும், சில நேரம் சாபங்கலாயும் வந்திறங்குகிறது.  இதனை ரசித்து வாழ்வதென்பதும் ஏற்றுகொள்வதும் எதிர்பார்ப்பற்ற எளிய உள்ளங்களுக்கே சாத்தியமாகிறது....

இன்னும் பிண்ணுவோம் நினைவுகளை..
//மணி   


1 comment:

  1. Hi Mani,

    Nice work.. keep it up..
    அர்த்தம் பொதிந்த வாக்கியங்கள், எளிய நடையில்

    இந்த வாழ்க்கை எவ்வளவு சுவாரசியமானது.....எவ்வளவு அடர்த்தியானது,,, எதை வெறுத்து ஒதுக்குகிறோமோ சில நேரங்களில் அந்த பொருளையே நேசித்துருகி, நேசிப்பின் அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்கிறது வாழ்க்கை..

    ReplyDelete