Sunday, May 13, 2012

பெயர்....


எங்கள் பகுதி கிராமங்களில் பெரும்பாலும் சிறு பிள்ளைகளை அவர்களின் பெயர்களை வைத்து கூப்பிட வெகு நாட்களாகும், அதுவரை அவர்களின் உடல்வாகு ,அழகு,குணத்தை பொறுத்தே அவர்கள் நாமகாரணம் செய்யப்படுவார்கள் உதாரணமாய் அம்மு,கட்டையன்,சில்லறை,கூல்பானை ராசாத்தி,மதார் இப்படியான பெயர்களிலேயே  பிள்ளைகள் வலம்வருவார்கள்.

பள்ளியில் சேர்த்த பிறகு வருகைப்பதிவெடுக்க ஆசிரியர் அழைக்கும் போதுதான் பிள்ளைகளுக்கு அவர்களின் பெயரைப்பற்றிய பிரக்ஞை வரும்...
எனக்கு தெரிந்த தாத்தா ஒருவர் அந்த காலத்தில் அவர் மகனை பள்ளியில் சேர்க்கும் பொழுது அவர் மகனின் உண்மை பெயரை மறந்து பட்டப்பெயரை முன்மொழிந்தாராம் அதை கேட்டு
தலைமை ஆசிரியர் சிரித்துவிட அச்சிறுவனின் அண்ணன் அவனது நிஜப்பெயரை சொல்லியிருக்கிறார்.
 
அன்று ஒருநாள் மாலை என் மூன்றாவது சித்தப்பாவிற்கு தலைச்சனாய் பெண் குழந்தை பிறந்திருந்தது. நான் குழந்தையை பார்க்க எங்கள் சின்னத்தம்பி(அவர் நிஜ பெயர் ரெங்கசாமி
கடைசியில்பிறந்ததால் சின்னத்தம்பியானார்) சித்தப்பாவோடு மிதிவண்டியில் மருத்துவமனிக்கு சென்றுகொண்டிருந்தோம்.. குண்டு ஆசாரி வீட்டினை கடக்கும் பொழுது மனிகண்டு ஆயிக்கு
ஒரு நல்ல பெற சொல்றா என்றார் சித்தப்பா..
அப்பொழுது நான் ஐந்தாவது படித்ததாய் ஞாபகம். எங்கள் வகுப்பில் இருந்த ரம்யாவை முயலு முயலு என்று அத்தனை ஆசிரியர்களும் அள்ளி கொஞ்சுவார்கள்.
அதற்கு மாறாய் யாரும் கண்டுகொள்ளபடாத தீபிகாவின் பெயரும் நினைவில் வந்தது. இரண்டு பெயர்களையும் சொன்னேன்.எனக்கும் கூட ரம்யா என்ற பெயரை வைப்பதில் தான் பிரியம்
இருப்பினும் மெட்ராஸ் இளஞ்சியம் பெரியம்மாவின் பரிந்துரையில் தீபிகா என்ற பெயரே அவளுக்கு சூட்டப்பட்டது..

அவளுக்கு பின் பிறந்த காரணத்தால் இரண்டாவது பெண்ணுக்கும் தீபிகா போன்ற சந்தத்தில் பெயர் வேண்டுமென்று சுதா சித்தியின் தங்கையும் இன்னபிறரும் திவ்யா என்ற பெயரினை
அவளுக்கு நாமகாரணம் செய்தார்கள். ஆகவே அந்த பெயருக்கும் நானே மூலம் ஆனேன்..
இப்பொழுது தான் புரிகிறது கலைச்செல்வி,நந்தினி,ராஜேஸ்வரி,மேனகா, என்ற வழக்கமான பெயர்களை எங்கள் பகுதியில் மாற்றியதன் பங்கு எனக்கும் உள்ளது என்று..

கடைக்கு செல்லும்  என் தந்தை வழக்கம் போல் மதிய உணவிற்காக இரண்டரை மணியளவில் வீட்டிற்கு வந்தார்..அந்த கோடை மாத்தத்தில் என்னை தவிர என் வீட்டு மற்றைய சிறுவர்கள்
எல்லாம் விருந்தாளி சென்றிருந்தனர்.

அன்றைய பொழுதில் என் சின்னத்தம்பி சித்தப்பா எங்கள் வீட்டுக்கூரையின் ஏறவாரத்தின் முன் பதட்டத்துடன் நின்ற அந்த சித்திரம் இன்னும் நெஞ்சில் மறையவில்லை...

அவர் என்  அப்பாவை நோக்கி அண்ணேன் திவ்யா செத்து போச்சான் அண்ணேன் என்றதும்..

எந்த திவ்யாடா என்று அதட்டலாய் கேட்டார் அப்பா..

சுதா மவ சின்னது தான் என்று கூறினார் சித்தப்பா...

எப்புடியாண்டி என்று ஒப்பாரியோடு திண்ணையிலிருந்த  கிழவி மாரடித்து கொண்டே கேட்டாள்...

வெள்ளெரிக்காய கடிச்சுகிட்டு தொட்டில கெடந்த புள்ளைக்கு தொனடையில வெள்ளரிக்கா சிக்கி செத்துபோச்சு என்று தேம்பலுடன் சொன்னார் சித்தப்பா....
சுதா சித்தி குழந்தை திவ்யாவை  தூக்கிக்கொண்டு ஏதோ திருமணத்திற்காய் பக்கத்து ஊருக்கு சென்றிருந்தாள்.. சென்ற இடத்தில் தான் இப்படி நடந்தது...

பிள்ளையின் அப்பா சந்திரன் சித்தப்பா வெளிநாட்டிலிருந்து போன்மேல போன்போட்டு புலம்பினார்  கொஞ்ச நேரத்தில் திவ்யா வீட்டிற்கு கொண்டு வரப்பட்டாள்..
முழுதாய் பால் குடித்துவிட்டு தூங்குவதை போல் அசையாமல் கிடந்தாள். உட்காரும் குழந்தையவள். உட்காந்து கொண்டே அம்ம அம்ம என்று துள்ளுவாள்..
வாயொழுக செர்லாக் தின்றதே நான் அவளை  கடைசியாய் பார்த்த ஞாபகம்..
லேசாக சிரிக்கவும் செய்தாள்... புள்ளைய கொண்டு போய் கொன்னுப்புட்டியேடி  என்று சுதாவை  கிழவி திட்டினாள்..
ஒரு சில மணிநேரத்தில் பச்ச புள்ள உடம்பு தாங்காது தூக்குங்கப்பா என்று ஒரு குரல் ஒழித்தது.. உடனே தொட்டில் கட்டி குழந்தை கிடத்தப்பட்டு எடுத்து செல்லப்பட்டாள்..
அம்மா மற்றைய சித்திகளெல்லாம் தொட்டிலை அழுதவாறே தொடர்ந்தனர். சோகத்தின் பிரக்ஞையற்று நான் இருந்தபோது  இனி திவ்யா வராதாடா என்று பக்கத்து வீட்டுபையன் கேட்டப்போது
கண்களில் நீர் தழும்ப சற்று வருத்தமாய் இருந்தது...
பின்னர் ஆண்டுகள் பல கடந்தபோது என் தாயின் கனவில் ஒரு சிறு பிள்ளை வருவதாயும்  திவ்யா தான் அது என்று குறிபார்த்ததில் உறுதி செய்யப்பட்டு.
இன்று வீட்டில் திவ்யா வணங்கப்படுகிறாள்..திவ்யா இருந்திருந்தால் எப்படி இருக்குமென்ற கற்பனையில் எனக்கு தோன்றிய முகவாக்கில் இன்று ஒரு பெண் தங்கையாய் கிடைத்திருக்கிறாள்..
ஆனால் அவளும் அத்துணை பாசமாய் இல்லை. திவ்யா இறந்தபோது நானிருந்தது போலவே...

//மணி
No comments:

Post a Comment