Friday, March 23, 2012

திருவாசகத் திருத்தலம் ஆவுடையார்கோயில் ஒரு பார்வை....

 தமிழகத்தின் கலை நயத்தினை பெரும்பாலும் பறைசாற்றியவை கோவிலும் சிற்பங்களுமேயாகும். இந்த வடிவில் பல கோவில்களும் சிற்பக்கொடங்களும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வந்தன இந்த வகையில் நான் மிகவும் கண்டு பூரிப்படைந்த ஒரு கோவிலை பற்றி தான் எழுதுகிறேன்..

ஆவுடையார்கோயில் ( திருப்பெருந்துறை ) புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து 13 கீ.மி தொலைவில் உள்ளது இவ்வூர்...
ஆவுடையார்கோயில் எனது ஊரிலிருந்து நாற்பது மைல் தொலைவில் உள்ளது இந்த ஊர்...

முதலில் எனக்கு இந்த கோவிலை பற்றி அவ்வளவு பரிட்சயம் இல்லை.. இடையில் எங்கள் கல்லூரியில் நான் மூன்றாமாண்டு படிக்கும் போது அறிமுகமான தங்கை அட்சயா புதுக்கோட்டை மாவட்டம் என்ற போது பக்கத்து ஊரென்று பழக ஆரம்பித்த போது தான் தெரிந்தது அவள் புதுகை மாவட்டம் ஆவுடையார்கோயில் என்று..

பின்னர் அவசரமாக இணைய தளங்களில் தேடிய போது ஆவுடையார்கோயில் பற்றி பல மெய் சிலிர்க்கும் தகவல்களை கிடைக்கபெற்றேன்..

பின் ஒரு நாள் நான் ஆவுடயார்கோயிலுக்கு செல்வதென்று முடிவெடுத்து பின் தனிமையில் சென்று பிரம்மித்துவிட்டு வந்தேன்..பிறகு எனக்கு தோழமையான தம்பி அரவிந்தனை துணைக்கு அழைத்து கொண்டு இன்னொருமுறை சென்றேன்.. அப்பொழுது தான் அவன் ஒவ்வொரு விசயங்களையும் விளக்கி கூறும்போது சற்றே அதிசயப்பட்டு போனேன்..
ஆவுடையார்கோயில் பழங்காலத்தில் திருப்பெருந்துறை என்று அறியப்பட்டிருக்கிறது.. பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையாகவும் சோழ நாட்டின் தெற்கு எல்லையாகவும் இருந்தது என்பதற்கு கீழ்காணும் கம்பரின் பாடலில் சான்று உள்ளது
கடல் கிழக்கு தெற்கு கரைபெரு வெள்ளாறு
குடதிசையில் கோட்டைக் கரையாம் - வடதிசையில்
ஏனாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம்
சோனாட்டிற் கெல்லையெனச் சொல்..
      என்றும்
வெள்ளா றதுவடக்காம் மேற்குப் பெருவெளியாய்
தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார
ஆண்ட கடல் கிழக்காம் ஐப்பத் தறுகாதம்
பாண்டிநாட் டெல்லைப் பதி

இந்த பாடலில் குறிப்பிடப்படும் வெள்ளாறு வடக்காம் என்று வருகின்ற சோழ நாட்டின் தெற்கு எல்லையாகவும் பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையாகவும் இருந்து சிறப்புப் பெற்ற அந்த வெள்ளாறு இன்றளவும் குன்றாச் சிறப்போடு விளங்குகிறது..
               
         சுமார் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த திருக்கோயிலினை திருவாசகம் அருளிய மாணிக்கவாசகரால் எழுப்பபட்டது. இங்கு தான் திருவாசகமும் எழுதப்பட்டது. இதனை மக்கள் திருவாசகத்திருவூர் என்றும், பூலோக கையிலாயம் ,சிவபுரம், சதுர்வேதிமங்கலம் என்றும் போற்றுவர். : மதுரை பாண்டிய மன்னனின் சபையில் அமைச்சராக இருந்த மாணிக்க வாசகர் மன்னன் உத்தரவுப்படி குதிரை வாங்க இப்பகுதிக்கு (திருப்பெருந்துறை) வருகிறார்.அப்போது இங்கு சிவாகமங்கள் ஒலிக்கும் ஒலி கேட்க அங்கு சென்று பார்க்கையில் ஞானகுருநாதர் ஒருவர் வீற்றிருப்பதைக் கண்டார். தன்னை ஏற்றுக்கொண்டு உபதேசமளிக்கும்படி மாணிக்கவாசகர் கேட்டுக் கொள்ள, குருவும் ஒப்புக்கொண்டார்.உபதேசம் கேட்டு சிவநிஷ்டையிலிருந்து கலைந்த மாணிக்க வாசகர் குரு இல்லாதது கண்டு சிவபெருமான்தான் குருவாக வந்தது என்று தெரிந்து கொண்டார்.உள்ளம் உருகி பாடினார்.குதிரை வாங்க கொண்டு வந்த பணத்தில் (இப்போதுள்ள)கோயில் கட்டினார். சிவதொண்டில் ஈடுபடலானார். குதிரை வராத செய்தி கேட்டு மன்னன் மாணிக்கவாசகரை பிடித்து சிறையில் அடைத்தார்.சிவபெருமான் நரிகளை பரிகளாக்கி(குதிரை) அவரே ஓட்டிக் கொண்டு மதுரை வந்து மன்னனிடம் ஒப்படைத்தார்.ஆனால் இரவிலேயே குதிரைகள் எல்லாம் நரிகளாகிப் போக மன்னன் மாணிக்க வாசகரை வைகை ஆற்றில் சுடு மணலில் நிறுத்தி தண்டிக்க வைகையில் வெள்ளம் வந்தது.கரையை அடைக்க சிவபெருமான் கூலியாளாக வந்து பிட்டு வாங்கி தின்று விட்டு வேலை செய்யாததால் பிரம்படி வாங்க அந்த அடி எல்லோர் முதுகிலும் விழ, வந்தது இறைவன் என்பதைத் தெரிந்து கொண்ட பாண்டிய மன்னன் மாணிக்க வாசகரின் காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டார். இந்த சிறப்பு வாய்ந்த திருவிளையாடற்புராண கதை நிகழ காரணமானது இக்கோயில் ஆகும்.
திபெத்தும் திருப்பெருந்துறையும்:
இமயமலையில் உச்சிக்கு அப்பால் அடிவாரமாக அமைந்தள்ள திபேத்தில் ஓங்கி வளர்ந்த மரங்களே இல்லை. அப்படி இருக்கின்ற மரங்களோ குறு மரங்களாக இரண்டரையடி உயரத்திற்கு மேல் வளருவதில்லை. இப்படி மரங்களே இல்லாத திபேத்தில் உள்ள புத்தர் ஆலயத்தை பெரிய பெரிய மரங்களைக் கொண்டு கட்டியிருக்கிறார்கள். அங்கே அது பெரும் வியப்பிற்கு உரியதாக விளங்குகிறது. இந்திய எல்லையில் இமயமலைச் சரிவில் அல்மோரா - காலபானி போன்ற பகுதிகளில் தான் பெரிய மரங்கள் உள்ளன. இங்கிருந்து கால் நடையாக இந்த இமயமலையைக் கடக்க ஒற்றையடிப் பாதை கூட சரியாக இல்லாத மலைப்பகுதியை பனிப்பாறைகளைக் கடந்து எப்படித்தான் இந்த மரங்களைக் கொண்டு வந்து புத்தர் ஆலயம் அமைத்தார்கள் என்பது விளங்காப் புதிராகும்.
அதே போல இந்த திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் வியக்கத்தக்க ஒன்றாகும். மலைகள் குன்றுகளே இல்லாத இந்தப் பகுதியில் வெறும் கற்களினாலே கோயில் அமைந்திருப்பதை நினைத்துப் பார்த்தால் வியக்காமல் இருக்க முடியாது. சிலை செய்ய வேண்டுமானால் அதற்கென்று தகுந்த நன்றாக தேற விளைந்த கற்களை சிற்பிகள் தேர்ந்தெடுப்பார்கள். கண்ட கண்ட பாறைகள் எல்லாம் சிலை செய்ய ஏற்றதல்ல என்று சிற்ப சாஸ்திரம் படித்த கலைவல்லார்கள் கூறுகிறார்கள். அப்படி சிலை செய்ய ஏற்ற பாறைகள் 100 மைல் சுற்று வட்டாரத்தில் இல்லை என்று தொழில் நுட்ப அறிஞர்கள் கூறுகிறார்கள். சுமார் 50 மைல்களுக்கு அப்பாலுள்ள திருமயம் திருக்கோகர்ணம் நார்த்தாமலை சித்தன்னவாசல் விராலிமலை போன்ற பகுதிகளில் உள்ள குன்றுகளில் விளைந்த பாறைகள் சிலை செய்யத் தகுதியற்றன என்றும் அதை ஜல்லிக் கற்களாக்கி பாதைக்குப் பரப்ப மட்டுமே ஏற்றது என்றும் சிற்பிகள் கூறுகிறார்கள். ஆனால் சுற்று வட்டாரத்தில் மலைகளே இல்லாதபோது சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்னால் பாதைப் போக்குவரத்துக்களே இல்லாத காலத்தில் வெறும் பாறைகளைக் கொண்டே பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது என்பது பிரமிப்பு மிக்கது...
இன்னும் இவ்வட்டார மக்கள் இந்த திருத்தளத்தை பூதம் கட்டியதையும் கூறுவதுண்டு காரணம் மனிதர்களால் கனவிலும்  கட்டமுடியாத வண்ணம் கட்டப்பட்டிருப்பதால் ஆகும்..
                                

ஒரு வீட்டிற்கு தாழ்வாரம் அமைக்கும்போது பனங்கை தேக்கு மரத்திலோ பக்கவாட்டுக் கைகள் அமைத்து அதனை இரும்புக் கம்பிகளால் இணைத்து அதன் மீது குறுக்குச் சட்டங்கள் இணைத்து அதன்மீது ஒடு வேய்வது வழக்கம். இதே போல கோயிலின் தாழ்வாரத்திலுள்ள கொடுங்கைகள் இழைத்துக் காட்டிக் கல்லைக் கவிதை பாட வைத்துள்ளார்கள்.
தேக்கு மரச்சட்டம் போல் இழைத்து அதிலே குறுக்கக் கம்பிகளும் நான்கு பட்டைகம்பிகளும் ஆறு பட்டைக் கம்பிகளும் உருண்டைக் கம்பிகளும் இணைத்துச் சேர்த்து அதிலே குமிழ் ஆணிப்பட்டை ஆணிகள் அறைந்திருப்பது போல எல்லாமே கல்லில் செய்து அதன் மீது மெல்லிய ஓடு வேய்ந்திருப்பது போல செய்திருப்பது சிற்பக்கலை என்றால் என்னவென்று அறியாதவர்கள் கூட வியக்கத் தக்க ஒப்பற்ற திறனாகும்.
ஒரு கல்லுக்கும் மறு கல்லுக்கும் எப்படி எந்த இடத்தில் இணை சேர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அமைக்கப்பட்டுள்ள இந்தத் தாழ்வாரம் எனப்படும் கொடுங்கைக்கூரை ஆனது மொத்தம் பதிமூன்றரை அடி நீளமும் ஐந்தடி அகலமும் இரண்டரையடி கனமும் உள்ளதாகும். இந்த இரண்டரையடி கனத்தை இப்படி தாழ்வாரக் கூரையாக்கி செதுக்கிச் செதுக்கி ஒரு அங்குல கன்னமுள்ள மேலோடு அளவிற்குச் சன்னமாக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆவுடையார்கோயிலை பார்வையிட வருகை தந்திருந்த அந்தக் காலத்திய மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த ஆங்கிலேயர் ஒருவர் தனது கைத்துப்பாக்கியால் இந்தக் கொடுங்கூரையை சுட்டுப் பார்த்து இருக்கிறார். அவரது கைத்துப்பாக்கிக் குண்டு பாய்ந்தவுடன் இந்த கொடுங்கைக் கூரை சுக்கு நூறாக சிதறி விழுந்துவிடவில்லை. வெடித்துச் சீறல் ஏற்படவில்லை. குண்டு பாய்ந்த இடம் எதுவோ அந்த இடத்தில் மட்டும் துப்பாக்கிக் குண்டின் அளவிற்கு மட்டுமே துளைத்துக் கொண்டு போய் இருக்கிறது. அந்த அளவிற்கு அந்தக் கூரை மென்மையும் தின்மையும் வாய்ந்ததாக அமைந்துள்ளதை இன்றளவும் சங்கீத மண்டபம் எனப்படும் தியாகராஜ மண்டபத்தில் காண முடியும். மேலும் இதே மண்டபத்தில் 10-15 வளையங்கள் கொண்ட ஒரே கல்லிலான கற்சங்கிலி செதுக்கப்பட்டு உயரத்தில் பொறுத்தித் தொங்க விடப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் அருகே இசைத்தூண்கள் உள்ளன இவற்றை தட்டினால் இசை எழுவது வியப்பு..


                           

பாண்டியர் - சோழர் – நாயக்க மன்னர்களும்:
இந்தக் கோயிலில் ஆனந்தசபை தேவசபை கனகசபை சிற்சபை நடனசபை பஞ்சாட்சரம் போன்ற மண்டப அமைப்புகள் உள்ளன.
இக்கோயிலினுள் கருவறைப் பகுதியை மட்டும் மாணிக்கவாசகர் கட்டியதாகவும் அதைத் தொடர்ந்து விக்ரம சோழபாண்டியர் (பார்த்திபன் கனவு என்கிற சரித்திர நாவலில் சொல்லப்படுகிற அதே விக்ரமாதித்யசோழன் தான்) மற்றும் சோழ மன்னர்கள் தஞ்சையை ஆண்ட நாயக்கர் மன்னர்கள் மகாராஷ்டிர மன்னர்கள் இராமனாதபுரம் சேதுபதி மன்னர் சிவகங்கை மன்னர் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் பாலைவன ஜமீன்தார் ஆகியோரால் அவ்வப்போது கட்டப்பட்டு ஆறு மண்டபங்கள் இணைத்துக் கோவிலாக ஆக்கி இருப்பது கவனிக்கத்தக்கது.


தேரின் சிறப்பு:
இங்குள்ள தேர் தமிழகத்திலுள்ள பெரிய தேர்கள் சிலவற்றில் ஒன்றாகும். திருவில்லிப்புத்தூர் திருநெல்வேலி திருவாரூர் காளையார்கோவில் ஆவுடையார்கோயில் ஆகிய ஊர்களில் உள்ள தேர்கள்தான் தமிழகத்தில் உள்ள கோயில்களின் தேர்களில் மிகவும் பெரிய தேராகும். இந்த தேர்ச் சக்கரத்தின் குறுக்களவு மட்டும் 90 அங்குலம் ஆகும். சக்கரத்தின் அகலம் 36 அங்குலமாகும்.
50 முதல் 500 பேர் வரை கூடினால் எந்தத் தேரையும் இழுத்து விடலாம். ஆனால் இந்த ஆவுடையார்கோயில் தேரை இழுக்க சுமார் 5000 பேர் கூடினால்தான் இழுக்க முடியுமாம். இதிலும் அதன் அடங்காத் தன்மை வெளிப்படுகிறது.
50 ஆண்டுகள் ஆகியும் இந்த ஆவுடையார்கோயில் தேர் அப்படியே நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.கோவில் விமானம்:

சிதம்பரம் நடராசர் கோவிலில் பொன்னோடு வேயப்பட்ட விமானம் உள்ளது. அதேபோல இங்கு செப்போடு வேயப்பட்ட விமானம் இருக்கிறது. மரங்களில் உறுதி வாய்ந்தது தேக்கு மரம் என்பது நமக்குத் தெரியும். தேக்கு மரங்கள் நு}ற்றாண்டுக் கணக்கில் கெட்டுப் போகாமல் தாங்கும் சக்தி படைத்ததாகும். ஆனால் இந்த தேவதாரு மரமோ ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தாங்கும் சக்தி பெற்றதாகும். இந்த தேவதாரு மரம் இந்தியாவில் இல்லை என்றும் பர்மாவில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சிவபெருமான் வாசஸ்தலமான கைலாயத்தில் தேவதாரு மரம் இருப்பதாக புராணங்கள் வாயிலாக நாம் அறிய முடிகிறது. அந்தத் தேவதாரு மரத்தின் மீது இந்தச் செப்போடு வேயப்பட்ட விமானம் உள்ளது. இந்த தேவதாரு மரத்தின் பலகைச் சட்டத்தை இன்றுபார்த்தாலும் நேற்று அறுத்து இன்று வழவழப்பேற்றி பலகையாக்கி இணைக்கப்பட்டது போல எண்ணெய் செறிந்துள்ள பளபளப்பைக் காணலாம். இது 5 ஆயிரம் ஆண்டுகள் தாங்கும் சக்தியை படைத்தது என்றும் கூறப்படுகிறது.
கவிபாடும் கற்சிலைகள்:
உயிர்த்துடிப்பு ஒன்றைத் தவிர மற்ற எல்லா அம்சங்களும் இங்குள்ள சிலைகளில் உள்ளன என்று கூறியுள்ளார்கள். அந்த அளவிற்கு ஈடு இணையற்ற கவிபாடும் கற்சிலைகள் இங்கே ஒவ்வொரு தூண்களிலும் நிறைந்து விளங்குகின்றன. அங்குலம் உயரம் உள்ள ஆயிரங்கால் மண்டபம் முதல் 12 அடி உயரம் உள்ள அகோர வீரபத்திரர் ரணவீரபத்திரர் சிலை வரை சிற்பக்கலை தேனடை போல செறிந்து கிடக்கிறது. இங்குள்ள எல்லா உருவச்சிலைகளிலேயும் காலில் உள்ள நரம்பு கூட வெளியே தெரிகின்றன. சிலைகளின் தலைமுடி கூட சன்னமாக அளந்து நீவி விடப்பட்டுள்ளன.
பஞ்ச கல்யாணிக் குதிரை:
நரியைப் பரியாக்கியது இத் தல புராணத்தின் பெருமையாகும். இந்த ஆவுடையார் கோயிலிலே தாவும்பரி என்று ஒரு குதிரை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அந்தக் குதிரை மீது சிவபெருமான் அமர்ந்து வருவது போல செய்யப்பட்டுள்ளது. குதிரையின் அமைப்பு ஒவ்வொன்றாய்ப் பார்த்தால் உயிர்க்குதிரையோ என்று தோன்றும். குதிரைகளிலே சிறந்ததும் அழகு வாய்ந்ததும் பஞ்ச கல்யாணிக் குதிரையாகும். பஞ்ச கல்யாணி என்றால் அந்தக் குதிரையின் நான்கு கால்களிலும் அதன் கனுக்காலிலும் வெள்ளை நிறம் இருக்கும். நெற்றியிலும் பொட்டு வைத்தாற்போல வெள்ளை நிறம் இருக்கும். இவ்வாறு ஐந்து இடத்தில் வெள்ளை நிறம் இருக்கும் குதிரை பஞ்ச கல்யாணி குதிரையாகும். சிவபெருமான் தாங்கி நிற்கின்ற இங்குள்ள குதிரைச் சிலையிலும் மேற்சொன்ன ஐந்து இடங்களிலும் வெள்ளை நிறம் இருக்கின்றன. அது மட்டுமல்ல அந்தக் குதிரையின் பற்களும் வெண்மையான கற்களால் செதுக்கப்பட்டுள்ளது.
வேடுவச்சி : இந்தக் கோயிலுக்குள் வேடுவச்சி எனப்படும் மலைக்குறத்தியின் சிலை ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஓலையினால் செய்யப்பட்டது போன்ற ஒரு கூடையினை இடுப்பில் வைத்து கையில் இடுக்கிக் கொண்டு குறி சொல்ல வருகின்ற குறத்தி போல அமைந்துள்ளது அச் சிலை.
இந்தச் சிலையை இந்தக் கோயிலின் செக் போஸ்ட் என்று சொன்னால் கூட பொருந்தும். இந்தச் சிலையை யார் பார்த்தாலும் பார்த்தவர்கள் அந்த இடத்தை விட்டு எளிதில் அகல மாட்டார்கள். தன்னிலை மறந்து அந்தச் சிலையையே சுற்றி வருவார்கள். தோள் கண்டார் தோளே கண்டார் என்று கம்பர் கூறியதைப் போல இந்த சிலை அழகில் மயங்கியவர்கள் ஆடைகண்டார் ஆடையே கண்டார் கூடை கண்டார் கூடையே கண்டார் என்று அச்சிலையின் ஒவ்வொரு அங்குலத்தையும் ரசிப்பதிலேயே மனம் பறிகொடுப்பார்.

"எனக்கே தண்ணி காட்டுறியா?' : யாராவது ஒருவரை ஏமாற்றினால், "என்ன தண்ணி காட்டுறீயா?' என்பர். இந்த "வழக்கு' எப்படி வந்தது என தெரிந்து கொள்ளுங்கள். ஆவுடையார் கோயில் பகுதி மக்களின் நிலத்தை குறுநில மன்னன் ஒருவன், பறித்துக் கொண்டான். அவர்கள் பேரரசரிடம் முறையிட்டனர். மன்னனோ, அந்த நிலம் தன்னுடையது என்று வாதாடினான். அது மக்களுடையது என்பதற்கு ஏதாவது சாட்சி இருக்கிறதா என்று கேட்டான்.

மன்னனின் செல்வாக்கிற்கு முன்னால், எதுவும் செய்யமுடியாத மக்கள் சிவபெருமானை நாடினர். உண்மையை வெளிக்கொணர உன்னைத் தவிர வேறு சாட்சியில்லை என மனமுருகி வணங்கினர். சிவன் பேரரசரிடம் மாறுவேடத்தில் சென்றார். குறுநில மன்னனை அழைத்து, ""மன்னா! உன் நிலம் எப்படிப்பட்ட தன்மையுடையது?'' என்று கேட்டார். அதற்கு மன்னன், ""அது வறண்ட பூமி'' என்றான். சிவன் மறுத்தார். ""பேரரசரே! அது செழிப்பான நிலம் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உண்டு. நிலத்தை தோண்டுங்கள். தண்ணீர் வரும்,'' என்றார். அதன்படியே நிலத்தை தோண்ட நீர் வெளிப்பட்டது. குறுநிலமன்னன் தலை குனிந்தான். மக்களிடமே நிலத்தை ஒப்படைத்தார் பேரரசர். சிவன் தண்ணீர் காட்டிய அந்த இடம், இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் இருக்கிறது. அப்பகுதியை, "கீழ்நீர்காட்டி' என்று சொல்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை, பஞ்சாட்சர மண்டபத்தின், மேல் விதானத்தில் ஓவியமாக வரைந்துள்ளனர்.இப்போ தெரிஞ்சுதா? நம்ம சிவன் தான் முதன் முதலில் "தண்ணி காட்டியவர்' என்று.
தட்சனின் யாகத்திற்கு சிவனை மீறிச் சென்றதற்கு மன்னிப்பு பெறுவதற்காக, அம்பாள் இத்தலத்தில் அரூப வடிவில் தவம் செய்தாள். எனவே, இங்கு அம்பாளுக்கும் விக்ரகம் இல்லை. அவள் தவம் செய்த போது, பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடக்கிறது. 

இந்த பாதத்தை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, கண்ணாடியில் பாதம் பிரதிபலிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவளது சன்னதி எப்போதும் அடைத்தே இருக்கும் என்பதால், சன்னதி முன்புள்ள ஜன்னல் துவாரம் வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும்.                           

திருவிழா : ஆனித் திருமஞ்சனம் - 10 நாட்கள் - 50 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். மார்கழி திருவாதிரை (திருவெம்பாவை உற்சவம் - 10 நாள் - 50 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். இந்த இரண்டு திருவிழாக்கள்தான் மிக முக்கியமானவை.இவற்றுள் ஆனிமாத உற்சவம் மகத்தானது.மாணிக்கவாசகரை முதன்மைப்படுத்தி இத்திருவிழாக்கள் நடைபெறும்.சுவாமிக்கு உற்சவமில்லாதபடி மாணிக்கவாசகருக்கு நடப்பதால் இதனைப் பக்தோத்சவம் என்று நினைக்க கூடாது.மாணிக்கவாசகர் சிவமாகவே விளங்குவதால் இதனை பிரம்மோற்சவமாகவே கூறவேண்டும்.திருவிழாக்காலங்களில் இடபம், திருத்தேர் முதலான வாகனங்களில் மாணிக்கவாசகர் திருவுலா வருகிறார். கார்த்திகை கடைசி சோம வாரம்(திங்கள் கிழமை) மிக மிக விஷேசம் ஆடிவெள்ளி விஷேசம் - தை வெள்ளி - ஆனி மகம் தேரோட்டம், சிவராத்திரி, பங்குனி உத்திரம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, நவராத்திரி, ஆவணிமூலம் முதலான நாட்களில் சுவாமிக்கு விசேச பூஜைகள் நடைபெறும்.


தலவிருட்சம் : தியாகராஜ மண்டபத்துக்கு அப்பால் வடமேற்கு மூலையில் வெளிமதிலை ஒட்டினாற்போல் அமைந்த திருமாளிகைப்பத்தியில் தலவிருட்சமான குருந்த மரங்கள் இரண்டு உள்ளன.இவ்விருட்சங்களை வலம் வருவதற்கு மேடையில் இடைவெளி இருக்கிறது.இப்பிரகாரத்தின் மூலையில் மடைப்பள்ளி இருக்கிறது.

இத்தலத்தில் காணவேண்டிய அபூர்வ சிற்பங்கள் (உலகப்புகழ்பெற்றவை)

1. டுண்டி விநாயகர் சிற்ப உருவம்

2. உடும்பும் குரங்கும்

3. கற்சங்கிலிகள் - சங்கிலியின் நுனியில் பாம்பு ஒன்று பின்னிக்கொண்டு தலையினைக் காட்டுவது

4. இரண்டே தூண்களில் ஓராயிரம் கால்கள்

5. 1008 சிவாலயங்களில் உள்ள இறைவன் இறைவியர் திருவுருவங்கள்

6. பலநாட்டுக் குதிரைச் சிற்பங்கள்

7. 27 நட்சத்திர உருவச் சிற்பங்கள்

8. நடனக்கலை முத்திரை பேதங்கள்

9. சப்தஸ்வரக் கற்தூண்கள்

10. கூடல்வாய் நிழல் விழும் பகுதி பசுமாட்டின் கழுத்து போன்று காணப்படுதல்.

நந்தி, பலி பீடம் இல்லாத சிவன் கோயில், சுவாமி, அம்பாளுக்கு உருவம் கிடையாது.லிங்கம் கிடையாது.அடிப்பகுதியான ஆவுடை மட்டுமே உண்டு.அம்பாளுக்கு திருப்பாதங்கள் மட்டுமே உண்டு. திருவிளையாடற் புராணத்தில் சிவபெருமான் நரியை பரியாக்கிய கதை நடந்த தலம். மாணிக்க வாசகருக்கு சிவபெருமானே குருவாக வந்து உபதேசம் செய்த சிவதலம்....
நன்றி: விக்கிபீடியா மற்றும் புலவர் அறந்தை திருமாறன்
3 comments:

 1. Migavum arumai nanbare.
  Palani

  www.facebook.com/healthyindia

  ReplyDelete
 2. நல்ல பதிவு... கொடுங்கைக்கூரையின் சிற்ப நுணுக்கம், மரத்தைப் போல கல்லில் செய்துள்ள கலைவண்ணத்தை வியப்புற எடுத்துக்காட்டியது, வரலாற்று, செவிவழிச்செய்திகளின் திரட்டு, ‘தண்ணீர் காட்டிய கதை’, இன்னும் பல அரிய தகவல்களின் தொக்குப்பாய் விளங்குகிறது! நல்ல உழைப்பு, நிறைய பாராட்டுக்கள் அதற்கு! [சிற்சில இடங்களில் எழுத்துப்பிழைகளும், ஒரு நடையில் தொடங்கும் தொடர் மாறி முடிவதுமாய் உள்ளது, அவற்றைச் சரிசெய்துகொள்ளவும்!]

  நன்றி,
  விஜய் :-)

  ReplyDelete
 3. Hi Good post,

  I want to know the common name and botanical name of குருந்த மரங்கள்.
  ANyone reply me to following mail id.

  ssg2003@gmail.com

  Gauthaman

  ReplyDelete