Tuesday, January 31, 2012

விளம்பரங்கள் ....
   வெகு நாட்களாகவே விளம்பரங்களின் மீதும் அவற்றை பற்றியும் எழுதி விட வேண்டும் என்ற எண்ணம் எனக்கிருந்தது..விளம்பரங்கள் நவீன கால உலகிலன் தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கியமான விசயமாக கருதப்படுகிறது.பொருள்களை வணிக ரீதியாக விளம்பரப்படுத்தும் முறை பண்டைய காலத்தில் இருந்தே வழக்கில் இருந்திருக்கிறது. கிரேக்கர்களும், எகிப்த்தியர்களும் தங்களது பொருள்களை விளம்பரப்படுத்த அட்டைகளில் எழுதி பிரசூரித்தனர்.வாணிபத்திற்கு மட்டுமல்ல போர் அறிவிப்பு , போர் சமாதானம், என்பதற்கெல்லாம் கூட விளம்பரங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள்..இன்றைக்கும் வணிகம் இல்லாமல் மற்ற பல விசயங்களுக்கும் விளம்பரத்தை பயன் படுத்துகிறார்கள் , உதாரணமாய் திருமண பதாகைகளில் ஆரம்பித்து அரசியல் வாதிகளின் வரவேற்பு விளம்பரங்கள் வரை நீள்கிறது( ஏன் வளர்மதி வயசுக்கு வந்ததை கூட )..
இப்படி பட்ட பன்முகத்தன்மையை கொண்டுள்ள விளம்பரத்திற்கென்றே தனியே பாடப்பிரிவுகளும் பட்டம் மற்றும் பட்டைய படிப்புகளும் துவங்கப்பட்டுள்ளது..
இந்த நூற்றாண்டின்  இன்றி அமையாத விசயமாய் இருக்கும் இந்த விளம்பரத்தின் மீது மக்களுக்கும் மக்களின் மீது விளம்பரத்திற்கும் இருக்கும் தொடர்பு மற்றும் தாக்கத்தை பற்றி தான் இதில் நான் கூறவிருக்கிரேன்.
இன்றைய சூழலில் ஒரு பொருளை தயாரிப்பதற்கு ஆகும் செலவை விட மூன்று மடங்கு அதிகமான செலவு அதனை விளம்பரப்படுத்துவதற்கு ஆகிறது என்று ஆய்வுகள் சொல்கிறது. அப்படி என்னதான் இந்த விளம்பரங்கள் மக்களிடம்  மாயஜாலம்  செய்கின்றன?? என்ற கேள்வி அடிக்கடி எனக்குள் தோன்றியிருக்கிறது பெரும்பாலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் விளம்பரங்களில்  90% ஆனவை  குழைந்தைகளை குறிவைத்தே எடுக்கப்படுகிறது. இரண்டு படங்களில் கிடைக்கும் சம்பளம் ஒரு கதாநாயகனுக்கு ஒரு விளம்பரத்திற்கு மட்டும் கொடுக்கப்பட்டதாக  சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். நடிகைகளை பொருத்தளவில் சற்று மார்க்கெட் குறைந்ததும் அவர்களை  ஜொலிக்குது பள பளக்குது என்று நகை மற்றும் ஜவுளி கடை விளம்பரங்களில் காண முடிகிறது.இன்னும் சில தொலைக்காட்சி விளம்பரங்களில் ஒரு பரவலான வசனங்களை காண முடிகிறது அதாவது பொருளின் பெயரை சொல்லி “ஒவ்வொரு அம்மாவின் சாய்ஸ்“ என்பதும் “டாக்ட்டர்களால் பரிந்துரைக்கப்பட்டது” என்றெல்லாம் சொல்வார்கள் இடையில் “ஹேப்பாங் ஊப்பாங் ஜப்பாங்” , “டோயின்” போன்றவை   வேறு. சமீபத்தில் ஒரு நகைக்கடை புரட்சி போராட்டம் நடத்துவதாக  ஒரு விளம்பரம் ஓடியது நான் கூட ஏதோ அந்த நிறுவனம் முல்லை பெரியாருக்காகவோ,கூடங்குள அணு உலை எதிப்பிற்கோ தனது உணர்வை பதிவு செய்வதாக நினைத்தேன் கடைசியில் பார்த்தால், நகை வாங்குவதற்காம்; எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க என்று நான் வடிவேலு பாணியில் தலை கவிழ்ந்தது தான் மிச்சம். அதிலும் இந்த விளம்பர விசயத்தில்  சீரியல் பார்ட்டிகளின் நிலைதான் அதனினும் கொடுமை ச்சே கங்காவோட மாமியார் அம்மிக்கல்ல தூக்குறப்ப விளம்பரம் போட்டானுகளே என்று புலம்புவார்கள். 
விளையாட்டு வீரர்களை பற்றி சொல்லவே வேண்டாம் .தோனிக்கு 2025 ஆம் ஆண்டு வரை விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாய் கேள்விப்பட்டேன். இந்த அளவிற்கு விளம்பரத்துறை பூதாகரமாய் வேற்பரப்பி நிற்கிறது.
ஒரு பொருளையோ இல்லை ஒரு நிறுவனத்தையோ வணிக ரீதியாய் வெற்றிகரமாய் முன்னெடுத்து செல்ல விளம்பரங்கள் அவசியப்படுகிறது.
இந்த விளம்பரங்கள் என்பது ஒரு கட்டத்தை மீறும்போது அது மக்கள் மீது திணிக்கப்படுவதை போல் ஆகிறது. தொலைக்காட்சிகளில் தான் வீட்டுக்குள்  வந்து இம்சிக்கிறார்கள் என்றால் பணம் கொடுத்து திரையரங்குகளுக்கு   சென்றால் அவ்வளவுதான் படம் ஆரம்பிக்கும் போதும் இடைவேளைகளிலும் போட்ட விளம்பரத்தையே இரண்டு மூன்று முறை திரும்ப திரும்ப காட்டி வெறுப்பேத்துவார்கள். இதிலிருந்து தப்பிக்கவே சிலர் வெளியில் சென்று இரண்டு மூன்று தம்களை ஊதித்தள்ளுவார்கள். திரையரங்கிற்குள் காதலர்கள் பாடுதான் பரவாயில்லை என்று தோன்றும் ஏனெனில் படம்; விளம்பரம், எதுவும் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. என்னை போன்ற புகைக்க தெரியாத  மற்றும் காதலி இல்லாத ஆட்களும், பெண்களும் தான் அந்த நேரங்களில் பாவம். சரி சற்று ஒதுங்கி நின்று படம் போடும் வரை வெளியில் நின்று கொண்டிருப்போம் என்றால்  வரும் பாருங்கள் அழைப்பு ஸார் நாங்க இந்த பாங்குல இருந்து பேசுறோம் லைப் டைம் இன்சூர் பண்ணிக்கோங்க என்று எரியிற நெருப்பில் எண்ணையை ஊத்துவார்கள்..
இவற்றோடு இணையத்தில் இருக்கிற விளம்பர தொல்லை தான் தாங்க முடிவதில்லை, முக்கியமான ஒரு வலைப்பதிவில் சுவாரசியமாய் படித்துக்கொண்டிருக்கையில் அதை மறைத்துக்கொண்டு வரும் விளம்பரத்தை கண்டதுனே கணினியை உடைத்துவிட தோன்றும் அப்பா உதைப்பாரு என்று பச்சி சொன்ன பின் அந்த முயற்சி நிறுத்திவைக்கப்படும் .சில நேரங்களில் அசைவ விளம்பரங்கள் வேறு எட்டி பார்க்கும்.இந்த தொல்லையாலேயே எனது வலைப்பதிவில் adsenseஐ நிறுத்திவிட்டேன்.
பெரு நகரங்களில் புதியதாய் வருபவர்கள் முதலில் கண்டு பயப்படுவது ,நடுங்குவது எல்லாமே பெரும்பாலும் இந்த  ராட்சத விளம்பர அட்டைகளை பார்த்து தான்.
        இதெல்லாம் கூட பரவாயில்லை தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை சமயங்களில் என் சொந்த ஊரான ஊரணிபுரம் (தஞ்சை மாவட்டம்), அதை சுற்றியுள்ள கறம்பக்குடி,பட்டுக்கோட்டை,அறந்தாங்கி, போன்ற குறுநகரங்களில் குழாயினை கட்டி பண்டிகைக்கும் ஒரு பத்து பதினைந்து நாட்கள் முன்னதிலிருந்தே விளம்பர  அளப்பரையை ஆரம்பித்துவிடுவார்கள் இடை இடையே அனுமதி தந்த அந்தந்த சரக காவல் துறையினருக்கும் நன்றிகளை ஒலிக்குழாய் வெளிதள்ளும்.
நமது அரசியல் தலைகளை பற்றி சொல்லவே வேண்டியது இல்லை. தேர்தல் நேரங்களில் வீட்டு சுவர்கள் என்று ஆரம்பித்து இதோ தலைவர் வந்து கொண்டே இருக்கிறார் மணித்துளிகளில் மேடையில் தோன்றுவார்  என்று கூறி  கூட்டம் களைந்து விடாமல் இருக்க சொல்லப்படும்  வசனங்கள் எல்லோரும் அறிந்த விளம்பரமே பின்  தேர்தல் முடிந்ததும் மேம்பாலங்களின் பக்கவாட்டுக்களில்  சும்மா வரைந்து தள்ளி விடுவார்கள். கடந்த முறை தேர்தல் ஆணையம் எடுத்த முடிவால் பல  வீட்டு சுவர்கள் தப்பித்தன. இவ்வளவு சக்தி வாய்ந்த விளம்பரத்துறை ஒரு எல்லையோட இருந்தால் நலமே அதைவிடுத்து மேலோங்கினால் அது திணித்தல் போலாகி மக்களிடம் அதிருப்த்தியை ஏற்படுத்திவிடும்.
 எனவே விளம்பரங்கள் அளவோடும் அழகோடும் இருக்க வலியுறுத்தி விளம்பரப்படுத்துவோமாக.
//மணி....

No comments:

Post a Comment