Wednesday, July 25, 2012

பிரிவுகள்....


                   
                  யாயி...   ஏன் அழுவுற, பத்து தேசம் தாண்டியா போற ரெண்டு ஊரு தான தள்ளி இருக்கு ஒம்புருசன் ஊரு. அழுவாத_த்தா என்றே மகளை சமாதானப்படுத்தி கொண்டிருந்தார் முத்துச்சாமி பெரியப்பா.சுமதி அக்காவ அழுவாத அழுவாத என்று சமாதானம் செய்த அவர் கண்ணிலும் நீர் ததும்பியதின் காரணம் அன்றைய சிறுவர்களான எனக்கும்,நண்பன் சுப்பிரமணிக்கும், அவன் தங்கை சுபாவிற்கும் எதுவும் புரியவில்லை.எதுக்குடா இவுகல்லாம் கல்யாண வீட்டுல போய் அழுதுக்கிட்டு இருக்காவ என்று சுப்பிரமணி கேட்க, மாப்பிள பொல்லாதவர் போலடா என்றாள் அவனின் தங்கை சுபா.. (அவள் நிறைய தமிழ் படங்கள் பார்த்திருக்க வேண்டும்.) அதற்கேற்றார்போல் தங்கராசு மாமாவும் “சுமதி அழுதது போதும் ம்ம்ம்.. வண்டில ஏறு “ என்றதும், மாலையும் கழுத்துமாய் சுமதி அக்கா தங்கராசு மாமாவுடன் காரில் ஏறி சென்றாள்.தங்கராசு மாமாவின் அந்த எதார்த்த பேச்சு அவரை எங்களுக்கு ஒரு வில்லனாகவே அறிமுகப்படுத்தியது..
                          
                       பெற்றோர்களின் பாசத்தையும் அந்த மகளின் நேசத்தையும் தனது ரோதையின் அச்சாக வரைந்து சென்ற அந்த காரின் வழித்தடங்கள் மறுநாள் எதையோ உணர்த்தியது. அழுவக்கூட பெறக்கென இல்லடா, என் பேத்தி வீட்ல இல்லாதது வீடே வெறிச்சு கெடக்கு என்று கண்ணியம்மா பாட்டி சொன்ன அந்த பிரிவின் வலி பின் ஒரு நாள் எனக்கும் கூட வேறு வழியில் வந்தது ,, அது பத்தாவது முடித்த பின்னர் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்காக  தஞ்சையில் விடுதியில் சேர்ந்து படிக்கும் போது நேர்ந்த பிரிவு வலி.
                   வெள்ளிக்கிழமை ஆனால் ப்ளஸ் ஒன் மாணவர்கள் எல்லாம் ஒரு லெட்டரை எழுதிக்கொண்டு கண்ணீருடன் வார்டன் அரை முன் குழுமி அழுது புரண்டு வீட்டிற்கு சென்று விடுவதுண்டு.பின்பு ப்ளஸ் டு முடித்தப்போது அதே கண்ணீர் வந்தது  ஆனால் இந்த முறை கண்ணீர் வீட்டிற்கு செல்வதற்காக இல்லை, விடுதியை விட்டு பிரிவதற்காக இருந்தது. கல்லூரியிலும் இதே கதை இன்னொரு முறை நிகழ்ந்தது. கல்லூரியில் வகுப்பை கட் அடித்துவிட்டு விடுதியில் வெளியே எவனையாவது பூட்ட சொல்லிவிட்டு உள்ளே படுத்து தூங்கிவிடுவோம். சாப்பிட போகும்போது மட்டும் கல்லூரி ட்ரஸ் கோடிலே சென்று சாப்பிட்டுவிட்டு மீண்டும் பூட்டி துயிலும் படலம் தொடரும்,, அப்பொழுது வலிக்காத வகுப்பு மாணவர்களின் பிரிவு, பின்பு கல்லூரியில் படிப்பை முடித்து வெளியேறும்பொழுது அதற்கெல்லாம் சேர்த்து வலித்தது.. 
                   
                                                                 
                       இந்த வாழ்க்கை எவ்வளவு சுவாரசியமானது.....எவ்வளவு அடர்த்தியானது,,, எதை வெறுத்து ஒதுக்குகிறோமோ  சில நேரங்களில் அந்த பொருளையே நேசித்துருகி, நேசிப்பின் அடுத்த கட்டத்திற்கு அழைத்து  செல்கிறது வாழ்க்கை..
                  மூன்றாவது படித்துக்கொண்டிருக்கும் பொழுது ஒருநாள் இரவு அப்பா பேன்ட் சர்ட் சகிதம் கிளம்பிக்கொண்டிருந்தார் என்னை பார்த்து மனியண்டா அம்மாவ தொந்தரவு பண்ணக்கூடாது, ஆயிய அடிக்காம பாத்துகிடனும், சண்டை போடாம சொல்றத கேட்டுகிட்டு இருக்கணும் என்று சொன்னார், எனக்கும் ஒன்றும் புரியவில்லை, அப்பா எங்கம்மா போவுது என்ற போது, எல்லாம் ஒங்கள வளக்கத்தான் சிங்கப்பூரு போறாருடா என்றது அம்மா..அப்பா ஒரு பி பேக்கை தூக்கிக்கொண்டு பழைய  நடிகர் ரவிச்சந்திரன் போல் சும்மா கெத்தாக சென்றார். 
    
பெத்தபுள்ளைக, கட்டுனது, ஊரு தேசத்தெல்லாம் உட்டுபுட்டு, ஓவர் ஸ்டேயில போலிஸ்காரனுக்கு பயந்து பயந்து ஒரு வாய் சோறு கூட நிம்மதியா திங்க முடியாது ஆயி என்று அப்போதைக்கு சிங்கையிலிருந்து புடிபட்டு வந்திருந்த ராசப்பா மாமா சொன்னபோது அம்மா விம்மி அழுக ஆரம்பித்தாள்.. அதற்குள் ராசப்பா மாமா யாத்தா அழுவாத மாப்ளை  இருக்குற எடத்துல எந்த பிரச்சினையும் இல்லை,  போலிஸ் கெடுபிடியும் கம்மி தான், நாந்தான் கூறுகெட்டு தேக்காவுக்கு ஸ்நேகா வாரானு பாக்க போய் கூட்டத்துல  போலீஸ்காரன்ட்ட  மாட்டிகிட்டேன் எல்லாம் நேரம் என்ன பண்றது,,  இப்போ வேலை சீசன் தான், ஒன்னும் பயப்புடாத, வெள்ளி நம்ம ஊருக்காசுக்கு ஏறிகிட்டு வருது, நல்ல சம்பளமும் கெடைக்கும், அரசாங்கம் எதற்கு வருத்தப்படுகிறதோ அதற்கு அந்த மனிதர் சந்தோசித்தார், அவர் மட்டுமல்ல அவரைப்போல் சிங்கப்பூரில் வாழும் பலருக்கும் அதே மனநிலை தான்.. மாமா ஸ்னேகாவ பாத்தியலா என்று கேட்ட போது கொஞ்சம் கடுப்பானவர்,ஒழுங்கா படி டா என்ற போது அம்மா சிரித்துவிட்ட்டாள்.
                        
             பின்பு ஒருநாள் அப்பா போன் பண்ணியப்போது, உங்க மவனும், மவளும் ஆயி அப்பன் வீங்கெயாயிருக்குதுவ, அப்பா எப்ப வருவாரு வருவாருன்னு நச்சரிக்குதுவ, என்னையும் கல்யாணம் காட்சி நல்லது கெட்டதுக்கு போவ விட  மாட்டேங்குது ரெண்டும் என்று அம்மா சொன்னதும், போன்  என் காதிற்கு வந்தது. வேறென்ன பேச முடியும், அம்மாவிடம் சொன்ன அதே பல்லவி தான்..  

                     உறவுகளை சிதறடித்து போட்டுவைக்கும் சக்தி இந்த பொருளாதாரம் என்னும் பேய்க்கு தொன்று தொட்டு கை வந்த கலை, சத்தியமாக திரைகடல் ஓடி திரவியம் தேடுதலில் தான் எத்தனை வலி...

          இன்றும் கூட பொங்கல் தீபாவளி விடுமுறைக்கு கல்லூரியிலிருந்து ஊருக்கு திரும்பும்போது திருச்சியில் பல பழகிய முகங்களை காண நேரும் அவர்கள் எல்லாம் திருப்பூரில் பனியன் ஆடையகங்களில் வேலை செய்பவர்கள், பண்டிகை நேரத்தில் கண்விழித்து வேலை செய்துவிட்டு விடுமுறைக்கு வீடு திரும்பிக்கொண்டிருப்பார்கள் , திருச்சியிலிருந்து ஊரனிபுரத்திற்கு அரிதாய் வரும் பேருந்துக்காக காத்திருந்து பின் பேருந்தில் ஏறும் பொழுது, அந்த ஒன்னே முக்கால் மணி நேர பயணத்தில் அந்த பழகிய முகங்கள் பெரும்பாலும் , அலைபேசியில் என்ன ஓட்டுறான் இப்ப தான் பால்ப்பன்னைய நெருங்குறான் , இந்த இடத்தில வந்துகிட்டு இருக்கேன், என்று அக்காள், அம்மா, அக்கா குழந்தைகள் என்று உறவினர்களோடு பேசிக்கொண்டே வருவார்கள். அவர்கள் பேசும் அத்தனை வார்த்தைகளிலும் பிரிவின் துயரமும் ஏக்கமும்  நெடியடிக்கும்..   
                                  

                            சில நேரங்களில் சில மனிதர்களை ஏன் பிடிக்கிறதென்றும் சில நேரங்களில் எப்படி அவர்கள் நம் பிரியத்திற்கு ஆளாகிறார்கள் என்றே புரிவதில்லை, வேலை நிமிர்த்தமாக கடந்த மாதம் சென்னையில் மாமாவின் அன்பர்கள் தங்கியிருக்கும் அறையில் குடியேறி இருந்தேன், நான் குடியேறிய ஒரு வாரம் கழித்து புதியவர் ஒருவர் அறைக்கு வந்திருந்தார், மிக அமைதியானவர், ஒருமுறை நான் சாப்பிட சென்றபோது, அண்ணேன் ஞ்சாப்பிட்டியலா என்று கேட்டபோது அவர் தன் வயிற்றிற்கு முன்னதாய்  இரண்டு கைகளையும் நேராக நீட்டி காற்றை பக்கவாட்டில் கிழித்து நமக்கெல்லாம் எட்டு மணிக்கே முடிஞ்சிரும்பா என்றார், பின்பு பேச ஆரம்பித்த போது சொந்த ஊர் ராஜபாளையம் என்றும்,அபுதாபியில் வேலையில் இருப்பதாகவும், ஏதோ தேர்விற்காக சென்னை வந்துள்ளதாக கூறியவர்,ஒரு நாள் மாலை , தம்பி எக்ஸாம் எல்லாம் முடிஞ்சிருச்சு நைட் ஏழு மணிக்கு ஊருக்கு கிளம்பறேன் என்று கூறிவிட்டு ஆறு மணிக்கே ட்ராவல் பேக்கை மாட்டிக்கொண்டு தம்பி போயிட்டுவறேன் என்று கிளம்பியபோது எதையோ இழப்பதை போல் இருந்தது ஒரு பத்து நிமிடம் கூட அந்த சகோதரரிடம் பேசியிருக்க மாட்டேன், ஆனால் அத்தனை அன்போடு பத்தரமா போங்க அண்ணே என்றேன், அந்த பிரிவின் பிரக்ஞையற்று சிரித்துக்கொண்டே  அவர் கடந்து போனார்.

                   இதே போல் கல்லூரியிலும் ஒரு அனுபவம் உண்டு ஒரு பெண் பார்ப்பதற்கு அப்படியே மறைந்த என் சித்தப்பா மகள் சாயலிலேயே இருப்பதால், அவளிடம் நானாகவே பேசினேன், அவள் ஊர்க்கூட எங்கள் பகுதியில் தான் என்றதும், அவள் என் தங்கையாகவே பட்டாள். அந்த சென்னை அறை நபர் சிரித்துக்கொண்டே சென்றதற்கு எதிராய், இந்த கல்லூரி பெண், முறைத்துக்கொண்டே பிரிந்து சென்றாள், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தம் மட்டுமல்ல அன்பும் நஞ்சுதான் என்று உணர்த்தியது அந்த பிரிவு..      
             
                     ஒருமுறை ஒரு ஜூனியர் மாணவனோடு உரசல் ஏற்பட்டு கைகலப்பு வரை சென்றது பின்பு அவனோடு மட்டுமல்ல, அவன்சார்ந்த மூன்றாம் ஆண்டு தோழர்கள்  (ஒரு சிலரை தவிர்த்து ) அனைவரையும்  தவிர்த்துவிட்டேன், அவர்களும் அப்படியே என்னை தவிர்த்தார்கள்.. ஆனால் இப்பொழுது நினைக்கும் பொழுது அந்த மாணவன், "அண்ணா சேவிங் ரேசர் இருக்கா, இன்னைக்கு கிளாஸ் செம்ம மொக்கனா நீங்க ஊதிப்போன ரெய்னா மாதிரியே இருக்கீங்க" என்று அவன் அன்று சொன்ன ஞாபகமும்  அவன் அத்தனை அன்போடு பழகியதும் தான் நினைவிற்கு  வருகிறது மற்றவர்களிடமும் இப்படி நிறைய நினைவுகள் நெகிழும் வண்ணம் நிறைந்து கிடக்கிறது. இப்படி அந்த ஜூனியர் மாணவர்களோடு நேர்ந்த பிரிவு என்னைப்பக்குவ படுத்தியதோர் பிரிவு..      
   
             இப்படி வாழ்க்கையின்  நீண்ட நெடிய பயணத்தில், எத்தனையோ இழப்புகள், நிரந்தரமின்மைகள், பிரிவுகள் வழியெங்கும் நிறைந்து கிடக்கிறது,, இந்த நிச்சயமின்மைகள் நம்மை சில நேரம் வைராக்கியப்படுத்தவும், சந்தோசப்படுத்தவும், சலனப்படுத்தவும், பக்குவப்படுத்தவும் கட்டமைக்கப்பட்டவை. எல்லோருக்கும் பிரிவுகள் சொல்லி தந்தவை பற்பல .. பிரிவுகள் எப்போதும் நம்மைவிட்டு பிரிவதில்லை அவை  சில நேரம் வரங்கலாயும், சில நேரம் சாபங்கலாயும் வந்திறங்குகிறது.  இதனை ரசித்து வாழ்வதென்பதும் ஏற்றுகொள்வதும் எதிர்பார்ப்பற்ற எளிய உள்ளங்களுக்கே சாத்தியமாகிறது....

இன்னும் பிண்ணுவோம் நினைவுகளை..
//மணி   


Saturday, June 23, 2012

ஜனாதிபதி தேர்தல் என்னும் பொங்கச்சோறும் சிலரின் பூசாரித்தனங்களும்:

 ஜனாதிபதி தேர்தல் என்னும் பொங்கச்சோறும் சிலரின் பூசாரித்தனங்களும்:

இந்தியாவின் 13 வது ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பதில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு வேலையை துவங்கிவிட்டன என்ற செய்தியை டீ கடையில் படித்து,, தான் செய்தி படித்ததை பந்தாவாக அங்கிருந்த ஜனங்களிடம் பகிர்ந்து நாயகரானார் பசல்சாமி..

எவ்வளவோ செய்திகள் கேட்டாலும் இந்த  செய்தி மாடபட்டி மார்த்தாண்டனை ஏதோ செய்தது ...ஜனாதிபதின்னா  என்னாப்பா என்று பட்டணத்தில் இருந்து வந்த பேரனிடம் கேட்டார் மாடசாமி, ஜனாதிபதின்னா பிரசிடென்ட் தாத்தா என்று ஒரு ஒன்லைன் கூறிவிட்டு சரத்குமார் படங்களில் வரும் லோக்கசன்கள் அதிகம் கொண்ட அந்த கிராமத்தை சுற்றி பார்க்க சென்றுவிட்டான் பேரன்..

என்னது பெரசண்டா அதான் நாலு மாசத்துக்கு முன்னாடி நம்ம ஊரான் பொன்ராசு ஜெயிச்சு பெரசண்டானான் அதுக்குள்ள என்ன இன்னொரு பெரசண்டு எலக்சன்...


போய்  பொன்ராசயே  கேப்போம் என்று சென்ற மார்த்தாண்டத்துக்கு பொன்ராசு சொன்ன பதில் "அதுவேற பிரசிடென்ட் இது வேற பிரசிடென்ட்டுடா மார்த்தாண்டம்" என்பதாகும் ...
என்னடா இது அது வேற கருப்பு இது வேற கருப்புங்கற மாதிரி கொழப்பிட்டு போறானே பெரசண்டு; பொறாமை புடிச்ச பய எட்டு வோட்டுல செவிச்சுட்டு என்னாமா பேசுறான் என்று தன்னை தேத்திக்கொண்டு யோசிக்க ஆரம்பித்தார் மாடசாமி..

நல்லா யோசிச்சாச்சு போய்  எதுக்கும் ஆகாச கருப்புக்கிட்ட ஒரு வார்த்தை கேக்கவேண்டியது தான் என்று கருப்பசாமி கோயிலுக்கு சென்று கர்ப்பூரத்தை ஏத்தியவனுக்கு சட்டென்று ரஜினியின்  சிவாஜி படம் ஞாபகம் வர  பாக்கெட்டில் கை விட்டு பார்த்தால்,
அந்தோ ஏமாற்றம் ஒரு ரூபாய் நாணயம்  பாக்கெட்டில் இல்லாமல் போனதும். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று  எடுத்தான்  ஒரு சிறு கல்லை, அதிலும் வல வல , சொர சொர  என்று  இரண்டு பக்கங்கள் வல வல விழுந்தால் வல வலனு பேசி எப்படியாதும் முடிச்சிடனும்,, சொர சொர விழுந்தா சோத்த தின்னுட்டு சோலிய பாக்க வேண்டியது தான் என்று வேண்டிக்கொண்டு கல்லினை மேலே சுண்டிவிட்டான் விழுந்தது வல வல....

மறுநாளும் அதே டீக்கடைக்கு சென்றான் மார்த்தாண்டன் வழக்கம் போல பேப்பேர் படித்து கொண்டிருந்தார் பசல்சாமி. பசல் அண்ணேன் யாராரு இந்த பெரசண்டு எலக்சன்ல நிக்கிறதா இருக்காங்கன்னு பேப்பர்ல போட்டு இருக்கான்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்க என்றதும் அவர் சொன்னார்
அதா பிரணாப் முகர்ஜி நிக்கிறாக  ,பி.ஏ.சங்மா நிக்கிர்ராக , மற்றும் நம் அரசியல் கட்சியெல்லாம் நிக்க வைக்குறாங்க ஆனா  கலாம் தான் ஒதுங்கிட்டார்ப்பா என்றார் பசல்சாமி.

பாருடா எல்லாம் வெளியூர்க்காரங்க என்று மனதிற்குள் நமைந்து கொண்டான் மார்த்தாண்டன்..
தான் இன்னைக்கு ஒரு மாபெரும் பத்திரிகை சேவை செய்ததாய் புளகாங்கிதம்  அடைந்தார் பசல்சாமி..


இனி........
கணக்கு போட ஆரம்பித்தான் மார்த்தாண்டன்..
அங்காளி அங்காளி பங்காளி எல்லாரையும் கூட்டினான் மார்த்தாண்டம். 
ஏய் மக்கா  நமக்கே தெரியாம நம்ம ஊருக்கு பெரசண்டு எலக்சன் நடக்குது 
போட்டி போடுற எல்லாரும் வடநாட்டுக்கார ஆளுக.ஊருக்கு எதிரா ஏதோ சதி நடக்குது. அதனால நான் பெரசண்டு எலக்சன்ல நிக்கலாம்னு இருக்கேன். நீங்க எல்லாரும் வோட்டு போட்டு என்னைய ஜெயிக்க வச்சுருங்கடா..
கருப்பு சாமிக்கிட்ட கூட உத்தரவு வாங்கிட்டேன் .. என்றதும் கருப்பு சொன்னா சரியாத்தான் இருக்கும் என்று கூட்டத்தில் ஒரு கிளவி பொக்கை   வாயால் பொக்கியதும் நீ நில்லு அப்பு உன்ன ஜெயிக்க வைக்கறது எங்க பொறுப்பு என்று  
இன்னொருவர் புரட்சித்தீயை மூட்டியதும்.. நிமிர்ந்து உட்காந்தான் மார்த்தாண்டான்.
பசல்சாமியின் தயவில் வேட்புமனு தாக்கல் தேதியும் தெரிய வர.

எங்க நாமினசன் பன்றது என்று சந்தேகம் வந்தது மார்த்தாண்டத்துக்கு ,ஒருவன் அதற்கும் பதில் கூறிவிட்டான், மார்த்தாண்டம் புதுசா வந்திருக்க தாசில்தார் ராசியான ஆளுப்பா.இருவது வருசத்துக்கு முன்னாடி பொறந்த என் மவளுக்கு இன்னைக்கு ஒரே நாள்ல பொறந்த சட்டிபிகேட்டு தந்துட்டாப்புல.. நீயும் அங்கேயே எலக்சனுக்கு நாமினசன் பண்ணு என்றதும்..
குடும்ப அடையாள அட்டையுடன் தாசில்தார் அலுவலகத்துக்கு சென்றான் மார்த்தாண்டம்..

விசயத்தையும் சொன்னான் இதுபோல 2012 க்கான பெரசண்டு ஆகறதுக்கு
நானும் களத்துல குதிக்கிறேன் எனக்கு ஆதரவா பம்புசெட்டு பாண்டி,கமீதா இளைஞர் மன்றம் இன்னம் பல முக்கிய புள்ளி எல்லாம் ஆதரவா இருக்காங்க என்று சொன்னதும்,மார்த்தாண்டம் உடம்பில் தீபாவளி கொண்டாடிவிட்டனர் அங்கிருந்த காவலர்கள்..
ஆசயப்பாரு ஜனாதிபதின்னா சும்மாவா எத்தன டூர் போகனும் ,என்று  அடிக்கும் போது ஒரு குரலும் கேட்டது மார்த்தாண்டத்துக்கு..

அடிய வாங்கிக்கிட்டு பத்து போட்ட ஈரம் காய்வதற்குள் கமீதா இளைஞர் மன்றம் சென்ற மார்த்தாண்டம்


ஆமாம் இந்த ஜனாதிபதிக்கு அப்படி என்ன தான் பவரு என்று கேட்டதும்,
பவர் ஸ்டார்ட்ட கேக்கலாமே என்று அறிவுரை சொன்னது இளைஞர் பேரவை..
யாரிந்த பவர் ஸ்டார் என்று மார்த்தாண்டம் கேட்டதும்  லத்திகா படம் காண்பிக்கப்பட்டது. பவர் தரிசனம் படத்தில்  கிடைத்ததும் "யப்பா இவரெல்லாம் பாக்க முடியாது ரொம்ப பிசியா இருப்பாரு போலவே". என்றவருக்கு சாம் ஆண்டர்சனும் அறிமுகப்படுத்தப்பட்டார்..

நொந்து போன மார்த்தாண்டம் யப்பா சாமி உங்க பொங்க சோறும் வேண்டாம் பூசாரித்தனமும் வேண்டாம் என்று விடைபெற்றார்.....

//மணிSunday, May 13, 2012

பெயர்....


எங்கள் பகுதி கிராமங்களில் பெரும்பாலும் சிறு பிள்ளைகளை அவர்களின் பெயர்களை வைத்து கூப்பிட வெகு நாட்களாகும், அதுவரை அவர்களின் உடல்வாகு ,அழகு,குணத்தை பொறுத்தே அவர்கள் நாமகாரணம் செய்யப்படுவார்கள் உதாரணமாய் அம்மு,கட்டையன்,சில்லறை,கூல்பானை ராசாத்தி,மதார் இப்படியான பெயர்களிலேயே  பிள்ளைகள் வலம்வருவார்கள்.

பள்ளியில் சேர்த்த பிறகு வருகைப்பதிவெடுக்க ஆசிரியர் அழைக்கும் போதுதான் பிள்ளைகளுக்கு அவர்களின் பெயரைப்பற்றிய பிரக்ஞை வரும்...
எனக்கு தெரிந்த தாத்தா ஒருவர் அந்த காலத்தில் அவர் மகனை பள்ளியில் சேர்க்கும் பொழுது அவர் மகனின் உண்மை பெயரை மறந்து பட்டப்பெயரை முன்மொழிந்தாராம் அதை கேட்டு
தலைமை ஆசிரியர் சிரித்துவிட அச்சிறுவனின் அண்ணன் அவனது நிஜப்பெயரை சொல்லியிருக்கிறார்.
 
அன்று ஒருநாள் மாலை என் மூன்றாவது சித்தப்பாவிற்கு தலைச்சனாய் பெண் குழந்தை பிறந்திருந்தது. நான் குழந்தையை பார்க்க எங்கள் சின்னத்தம்பி(அவர் நிஜ பெயர் ரெங்கசாமி
கடைசியில்பிறந்ததால் சின்னத்தம்பியானார்) சித்தப்பாவோடு மிதிவண்டியில் மருத்துவமனிக்கு சென்றுகொண்டிருந்தோம்.. குண்டு ஆசாரி வீட்டினை கடக்கும் பொழுது மனிகண்டு ஆயிக்கு
ஒரு நல்ல பெற சொல்றா என்றார் சித்தப்பா..
அப்பொழுது நான் ஐந்தாவது படித்ததாய் ஞாபகம். எங்கள் வகுப்பில் இருந்த ரம்யாவை முயலு முயலு என்று அத்தனை ஆசிரியர்களும் அள்ளி கொஞ்சுவார்கள்.
அதற்கு மாறாய் யாரும் கண்டுகொள்ளபடாத தீபிகாவின் பெயரும் நினைவில் வந்தது. இரண்டு பெயர்களையும் சொன்னேன்.எனக்கும் கூட ரம்யா என்ற பெயரை வைப்பதில் தான் பிரியம்
இருப்பினும் மெட்ராஸ் இளஞ்சியம் பெரியம்மாவின் பரிந்துரையில் தீபிகா என்ற பெயரே அவளுக்கு சூட்டப்பட்டது..

அவளுக்கு பின் பிறந்த காரணத்தால் இரண்டாவது பெண்ணுக்கும் தீபிகா போன்ற சந்தத்தில் பெயர் வேண்டுமென்று சுதா சித்தியின் தங்கையும் இன்னபிறரும் திவ்யா என்ற பெயரினை
அவளுக்கு நாமகாரணம் செய்தார்கள். ஆகவே அந்த பெயருக்கும் நானே மூலம் ஆனேன்..
இப்பொழுது தான் புரிகிறது கலைச்செல்வி,நந்தினி,ராஜேஸ்வரி,மேனகா, என்ற வழக்கமான பெயர்களை எங்கள் பகுதியில் மாற்றியதன் பங்கு எனக்கும் உள்ளது என்று..

கடைக்கு செல்லும்  என் தந்தை வழக்கம் போல் மதிய உணவிற்காக இரண்டரை மணியளவில் வீட்டிற்கு வந்தார்..அந்த கோடை மாத்தத்தில் என்னை தவிர என் வீட்டு மற்றைய சிறுவர்கள்
எல்லாம் விருந்தாளி சென்றிருந்தனர்.

அன்றைய பொழுதில் என் சின்னத்தம்பி சித்தப்பா எங்கள் வீட்டுக்கூரையின் ஏறவாரத்தின் முன் பதட்டத்துடன் நின்ற அந்த சித்திரம் இன்னும் நெஞ்சில் மறையவில்லை...

அவர் என்  அப்பாவை நோக்கி அண்ணேன் திவ்யா செத்து போச்சான் அண்ணேன் என்றதும்..

எந்த திவ்யாடா என்று அதட்டலாய் கேட்டார் அப்பா..

சுதா மவ சின்னது தான் என்று கூறினார் சித்தப்பா...

எப்புடியாண்டி என்று ஒப்பாரியோடு திண்ணையிலிருந்த  கிழவி மாரடித்து கொண்டே கேட்டாள்...

வெள்ளெரிக்காய கடிச்சுகிட்டு தொட்டில கெடந்த புள்ளைக்கு தொனடையில வெள்ளரிக்கா சிக்கி செத்துபோச்சு என்று தேம்பலுடன் சொன்னார் சித்தப்பா....
சுதா சித்தி குழந்தை திவ்யாவை  தூக்கிக்கொண்டு ஏதோ திருமணத்திற்காய் பக்கத்து ஊருக்கு சென்றிருந்தாள்.. சென்ற இடத்தில் தான் இப்படி நடந்தது...

பிள்ளையின் அப்பா சந்திரன் சித்தப்பா வெளிநாட்டிலிருந்து போன்மேல போன்போட்டு புலம்பினார்  கொஞ்ச நேரத்தில் திவ்யா வீட்டிற்கு கொண்டு வரப்பட்டாள்..
முழுதாய் பால் குடித்துவிட்டு தூங்குவதை போல் அசையாமல் கிடந்தாள். உட்காரும் குழந்தையவள். உட்காந்து கொண்டே அம்ம அம்ம என்று துள்ளுவாள்..
வாயொழுக செர்லாக் தின்றதே நான் அவளை  கடைசியாய் பார்த்த ஞாபகம்..
லேசாக சிரிக்கவும் செய்தாள்... புள்ளைய கொண்டு போய் கொன்னுப்புட்டியேடி  என்று சுதாவை  கிழவி திட்டினாள்..
ஒரு சில மணிநேரத்தில் பச்ச புள்ள உடம்பு தாங்காது தூக்குங்கப்பா என்று ஒரு குரல் ஒழித்தது.. உடனே தொட்டில் கட்டி குழந்தை கிடத்தப்பட்டு எடுத்து செல்லப்பட்டாள்..
அம்மா மற்றைய சித்திகளெல்லாம் தொட்டிலை அழுதவாறே தொடர்ந்தனர். சோகத்தின் பிரக்ஞையற்று நான் இருந்தபோது  இனி திவ்யா வராதாடா என்று பக்கத்து வீட்டுபையன் கேட்டப்போது
கண்களில் நீர் தழும்ப சற்று வருத்தமாய் இருந்தது...
பின்னர் ஆண்டுகள் பல கடந்தபோது என் தாயின் கனவில் ஒரு சிறு பிள்ளை வருவதாயும்  திவ்யா தான் அது என்று குறிபார்த்ததில் உறுதி செய்யப்பட்டு.
இன்று வீட்டில் திவ்யா வணங்கப்படுகிறாள்..திவ்யா இருந்திருந்தால் எப்படி இருக்குமென்ற கற்பனையில் எனக்கு தோன்றிய முகவாக்கில் இன்று ஒரு பெண் தங்கையாய் கிடைத்திருக்கிறாள்..
ஆனால் அவளும் அத்துணை பாசமாய் இல்லை. திவ்யா இறந்தபோது நானிருந்தது போலவே...

//மணி
Friday, March 23, 2012

திருவாசகத் திருத்தலம் ஆவுடையார்கோயில் ஒரு பார்வை....

 தமிழகத்தின் கலை நயத்தினை பெரும்பாலும் பறைசாற்றியவை கோவிலும் சிற்பங்களுமேயாகும். இந்த வடிவில் பல கோவில்களும் சிற்பக்கொடங்களும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வந்தன இந்த வகையில் நான் மிகவும் கண்டு பூரிப்படைந்த ஒரு கோவிலை பற்றி தான் எழுதுகிறேன்..

ஆவுடையார்கோயில் ( திருப்பெருந்துறை ) புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து 13 கீ.மி தொலைவில் உள்ளது இவ்வூர்...
ஆவுடையார்கோயில் எனது ஊரிலிருந்து நாற்பது மைல் தொலைவில் உள்ளது இந்த ஊர்...

முதலில் எனக்கு இந்த கோவிலை பற்றி அவ்வளவு பரிட்சயம் இல்லை.. இடையில் எங்கள் கல்லூரியில் நான் மூன்றாமாண்டு படிக்கும் போது அறிமுகமான தங்கை அட்சயா புதுக்கோட்டை மாவட்டம் என்ற போது பக்கத்து ஊரென்று பழக ஆரம்பித்த போது தான் தெரிந்தது அவள் புதுகை மாவட்டம் ஆவுடையார்கோயில் என்று..

பின்னர் அவசரமாக இணைய தளங்களில் தேடிய போது ஆவுடையார்கோயில் பற்றி பல மெய் சிலிர்க்கும் தகவல்களை கிடைக்கபெற்றேன்..

பின் ஒரு நாள் நான் ஆவுடயார்கோயிலுக்கு செல்வதென்று முடிவெடுத்து பின் தனிமையில் சென்று பிரம்மித்துவிட்டு வந்தேன்..பிறகு எனக்கு தோழமையான தம்பி அரவிந்தனை துணைக்கு அழைத்து கொண்டு இன்னொருமுறை சென்றேன்.. அப்பொழுது தான் அவன் ஒவ்வொரு விசயங்களையும் விளக்கி கூறும்போது சற்றே அதிசயப்பட்டு போனேன்..
ஆவுடையார்கோயில் பழங்காலத்தில் திருப்பெருந்துறை என்று அறியப்பட்டிருக்கிறது.. பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையாகவும் சோழ நாட்டின் தெற்கு எல்லையாகவும் இருந்தது என்பதற்கு கீழ்காணும் கம்பரின் பாடலில் சான்று உள்ளது
கடல் கிழக்கு தெற்கு கரைபெரு வெள்ளாறு
குடதிசையில் கோட்டைக் கரையாம் - வடதிசையில்
ஏனாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம்
சோனாட்டிற் கெல்லையெனச் சொல்..
      என்றும்
வெள்ளா றதுவடக்காம் மேற்குப் பெருவெளியாய்
தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார
ஆண்ட கடல் கிழக்காம் ஐப்பத் தறுகாதம்
பாண்டிநாட் டெல்லைப் பதி

இந்த பாடலில் குறிப்பிடப்படும் வெள்ளாறு வடக்காம் என்று வருகின்ற சோழ நாட்டின் தெற்கு எல்லையாகவும் பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையாகவும் இருந்து சிறப்புப் பெற்ற அந்த வெள்ளாறு இன்றளவும் குன்றாச் சிறப்போடு விளங்குகிறது..
               
         சுமார் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த திருக்கோயிலினை திருவாசகம் அருளிய மாணிக்கவாசகரால் எழுப்பபட்டது. இங்கு தான் திருவாசகமும் எழுதப்பட்டது. இதனை மக்கள் திருவாசகத்திருவூர் என்றும், பூலோக கையிலாயம் ,சிவபுரம், சதுர்வேதிமங்கலம் என்றும் போற்றுவர். : மதுரை பாண்டிய மன்னனின் சபையில் அமைச்சராக இருந்த மாணிக்க வாசகர் மன்னன் உத்தரவுப்படி குதிரை வாங்க இப்பகுதிக்கு (திருப்பெருந்துறை) வருகிறார்.அப்போது இங்கு சிவாகமங்கள் ஒலிக்கும் ஒலி கேட்க அங்கு சென்று பார்க்கையில் ஞானகுருநாதர் ஒருவர் வீற்றிருப்பதைக் கண்டார். தன்னை ஏற்றுக்கொண்டு உபதேசமளிக்கும்படி மாணிக்கவாசகர் கேட்டுக் கொள்ள, குருவும் ஒப்புக்கொண்டார்.உபதேசம் கேட்டு சிவநிஷ்டையிலிருந்து கலைந்த மாணிக்க வாசகர் குரு இல்லாதது கண்டு சிவபெருமான்தான் குருவாக வந்தது என்று தெரிந்து கொண்டார்.உள்ளம் உருகி பாடினார்.குதிரை வாங்க கொண்டு வந்த பணத்தில் (இப்போதுள்ள)கோயில் கட்டினார். சிவதொண்டில் ஈடுபடலானார். குதிரை வராத செய்தி கேட்டு மன்னன் மாணிக்கவாசகரை பிடித்து சிறையில் அடைத்தார்.சிவபெருமான் நரிகளை பரிகளாக்கி(குதிரை) அவரே ஓட்டிக் கொண்டு மதுரை வந்து மன்னனிடம் ஒப்படைத்தார்.ஆனால் இரவிலேயே குதிரைகள் எல்லாம் நரிகளாகிப் போக மன்னன் மாணிக்க வாசகரை வைகை ஆற்றில் சுடு மணலில் நிறுத்தி தண்டிக்க வைகையில் வெள்ளம் வந்தது.கரையை அடைக்க சிவபெருமான் கூலியாளாக வந்து பிட்டு வாங்கி தின்று விட்டு வேலை செய்யாததால் பிரம்படி வாங்க அந்த அடி எல்லோர் முதுகிலும் விழ, வந்தது இறைவன் என்பதைத் தெரிந்து கொண்ட பாண்டிய மன்னன் மாணிக்க வாசகரின் காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டார். இந்த சிறப்பு வாய்ந்த திருவிளையாடற்புராண கதை நிகழ காரணமானது இக்கோயில் ஆகும்.
திபெத்தும் திருப்பெருந்துறையும்:
இமயமலையில் உச்சிக்கு அப்பால் அடிவாரமாக அமைந்தள்ள திபேத்தில் ஓங்கி வளர்ந்த மரங்களே இல்லை. அப்படி இருக்கின்ற மரங்களோ குறு மரங்களாக இரண்டரையடி உயரத்திற்கு மேல் வளருவதில்லை. இப்படி மரங்களே இல்லாத திபேத்தில் உள்ள புத்தர் ஆலயத்தை பெரிய பெரிய மரங்களைக் கொண்டு கட்டியிருக்கிறார்கள். அங்கே அது பெரும் வியப்பிற்கு உரியதாக விளங்குகிறது. இந்திய எல்லையில் இமயமலைச் சரிவில் அல்மோரா - காலபானி போன்ற பகுதிகளில் தான் பெரிய மரங்கள் உள்ளன. இங்கிருந்து கால் நடையாக இந்த இமயமலையைக் கடக்க ஒற்றையடிப் பாதை கூட சரியாக இல்லாத மலைப்பகுதியை பனிப்பாறைகளைக் கடந்து எப்படித்தான் இந்த மரங்களைக் கொண்டு வந்து புத்தர் ஆலயம் அமைத்தார்கள் என்பது விளங்காப் புதிராகும்.
அதே போல இந்த திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் வியக்கத்தக்க ஒன்றாகும். மலைகள் குன்றுகளே இல்லாத இந்தப் பகுதியில் வெறும் கற்களினாலே கோயில் அமைந்திருப்பதை நினைத்துப் பார்த்தால் வியக்காமல் இருக்க முடியாது. சிலை செய்ய வேண்டுமானால் அதற்கென்று தகுந்த நன்றாக தேற விளைந்த கற்களை சிற்பிகள் தேர்ந்தெடுப்பார்கள். கண்ட கண்ட பாறைகள் எல்லாம் சிலை செய்ய ஏற்றதல்ல என்று சிற்ப சாஸ்திரம் படித்த கலைவல்லார்கள் கூறுகிறார்கள். அப்படி சிலை செய்ய ஏற்ற பாறைகள் 100 மைல் சுற்று வட்டாரத்தில் இல்லை என்று தொழில் நுட்ப அறிஞர்கள் கூறுகிறார்கள். சுமார் 50 மைல்களுக்கு அப்பாலுள்ள திருமயம் திருக்கோகர்ணம் நார்த்தாமலை சித்தன்னவாசல் விராலிமலை போன்ற பகுதிகளில் உள்ள குன்றுகளில் விளைந்த பாறைகள் சிலை செய்யத் தகுதியற்றன என்றும் அதை ஜல்லிக் கற்களாக்கி பாதைக்குப் பரப்ப மட்டுமே ஏற்றது என்றும் சிற்பிகள் கூறுகிறார்கள். ஆனால் சுற்று வட்டாரத்தில் மலைகளே இல்லாதபோது சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்னால் பாதைப் போக்குவரத்துக்களே இல்லாத காலத்தில் வெறும் பாறைகளைக் கொண்டே பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது என்பது பிரமிப்பு மிக்கது...
இன்னும் இவ்வட்டார மக்கள் இந்த திருத்தளத்தை பூதம் கட்டியதையும் கூறுவதுண்டு காரணம் மனிதர்களால் கனவிலும்  கட்டமுடியாத வண்ணம் கட்டப்பட்டிருப்பதால் ஆகும்..
                                

ஒரு வீட்டிற்கு தாழ்வாரம் அமைக்கும்போது பனங்கை தேக்கு மரத்திலோ பக்கவாட்டுக் கைகள் அமைத்து அதனை இரும்புக் கம்பிகளால் இணைத்து அதன் மீது குறுக்குச் சட்டங்கள் இணைத்து அதன்மீது ஒடு வேய்வது வழக்கம். இதே போல கோயிலின் தாழ்வாரத்திலுள்ள கொடுங்கைகள் இழைத்துக் காட்டிக் கல்லைக் கவிதை பாட வைத்துள்ளார்கள்.
தேக்கு மரச்சட்டம் போல் இழைத்து அதிலே குறுக்கக் கம்பிகளும் நான்கு பட்டைகம்பிகளும் ஆறு பட்டைக் கம்பிகளும் உருண்டைக் கம்பிகளும் இணைத்துச் சேர்த்து அதிலே குமிழ் ஆணிப்பட்டை ஆணிகள் அறைந்திருப்பது போல எல்லாமே கல்லில் செய்து அதன் மீது மெல்லிய ஓடு வேய்ந்திருப்பது போல செய்திருப்பது சிற்பக்கலை என்றால் என்னவென்று அறியாதவர்கள் கூட வியக்கத் தக்க ஒப்பற்ற திறனாகும்.
ஒரு கல்லுக்கும் மறு கல்லுக்கும் எப்படி எந்த இடத்தில் இணை சேர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அமைக்கப்பட்டுள்ள இந்தத் தாழ்வாரம் எனப்படும் கொடுங்கைக்கூரை ஆனது மொத்தம் பதிமூன்றரை அடி நீளமும் ஐந்தடி அகலமும் இரண்டரையடி கனமும் உள்ளதாகும். இந்த இரண்டரையடி கனத்தை இப்படி தாழ்வாரக் கூரையாக்கி செதுக்கிச் செதுக்கி ஒரு அங்குல கன்னமுள்ள மேலோடு அளவிற்குச் சன்னமாக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆவுடையார்கோயிலை பார்வையிட வருகை தந்திருந்த அந்தக் காலத்திய மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த ஆங்கிலேயர் ஒருவர் தனது கைத்துப்பாக்கியால் இந்தக் கொடுங்கூரையை சுட்டுப் பார்த்து இருக்கிறார். அவரது கைத்துப்பாக்கிக் குண்டு பாய்ந்தவுடன் இந்த கொடுங்கைக் கூரை சுக்கு நூறாக சிதறி விழுந்துவிடவில்லை. வெடித்துச் சீறல் ஏற்படவில்லை. குண்டு பாய்ந்த இடம் எதுவோ அந்த இடத்தில் மட்டும் துப்பாக்கிக் குண்டின் அளவிற்கு மட்டுமே துளைத்துக் கொண்டு போய் இருக்கிறது. அந்த அளவிற்கு அந்தக் கூரை மென்மையும் தின்மையும் வாய்ந்ததாக அமைந்துள்ளதை இன்றளவும் சங்கீத மண்டபம் எனப்படும் தியாகராஜ மண்டபத்தில் காண முடியும். மேலும் இதே மண்டபத்தில் 10-15 வளையங்கள் கொண்ட ஒரே கல்லிலான கற்சங்கிலி செதுக்கப்பட்டு உயரத்தில் பொறுத்தித் தொங்க விடப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் அருகே இசைத்தூண்கள் உள்ளன இவற்றை தட்டினால் இசை எழுவது வியப்பு..


                           

பாண்டியர் - சோழர் – நாயக்க மன்னர்களும்:
இந்தக் கோயிலில் ஆனந்தசபை தேவசபை கனகசபை சிற்சபை நடனசபை பஞ்சாட்சரம் போன்ற மண்டப அமைப்புகள் உள்ளன.
இக்கோயிலினுள் கருவறைப் பகுதியை மட்டும் மாணிக்கவாசகர் கட்டியதாகவும் அதைத் தொடர்ந்து விக்ரம சோழபாண்டியர் (பார்த்திபன் கனவு என்கிற சரித்திர நாவலில் சொல்லப்படுகிற அதே விக்ரமாதித்யசோழன் தான்) மற்றும் சோழ மன்னர்கள் தஞ்சையை ஆண்ட நாயக்கர் மன்னர்கள் மகாராஷ்டிர மன்னர்கள் இராமனாதபுரம் சேதுபதி மன்னர் சிவகங்கை மன்னர் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் பாலைவன ஜமீன்தார் ஆகியோரால் அவ்வப்போது கட்டப்பட்டு ஆறு மண்டபங்கள் இணைத்துக் கோவிலாக ஆக்கி இருப்பது கவனிக்கத்தக்கது.


தேரின் சிறப்பு:
இங்குள்ள தேர் தமிழகத்திலுள்ள பெரிய தேர்கள் சிலவற்றில் ஒன்றாகும். திருவில்லிப்புத்தூர் திருநெல்வேலி திருவாரூர் காளையார்கோவில் ஆவுடையார்கோயில் ஆகிய ஊர்களில் உள்ள தேர்கள்தான் தமிழகத்தில் உள்ள கோயில்களின் தேர்களில் மிகவும் பெரிய தேராகும். இந்த தேர்ச் சக்கரத்தின் குறுக்களவு மட்டும் 90 அங்குலம் ஆகும். சக்கரத்தின் அகலம் 36 அங்குலமாகும்.
50 முதல் 500 பேர் வரை கூடினால் எந்தத் தேரையும் இழுத்து விடலாம். ஆனால் இந்த ஆவுடையார்கோயில் தேரை இழுக்க சுமார் 5000 பேர் கூடினால்தான் இழுக்க முடியுமாம். இதிலும் அதன் அடங்காத் தன்மை வெளிப்படுகிறது.
50 ஆண்டுகள் ஆகியும் இந்த ஆவுடையார்கோயில் தேர் அப்படியே நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.கோவில் விமானம்:

சிதம்பரம் நடராசர் கோவிலில் பொன்னோடு வேயப்பட்ட விமானம் உள்ளது. அதேபோல இங்கு செப்போடு வேயப்பட்ட விமானம் இருக்கிறது. மரங்களில் உறுதி வாய்ந்தது தேக்கு மரம் என்பது நமக்குத் தெரியும். தேக்கு மரங்கள் நு}ற்றாண்டுக் கணக்கில் கெட்டுப் போகாமல் தாங்கும் சக்தி படைத்ததாகும். ஆனால் இந்த தேவதாரு மரமோ ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தாங்கும் சக்தி பெற்றதாகும். இந்த தேவதாரு மரம் இந்தியாவில் இல்லை என்றும் பர்மாவில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சிவபெருமான் வாசஸ்தலமான கைலாயத்தில் தேவதாரு மரம் இருப்பதாக புராணங்கள் வாயிலாக நாம் அறிய முடிகிறது. அந்தத் தேவதாரு மரத்தின் மீது இந்தச் செப்போடு வேயப்பட்ட விமானம் உள்ளது. இந்த தேவதாரு மரத்தின் பலகைச் சட்டத்தை இன்றுபார்த்தாலும் நேற்று அறுத்து இன்று வழவழப்பேற்றி பலகையாக்கி இணைக்கப்பட்டது போல எண்ணெய் செறிந்துள்ள பளபளப்பைக் காணலாம். இது 5 ஆயிரம் ஆண்டுகள் தாங்கும் சக்தியை படைத்தது என்றும் கூறப்படுகிறது.
கவிபாடும் கற்சிலைகள்:
உயிர்த்துடிப்பு ஒன்றைத் தவிர மற்ற எல்லா அம்சங்களும் இங்குள்ள சிலைகளில் உள்ளன என்று கூறியுள்ளார்கள். அந்த அளவிற்கு ஈடு இணையற்ற கவிபாடும் கற்சிலைகள் இங்கே ஒவ்வொரு தூண்களிலும் நிறைந்து விளங்குகின்றன. அங்குலம் உயரம் உள்ள ஆயிரங்கால் மண்டபம் முதல் 12 அடி உயரம் உள்ள அகோர வீரபத்திரர் ரணவீரபத்திரர் சிலை வரை சிற்பக்கலை தேனடை போல செறிந்து கிடக்கிறது. இங்குள்ள எல்லா உருவச்சிலைகளிலேயும் காலில் உள்ள நரம்பு கூட வெளியே தெரிகின்றன. சிலைகளின் தலைமுடி கூட சன்னமாக அளந்து நீவி விடப்பட்டுள்ளன.
பஞ்ச கல்யாணிக் குதிரை:
நரியைப் பரியாக்கியது இத் தல புராணத்தின் பெருமையாகும். இந்த ஆவுடையார் கோயிலிலே தாவும்பரி என்று ஒரு குதிரை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அந்தக் குதிரை மீது சிவபெருமான் அமர்ந்து வருவது போல செய்யப்பட்டுள்ளது. குதிரையின் அமைப்பு ஒவ்வொன்றாய்ப் பார்த்தால் உயிர்க்குதிரையோ என்று தோன்றும். குதிரைகளிலே சிறந்ததும் அழகு வாய்ந்ததும் பஞ்ச கல்யாணிக் குதிரையாகும். பஞ்ச கல்யாணி என்றால் அந்தக் குதிரையின் நான்கு கால்களிலும் அதன் கனுக்காலிலும் வெள்ளை நிறம் இருக்கும். நெற்றியிலும் பொட்டு வைத்தாற்போல வெள்ளை நிறம் இருக்கும். இவ்வாறு ஐந்து இடத்தில் வெள்ளை நிறம் இருக்கும் குதிரை பஞ்ச கல்யாணி குதிரையாகும். சிவபெருமான் தாங்கி நிற்கின்ற இங்குள்ள குதிரைச் சிலையிலும் மேற்சொன்ன ஐந்து இடங்களிலும் வெள்ளை நிறம் இருக்கின்றன. அது மட்டுமல்ல அந்தக் குதிரையின் பற்களும் வெண்மையான கற்களால் செதுக்கப்பட்டுள்ளது.
வேடுவச்சி : இந்தக் கோயிலுக்குள் வேடுவச்சி எனப்படும் மலைக்குறத்தியின் சிலை ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஓலையினால் செய்யப்பட்டது போன்ற ஒரு கூடையினை இடுப்பில் வைத்து கையில் இடுக்கிக் கொண்டு குறி சொல்ல வருகின்ற குறத்தி போல அமைந்துள்ளது அச் சிலை.
இந்தச் சிலையை இந்தக் கோயிலின் செக் போஸ்ட் என்று சொன்னால் கூட பொருந்தும். இந்தச் சிலையை யார் பார்த்தாலும் பார்த்தவர்கள் அந்த இடத்தை விட்டு எளிதில் அகல மாட்டார்கள். தன்னிலை மறந்து அந்தச் சிலையையே சுற்றி வருவார்கள். தோள் கண்டார் தோளே கண்டார் என்று கம்பர் கூறியதைப் போல இந்த சிலை அழகில் மயங்கியவர்கள் ஆடைகண்டார் ஆடையே கண்டார் கூடை கண்டார் கூடையே கண்டார் என்று அச்சிலையின் ஒவ்வொரு அங்குலத்தையும் ரசிப்பதிலேயே மனம் பறிகொடுப்பார்.

"எனக்கே தண்ணி காட்டுறியா?' : யாராவது ஒருவரை ஏமாற்றினால், "என்ன தண்ணி காட்டுறீயா?' என்பர். இந்த "வழக்கு' எப்படி வந்தது என தெரிந்து கொள்ளுங்கள். ஆவுடையார் கோயில் பகுதி மக்களின் நிலத்தை குறுநில மன்னன் ஒருவன், பறித்துக் கொண்டான். அவர்கள் பேரரசரிடம் முறையிட்டனர். மன்னனோ, அந்த நிலம் தன்னுடையது என்று வாதாடினான். அது மக்களுடையது என்பதற்கு ஏதாவது சாட்சி இருக்கிறதா என்று கேட்டான்.

மன்னனின் செல்வாக்கிற்கு முன்னால், எதுவும் செய்யமுடியாத மக்கள் சிவபெருமானை நாடினர். உண்மையை வெளிக்கொணர உன்னைத் தவிர வேறு சாட்சியில்லை என மனமுருகி வணங்கினர். சிவன் பேரரசரிடம் மாறுவேடத்தில் சென்றார். குறுநில மன்னனை அழைத்து, ""மன்னா! உன் நிலம் எப்படிப்பட்ட தன்மையுடையது?'' என்று கேட்டார். அதற்கு மன்னன், ""அது வறண்ட பூமி'' என்றான். சிவன் மறுத்தார். ""பேரரசரே! அது செழிப்பான நிலம் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உண்டு. நிலத்தை தோண்டுங்கள். தண்ணீர் வரும்,'' என்றார். அதன்படியே நிலத்தை தோண்ட நீர் வெளிப்பட்டது. குறுநிலமன்னன் தலை குனிந்தான். மக்களிடமே நிலத்தை ஒப்படைத்தார் பேரரசர். சிவன் தண்ணீர் காட்டிய அந்த இடம், இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் இருக்கிறது. அப்பகுதியை, "கீழ்நீர்காட்டி' என்று சொல்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை, பஞ்சாட்சர மண்டபத்தின், மேல் விதானத்தில் ஓவியமாக வரைந்துள்ளனர்.இப்போ தெரிஞ்சுதா? நம்ம சிவன் தான் முதன் முதலில் "தண்ணி காட்டியவர்' என்று.
தட்சனின் யாகத்திற்கு சிவனை மீறிச் சென்றதற்கு மன்னிப்பு பெறுவதற்காக, அம்பாள் இத்தலத்தில் அரூப வடிவில் தவம் செய்தாள். எனவே, இங்கு அம்பாளுக்கும் விக்ரகம் இல்லை. அவள் தவம் செய்த போது, பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடக்கிறது. 

இந்த பாதத்தை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, கண்ணாடியில் பாதம் பிரதிபலிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவளது சன்னதி எப்போதும் அடைத்தே இருக்கும் என்பதால், சன்னதி முன்புள்ள ஜன்னல் துவாரம் வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும்.                           

திருவிழா : ஆனித் திருமஞ்சனம் - 10 நாட்கள் - 50 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். மார்கழி திருவாதிரை (திருவெம்பாவை உற்சவம் - 10 நாள் - 50 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். இந்த இரண்டு திருவிழாக்கள்தான் மிக முக்கியமானவை.இவற்றுள் ஆனிமாத உற்சவம் மகத்தானது.மாணிக்கவாசகரை முதன்மைப்படுத்தி இத்திருவிழாக்கள் நடைபெறும்.சுவாமிக்கு உற்சவமில்லாதபடி மாணிக்கவாசகருக்கு நடப்பதால் இதனைப் பக்தோத்சவம் என்று நினைக்க கூடாது.மாணிக்கவாசகர் சிவமாகவே விளங்குவதால் இதனை பிரம்மோற்சவமாகவே கூறவேண்டும்.திருவிழாக்காலங்களில் இடபம், திருத்தேர் முதலான வாகனங்களில் மாணிக்கவாசகர் திருவுலா வருகிறார். கார்த்திகை கடைசி சோம வாரம்(திங்கள் கிழமை) மிக மிக விஷேசம் ஆடிவெள்ளி விஷேசம் - தை வெள்ளி - ஆனி மகம் தேரோட்டம், சிவராத்திரி, பங்குனி உத்திரம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, நவராத்திரி, ஆவணிமூலம் முதலான நாட்களில் சுவாமிக்கு விசேச பூஜைகள் நடைபெறும்.


தலவிருட்சம் : தியாகராஜ மண்டபத்துக்கு அப்பால் வடமேற்கு மூலையில் வெளிமதிலை ஒட்டினாற்போல் அமைந்த திருமாளிகைப்பத்தியில் தலவிருட்சமான குருந்த மரங்கள் இரண்டு உள்ளன.இவ்விருட்சங்களை வலம் வருவதற்கு மேடையில் இடைவெளி இருக்கிறது.இப்பிரகாரத்தின் மூலையில் மடைப்பள்ளி இருக்கிறது.

இத்தலத்தில் காணவேண்டிய அபூர்வ சிற்பங்கள் (உலகப்புகழ்பெற்றவை)

1. டுண்டி விநாயகர் சிற்ப உருவம்

2. உடும்பும் குரங்கும்

3. கற்சங்கிலிகள் - சங்கிலியின் நுனியில் பாம்பு ஒன்று பின்னிக்கொண்டு தலையினைக் காட்டுவது

4. இரண்டே தூண்களில் ஓராயிரம் கால்கள்

5. 1008 சிவாலயங்களில் உள்ள இறைவன் இறைவியர் திருவுருவங்கள்

6. பலநாட்டுக் குதிரைச் சிற்பங்கள்

7. 27 நட்சத்திர உருவச் சிற்பங்கள்

8. நடனக்கலை முத்திரை பேதங்கள்

9. சப்தஸ்வரக் கற்தூண்கள்

10. கூடல்வாய் நிழல் விழும் பகுதி பசுமாட்டின் கழுத்து போன்று காணப்படுதல்.

நந்தி, பலி பீடம் இல்லாத சிவன் கோயில், சுவாமி, அம்பாளுக்கு உருவம் கிடையாது.லிங்கம் கிடையாது.அடிப்பகுதியான ஆவுடை மட்டுமே உண்டு.அம்பாளுக்கு திருப்பாதங்கள் மட்டுமே உண்டு. திருவிளையாடற் புராணத்தில் சிவபெருமான் நரியை பரியாக்கிய கதை நடந்த தலம். மாணிக்க வாசகருக்கு சிவபெருமானே குருவாக வந்து உபதேசம் செய்த சிவதலம்....
நன்றி: விக்கிபீடியா மற்றும் புலவர் அறந்தை திருமாறன்
Tuesday, January 31, 2012

விளம்பரங்கள் ....
   வெகு நாட்களாகவே விளம்பரங்களின் மீதும் அவற்றை பற்றியும் எழுதி விட வேண்டும் என்ற எண்ணம் எனக்கிருந்தது..விளம்பரங்கள் நவீன கால உலகிலன் தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கியமான விசயமாக கருதப்படுகிறது.பொருள்களை வணிக ரீதியாக விளம்பரப்படுத்தும் முறை பண்டைய காலத்தில் இருந்தே வழக்கில் இருந்திருக்கிறது. கிரேக்கர்களும், எகிப்த்தியர்களும் தங்களது பொருள்களை விளம்பரப்படுத்த அட்டைகளில் எழுதி பிரசூரித்தனர்.வாணிபத்திற்கு மட்டுமல்ல போர் அறிவிப்பு , போர் சமாதானம், என்பதற்கெல்லாம் கூட விளம்பரங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள்..இன்றைக்கும் வணிகம் இல்லாமல் மற்ற பல விசயங்களுக்கும் விளம்பரத்தை பயன் படுத்துகிறார்கள் , உதாரணமாய் திருமண பதாகைகளில் ஆரம்பித்து அரசியல் வாதிகளின் வரவேற்பு விளம்பரங்கள் வரை நீள்கிறது( ஏன் வளர்மதி வயசுக்கு வந்ததை கூட )..
இப்படி பட்ட பன்முகத்தன்மையை கொண்டுள்ள விளம்பரத்திற்கென்றே தனியே பாடப்பிரிவுகளும் பட்டம் மற்றும் பட்டைய படிப்புகளும் துவங்கப்பட்டுள்ளது..
இந்த நூற்றாண்டின்  இன்றி அமையாத விசயமாய் இருக்கும் இந்த விளம்பரத்தின் மீது மக்களுக்கும் மக்களின் மீது விளம்பரத்திற்கும் இருக்கும் தொடர்பு மற்றும் தாக்கத்தை பற்றி தான் இதில் நான் கூறவிருக்கிரேன்.
இன்றைய சூழலில் ஒரு பொருளை தயாரிப்பதற்கு ஆகும் செலவை விட மூன்று மடங்கு அதிகமான செலவு அதனை விளம்பரப்படுத்துவதற்கு ஆகிறது என்று ஆய்வுகள் சொல்கிறது. அப்படி என்னதான் இந்த விளம்பரங்கள் மக்களிடம்  மாயஜாலம்  செய்கின்றன?? என்ற கேள்வி அடிக்கடி எனக்குள் தோன்றியிருக்கிறது பெரும்பாலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் விளம்பரங்களில்  90% ஆனவை  குழைந்தைகளை குறிவைத்தே எடுக்கப்படுகிறது. இரண்டு படங்களில் கிடைக்கும் சம்பளம் ஒரு கதாநாயகனுக்கு ஒரு விளம்பரத்திற்கு மட்டும் கொடுக்கப்பட்டதாக  சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். நடிகைகளை பொருத்தளவில் சற்று மார்க்கெட் குறைந்ததும் அவர்களை  ஜொலிக்குது பள பளக்குது என்று நகை மற்றும் ஜவுளி கடை விளம்பரங்களில் காண முடிகிறது.இன்னும் சில தொலைக்காட்சி விளம்பரங்களில் ஒரு பரவலான வசனங்களை காண முடிகிறது அதாவது பொருளின் பெயரை சொல்லி “ஒவ்வொரு அம்மாவின் சாய்ஸ்“ என்பதும் “டாக்ட்டர்களால் பரிந்துரைக்கப்பட்டது” என்றெல்லாம் சொல்வார்கள் இடையில் “ஹேப்பாங் ஊப்பாங் ஜப்பாங்” , “டோயின்” போன்றவை   வேறு. சமீபத்தில் ஒரு நகைக்கடை புரட்சி போராட்டம் நடத்துவதாக  ஒரு விளம்பரம் ஓடியது நான் கூட ஏதோ அந்த நிறுவனம் முல்லை பெரியாருக்காகவோ,கூடங்குள அணு உலை எதிப்பிற்கோ தனது உணர்வை பதிவு செய்வதாக நினைத்தேன் கடைசியில் பார்த்தால், நகை வாங்குவதற்காம்; எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க என்று நான் வடிவேலு பாணியில் தலை கவிழ்ந்தது தான் மிச்சம். அதிலும் இந்த விளம்பர விசயத்தில்  சீரியல் பார்ட்டிகளின் நிலைதான் அதனினும் கொடுமை ச்சே கங்காவோட மாமியார் அம்மிக்கல்ல தூக்குறப்ப விளம்பரம் போட்டானுகளே என்று புலம்புவார்கள். 
விளையாட்டு வீரர்களை பற்றி சொல்லவே வேண்டாம் .தோனிக்கு 2025 ஆம் ஆண்டு வரை விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாய் கேள்விப்பட்டேன். இந்த அளவிற்கு விளம்பரத்துறை பூதாகரமாய் வேற்பரப்பி நிற்கிறது.
ஒரு பொருளையோ இல்லை ஒரு நிறுவனத்தையோ வணிக ரீதியாய் வெற்றிகரமாய் முன்னெடுத்து செல்ல விளம்பரங்கள் அவசியப்படுகிறது.
இந்த விளம்பரங்கள் என்பது ஒரு கட்டத்தை மீறும்போது அது மக்கள் மீது திணிக்கப்படுவதை போல் ஆகிறது. தொலைக்காட்சிகளில் தான் வீட்டுக்குள்  வந்து இம்சிக்கிறார்கள் என்றால் பணம் கொடுத்து திரையரங்குகளுக்கு   சென்றால் அவ்வளவுதான் படம் ஆரம்பிக்கும் போதும் இடைவேளைகளிலும் போட்ட விளம்பரத்தையே இரண்டு மூன்று முறை திரும்ப திரும்ப காட்டி வெறுப்பேத்துவார்கள். இதிலிருந்து தப்பிக்கவே சிலர் வெளியில் சென்று இரண்டு மூன்று தம்களை ஊதித்தள்ளுவார்கள். திரையரங்கிற்குள் காதலர்கள் பாடுதான் பரவாயில்லை என்று தோன்றும் ஏனெனில் படம்; விளம்பரம், எதுவும் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. என்னை போன்ற புகைக்க தெரியாத  மற்றும் காதலி இல்லாத ஆட்களும், பெண்களும் தான் அந்த நேரங்களில் பாவம். சரி சற்று ஒதுங்கி நின்று படம் போடும் வரை வெளியில் நின்று கொண்டிருப்போம் என்றால்  வரும் பாருங்கள் அழைப்பு ஸார் நாங்க இந்த பாங்குல இருந்து பேசுறோம் லைப் டைம் இன்சூர் பண்ணிக்கோங்க என்று எரியிற நெருப்பில் எண்ணையை ஊத்துவார்கள்..
இவற்றோடு இணையத்தில் இருக்கிற விளம்பர தொல்லை தான் தாங்க முடிவதில்லை, முக்கியமான ஒரு வலைப்பதிவில் சுவாரசியமாய் படித்துக்கொண்டிருக்கையில் அதை மறைத்துக்கொண்டு வரும் விளம்பரத்தை கண்டதுனே கணினியை உடைத்துவிட தோன்றும் அப்பா உதைப்பாரு என்று பச்சி சொன்ன பின் அந்த முயற்சி நிறுத்திவைக்கப்படும் .சில நேரங்களில் அசைவ விளம்பரங்கள் வேறு எட்டி பார்க்கும்.இந்த தொல்லையாலேயே எனது வலைப்பதிவில் adsenseஐ நிறுத்திவிட்டேன்.
பெரு நகரங்களில் புதியதாய் வருபவர்கள் முதலில் கண்டு பயப்படுவது ,நடுங்குவது எல்லாமே பெரும்பாலும் இந்த  ராட்சத விளம்பர அட்டைகளை பார்த்து தான்.
        இதெல்லாம் கூட பரவாயில்லை தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை சமயங்களில் என் சொந்த ஊரான ஊரணிபுரம் (தஞ்சை மாவட்டம்), அதை சுற்றியுள்ள கறம்பக்குடி,பட்டுக்கோட்டை,அறந்தாங்கி, போன்ற குறுநகரங்களில் குழாயினை கட்டி பண்டிகைக்கும் ஒரு பத்து பதினைந்து நாட்கள் முன்னதிலிருந்தே விளம்பர  அளப்பரையை ஆரம்பித்துவிடுவார்கள் இடை இடையே அனுமதி தந்த அந்தந்த சரக காவல் துறையினருக்கும் நன்றிகளை ஒலிக்குழாய் வெளிதள்ளும்.
நமது அரசியல் தலைகளை பற்றி சொல்லவே வேண்டியது இல்லை. தேர்தல் நேரங்களில் வீட்டு சுவர்கள் என்று ஆரம்பித்து இதோ தலைவர் வந்து கொண்டே இருக்கிறார் மணித்துளிகளில் மேடையில் தோன்றுவார்  என்று கூறி  கூட்டம் களைந்து விடாமல் இருக்க சொல்லப்படும்  வசனங்கள் எல்லோரும் அறிந்த விளம்பரமே பின்  தேர்தல் முடிந்ததும் மேம்பாலங்களின் பக்கவாட்டுக்களில்  சும்மா வரைந்து தள்ளி விடுவார்கள். கடந்த முறை தேர்தல் ஆணையம் எடுத்த முடிவால் பல  வீட்டு சுவர்கள் தப்பித்தன. இவ்வளவு சக்தி வாய்ந்த விளம்பரத்துறை ஒரு எல்லையோட இருந்தால் நலமே அதைவிடுத்து மேலோங்கினால் அது திணித்தல் போலாகி மக்களிடம் அதிருப்த்தியை ஏற்படுத்திவிடும்.
 எனவே விளம்பரங்கள் அளவோடும் அழகோடும் இருக்க வலியுறுத்தி விளம்பரப்படுத்துவோமாக.
//மணி....